இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன், குறையும் சேமிப்பு – என்ன காரணம்? நாட்டிற்கு என்ன பாதிப்பு?

இந்திய குடும்பங்களின் கடன் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியா பாரம்பரியமாகவே, தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை எதிர்காலத்திற்காக சேமிக்கும் மக்கள் நிறைந்த நாடாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம் தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் நிகர உள்நாட்டு சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.

ஒரு குடும்பத்தின் கடன்களை அதன் மொத்த சொத்து மற்றும் முதலீடுகளில் இருந்து கழித்தால், அது நிகர குடும்ப சேமிப்பு எனப்படும்.

கடந்த 2023ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அந்த சேமிப்பு 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2022ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக இருந்தது. இந்தச் சரிவு மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்று என பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இதே காலகட்டத்தில், உள்நாட்டுக் கடனும் சீராக அதிகரித்துள்ளது. வருடாந்திர கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 1970க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச அளவு.

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக கடன் வாங்குவதால், அவர்களின் சேமிப்பு குறைந்து வருகிறது. அதிகப்படியான கடன் வாங்கும் சந்தர்ப்பங்களில் குடும்பம் எதிர்கொள்ளும் சிரமம் என்னவென்றால், அவர்கள் வாங்கிய கடனையும் அதன் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கு அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை செலவிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், குடும்பத்தில் சேமிப்பிற்காக என மிகக் குறைந்த பணமே மீதம் இருக்கும்.

கடன் அதிகரிப்பது ஏன்?

அதிகரிக்கும் இந்தியர்களின் கடன்

பட மூலாதாரம், AFP

மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் உடன் பணிபுரியும் பொருளாதார நிபுணர் நிகில் குப்தா, இந்திய மக்களின் குடும்பம் சார்ந்த கடன்களில் பெரும்பகுதி அடமானம் இல்லாக் கடன்கள் என்று கூறுகிறார். இதில் பாதிக்கும் மேற்பட்ட கடன்கள் விவசாயம் மற்றும் வணிகம் தொடர்பானவை.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டில், அடமானம் இல்லாக் கடன்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனா உட்பட பல முக்கிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இணையாக இருந்தது இந்தியா.

கிரெடிட் கார்டு கடன்கள், திருமணம் மற்றும் மருத்துவ அவசர நிலைகளுக்கான கடன்கள் ஆகியவை மொத்த குடும்பம் சார்ந்த கடன்களில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன, ஆனால் இந்த கடன் பிரிவு வேகமாக வளர்ந்து வரும் ஒன்று என்று குப்தா கூறுகிறார்.

அப்படியென்றால், குறைந்த சேமிப்பு மற்றும் அதிகக் கடன் என்ற மக்களின் இந்த நிலைமை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?

கடன் மற்றும் செலவு அதிகரிப்பது எதிர்காலத்திற்கு நல்லதா? அல்லது வருமானம் குறைதல், பணவீக்கம் மற்றும் பொருளாதார அழுத்தம் போன்ற சவால்களை எச்சரிக்கிறதா?

பொருளாதார நிபுணர் குப்தா கூறுகிறார், “நுகர்வோருக்கு ஓரளவு நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பும் பல இந்தியர்கள் உள்ளனர் அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.”

அதிக செலவு செய்வது குறித்து இந்தியர்களின் மனநிலை மாறிவிட்டதா?

குப்தா கூறுகிறார், “இது சாத்தியம். ஆனால் இது ஏன் நடக்கிறது என்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை”

கடினமான நிதி சூழ்நிலையில் கடன் வாங்குவது பற்றி என்ன சொல்ல முடியும்?

“நீண்ட காலமாக நிலவும் கடினமான நிதி நிலைமை ஒரு நபரை கடனை திருப்பி செலுத்தாத நபராக மாற்றும். மறுபுறம், கடன் வழங்குபவர்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்றால், நல்ல கடன் மதிப்பீடு கூட இல்லாத நிதிச் சிக்கலில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஏன் தொடர்ந்து கடன் வழங்குவார்கள்?” என்கிறார் குப்தா.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அதிகரிக்கும் இந்தியர்களின் கடன்

பட மூலாதாரம், EPA

சில சிக்கல்கள் நம் முன்னால் உள்ளன. மோதிலால் ஓஸ்வாலின் குப்தா மற்றும் அவரது சக பொருளாதார நிபுணர் தனிஷா லதா ஆகியோர் கடந்த பத்தாண்டுகளில் கடன் எளிதாகக் கிடைப்பது குடும்பம் சார்ந்த கடன்களை அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்தனர்.

கடந்த பத்தாண்டுகளில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார். ஒருவர் பெரிய கடன் வாங்குவதற்குப் பதிலாக, சிறு சிறு கடன்களாக பல கடன்கள் வாங்குவதே சிறந்தது என்ற நிலை உள்ளது.

இந்தியக் குடும்பங்களின் கடன் விகிதம் நார்டிக் நாடுகளைப் போலவே சுமார் 12 சதவீதம் என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்த விகிதம் சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. இந்த எல்லா நாடுகளிலும் குடும்பம் சார்ந்த கடனின் அளவு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கடன் விகிதம் அதிகமாகவும், கால அவகாசம் குறைவாகவும் இருக்கிறது, இதனால் டிஎஸ்ஆர் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் இந்த வேறுபாடு உள்ளது.

செப்டம்பரில், இந்தியாவின் நிதி அமைச்சகம், சேமிப்புக் குறைப்பு மற்றும் கடன் அதிகரிப்பு பற்றிய அச்சங்களை நிராகரித்தபோது, ​​​​கொரோனாவுக்குப் பிறகு குறைந்த வட்டி விகிதங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் கல்விச் செலவுகளுக்காக, கார்கள் மற்றும் வீடுகள் வாங்க கடன் வாங்குகிறார்கள் என்று கூறியது.

இது தவிர, “இன்னும் அதிகமான மக்கள் வீடுகள் மற்றும் கார்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கு கடன் வாங்குகிறார்கள், இது எந்த நெருக்கடியின் அறிகுறியும் அல்ல. ஆனால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்ததுள்ளன என்பதை இது காட்டுகிறது” என்று அமைச்சகம் கூறுகிறது.

இருப்பினும், அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஜிகோ தாஸ்குப்தா மற்றும் ஸ்ரீனிவாஸ் ராகவேந்திரா ஆகியோர் இதிலுள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு பொருளாதார நிபுணர்களும் தி இந்து நாளிதழில், சேமிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான சிக்கல்களை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.

ஜி20 நாடுகளில், தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாட்டில் மக்கள் கடன் வாங்குவதை சார்ந்திருப்பது அதிகரித்து வருவது குறித்து பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் போன்றவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“அரசாங்கம் அடிப்படை சேவைகள் மற்றும் மானியங்களுக்காக கடன் வாங்குகிறது, அதே நேரத்தில் குடும்பங்கள் ஆடம்பர செலவுகளுக்காக வாங்க கடன் வாங்குகின்றன.” என்று அவர் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் கூறியுள்ளார்.

பொருளாதார வல்லுநர்கள் குப்தா மற்றும் லதா, “ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக அளவிலான கடன் வாங்குவது இந்தியாவின் நிதி அல்லது பரந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தாது, ஆனால் அது தொடர்ந்தால் பல சிக்கல்களை உருவாக்கக்கூடும்” என்று நம்புகின்றனர்.

வணிக ஆலோசகர் ராமா பிஜபுர்கர் தனது புதிய புத்தகமான லில்லிபுட் லேண்டில், “ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று கனவு இந்திய நுகர்வோருக்கு இருக்கிறது, ஆனால் மறுபக்கம் அவருக்கு மோசமான பொது வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உள்ளன, அவருடைய வருமானம் குறைவாக, நிலையற்றதாக உள்ளது. இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கு நடுவே அவர்கள் நிற்கிறார்கள்” என்று எழுதியுள்ளார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்திய நுகர்வோர் இந்த விஷயங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.