ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வீரர்களின் ஜெர்சி நிறத்தை மாற்றினாலும் போட்டியின் முடிவு மாறவில்லை. தொடர்ந்து ஆறாவது போட்டியாக அந்த அணிக்கு தோல்வில்வியே பரிசாக கிடைத்திருக்கிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்து விட்டது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 50 ரன்களை சேர்த்தார். ஃபில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். 223 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் இந்த தோல்வியால் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

படக்குறிப்பு, ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய பில் சால்ட்.

பில் சால்ட் அதிரடி தொடக்கம்

கொல்கத்தா அணியில் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைன், ஆர்.சி.பி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் யார்க்கரை சமாளிக்க முடியாமல் திணறினார்.

15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார் சுனில் நரைன். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷியும் 3 ரன்களை மட்டுமே எடுத்து உடனே வெளியேறியது பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்தது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார் பில் சால்ட். லாக்கி பெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 6, 4, 4, 6, 4, 4 என்று 28 ரன்கள் விளாசினார் பில் சால்ட். ஆனால் அடுத்த ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார்.

வெறும் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 48 ரன்கள் எடுத்திருந்தார் பில் சால்ட். இதில் தான் எதிர்கொண்ட 14 பந்துகளில் 10 பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார்.

பவர்பிளேவுக்கு பின்னரும் கேகேஆர் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் – வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். வெங்கடேஷ் ஐயர் 8 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து சிறிய கேமியோ ஆடினார்.

ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாகச் செல்வதை உணர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக விளையாடினார். 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

ரஸ்ஸல் மற்றும் ரமன்தீப் சிங் சேர்ந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் கேகேஆர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன் குவித்தது.

ரஸ்ஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும் குவித்தனர். இது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் யாஷ் தயாள் மற்றும் கேம்ரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

படக்குறிப்பு, ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.

கொல்கத்தாவின் சிறப்பான திட்டம்

கொல்கத்தா இன்னிங்ஸை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த பில் சால்ட் கொடுத்த அதிரடியான தொடக்கம் தந்த பிறகு மிடில் ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுமையாக ஆடி இன்னிங்சை வலுவாக கட்டமைத்தார். இறுதியாக களமிறங்கிய ரமன்தீப் சிங், அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 222 ரன்களுக்கு உயர்த்தினார்.

ரமன்தீப் சிங் உள்ளே வந்தபோது கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரமன்தீப் சிங். ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி விளாசி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

படக்குறிப்பு, பெவிலியன் திரும்புவதற்கு முன்பாக நடுவர்களிடம் கலந்துரையாடும் விராத் கோலி.

விராத் கோலியின் அவுட் குறித்த சர்ச்சை

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராத் கோலி, டூ பிளெசிஸ் களமிறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடியாகத் தொடங்கிய ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விடைபெற்றார் விராத் கோலி. ஆனால் அவர் ஆட்டமிழந்தபோது வீசப்பட்ட பந்து நோ பால் என சமூக ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. நடுவர்களின் முடிவுக்கு பெங்களூரு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அடுத்ததாக 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார் டூ பிளெசிஸ். ஆர்.சி.பி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, வில் ஜேக்ஸும் ரஜத் பட்டிதரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.

கோலி அவுட்டில் என்ன சர்ச்சை?

அதிக ரன்களை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணிக்கு கோலி அதிரடி தொடக்கம் கொடுத்திருந்தார். வெறும் 7 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை சேர்த்திருந்த அவர் அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹர்ஷித் ராணா ஃபுல்டாஸாக வீசிய பந்தை கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, பந்து அவரது பேட்டில் பட்டு ராணாவிடமே கேட்சாகிப் போனது. உடனே நடுவர் அவுட் கொடுத்துவிட்டாலும் கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாடவில்லை. மறுபரிசீலனையில், பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு கோலி அவுட் என்ற முடிவு திரும்பப் பெறப்படலாம் என்ற சந்தேகம் இருந்ததே காரணம்.

பந்து கோலியின் இடுப்பு உயரத்திற்கும் மேலே சென்றதால் அது நோபாலா என்று பரிசீலிக்கப்பட்டது. ஹாக்ஐ தொழில்நுட்பம் மூலம் பந்து செல்லும் கோணத்தையும் விராட் கோலி அதனை எதிர்கொண்ட விதத்தையும் நடுவர்கள் ஆய்வு செய்தனர். இடுப்பு உயரத்திற்கு மேலே நோபால் என்ற அறிவிப்பு, வீசப்பட்ட பந்தானது கிரீஸில் பேட்ஸ்மேனுக்கு இடுப்பு உயரத்திற்கு மேலே வந்தால் மட்டுமே பொருந்தும். மாறாக, இந்த விஷயத்தில் கோலி கிரீஸை விட்டு வெளியே இறங்கி வந்து பந்தை எதிர்கொண்டதால், பந்தின் கோணத்தை நடுவர்கள் ஆய்வு செய்ததில், பந்தின் கோணம் தாழ்வாக இருந்ததால், அது பேட்டிங் கிரீசை எட்டுகையில் உயரம் குறைந்துவிடும் என்று ஹாக்ஐ தொழில்நுட்பம் காட்டியது. இதனால் விராட் கோலி அவுட்டை நடுவர் உறுதி செய்தார். அவரோ அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் காலி

இந்த ஜோடி கேகேஆர் அணியின் பலமான சுழற்பந்துவீச்சாளர்களை போட்டு நொறுக்கியது. இரு வீரர்களும் அரைசதத்தை பதிவு செய்தனர். அந்த நிலையில், கேகேஆர் அணி 12வது ஓவரில் ரஸ்ஸலை பந்துவீச அழைத்தது. இது கேகேஆர் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நன்றாக செட் ஆகியிருந்த வில் ஜோக்ஸ் மற்றும் கரன் சர்மா ஆகிய இருவரும் அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். அதேபோல், நரைன் வீசிய 13வது ஓவரில் கிரீன் மற்றும் லோம்ரோட் இருவரும் ஆட்டமிழக்க ஆர்சிபி தடுமாற தொடங்கியது.

137 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த பெங்களூரு அணி, 18 ரன்கள் இடைவெளியில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்து மீண்டும் தடுமாறத் தொடங்கியது.

ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, மறுபுறம், இதுவரையிலான ஆட்டங்களில் அதிரடி காட்டி எதிரணிகளை திணறடித்த தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தது. அவரும் தனது பங்கிற்கு அடுத்தடுத்து சிக்சும் பவுண்டரியுமாக விளாசினார்.

ஒருகட்டத்தில் பெங்களுரு அணி வெற்றிபெற 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்று இருந்தது. ஆட்டத்தை ஆர்.சி.பி. அணிக்கு சாதகமாக முடித்துவைப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், கேகேஆர் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்சல் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

படக்குறிப்பு, களத்தில் தினேஷ் கார்த்திக் இருந்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

பரபரப்பான இறுதி ஓவர்

கடைசி ஓவரில், 6 பந்துகளில் ஆர்.சி.பியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் நின்றது கரண் சர்மா. கொல்கத்தாவுக்காக கடைசி ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் கரண். 2வது பந்து டாட் பால். பந்து பேட்டின் நுனியில் உரசியிருந்தாலும் அது தரையைத் தொட்டு கீப்பர் வசம் சென்றதால் கொல்கத்தாவுக்கு கேட்ச் வாய்ப்பு கிடைக்கவில்லை.

3வது பந்தை அவுட் சைட் ஆஃபில் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார் ஸ்டார்க். அதையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் கரண். 4வது பந்திலும் சிக்ஸர் விளாசினார் கரண். ஈடன் கார்னனில் இருந்த ஆர்.சி.பி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். வெற்றி கைக்கு எட்டிவிட்டதாக அவர்கள குதூகலித்தனர்.

இப்போது ஆர்.சி.பிக்கு 2 பந்துகளில் 3 ரன் மட்டுமே தேவை. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை லோ ஃபுல்டாசாக ஸ்டார்க் வீச, அதை கரண் ஓங்கி அடித்தார். ஆனால் அது நேராக ஸ்டார்க்கின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலம் பெங்களூரு ரசிகர்களின் உற்சாகத்தை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டார் மிட்செல் ஸ்டார்க்.

கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவை. 2 ரன்களை எடுத்தால் ஆட்டம் டிராவாகி சூப்பர் ஓவருக்குச் செல்லும். கடைசி வீரராக ஆடுகளத்திற்கு வந்த ஃபெர்கியூசன், பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சிக்க, கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்ட் டைவ் அடித்து ஸ்டம்புகளை தகர்க்க, ஆர்.சி.பியின் வெற்றியும் கானல் நீராகிப்போனது.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம், Sportzpics

படக்குறிப்பு, கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்டின் அற்புதமான டைவ் பெங்களூரு அணியின் தோல்வியை உறுதி செய்தது.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஆர்.சி.பியின் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோற்றிருப்பது இதுவே முதல்முறை.

நடப்பு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சோதனையாக அமைந்திருக்கிறது. டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரூ அணி நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. இதர போட்டிகள் அனைத்திலுமே தோல்வி.

கொல்கத்தாவுடனான ஆட்டத்தையும் சேர்த்து, தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலிலும் ஆர்.சி.பி கடைசி இடத்தில் உள்ளது.

ஆர்.சி.பி. அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணி ஒரே ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். அத்துடன், மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவும், ரன் ரேட்டும் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஆர்.சி.பி. அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.