தொடர் பின்னடைவுகளை ம.தி.மு.க சந்திக்கக் காரணமான வைகோவின் மோசமான முடிவுகள்

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம், FACEBOOK

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன

ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம்.

மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது.

தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது.

வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின.

இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய – மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார்.

இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள்.

காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர்.

இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர்.

இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ.

மதிமுகவும் பம்பரச் சின்னமும்

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை.

முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன.

இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர்.

ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது.

மீண்டும் திமுகவுடன் கூட்டணி

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது.

எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது.

கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ.

இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ.

முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ.

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம், வைகோ

பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு.

இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ.

அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் ‘வைகோ’, ‘வைகோ’ என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ.

வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ.

அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

பட மூலாதாரம், Getty Images

தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது.

இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது.

ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது.

ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன?

ம.தி.மு.கவுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்படுவது ஏன்

ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

“வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்,” என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

“அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது,” என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

“வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது,” என்கிறார் குபேந்திரன்.

தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும்.