ராமதநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் அதிமுக சின்னம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் களம் காணும் நிலையில், அதே பேரில் 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவரின் வேட்புமனு தவிர பன்னீர்செல்வம் என்ற பெயரில் மனுத்தாக்கல் செய்த மீதமுள்ள ஐந்து பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை வாக்களார்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஓபிஎஸ்-இன் அரசியல் எதிரிகள் ஒரே பெயரில் சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளதாகவும், ஆனால் இது ஓபிஎஸ்க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்-இன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரிந்து கட்டி வந்த பன்னீர்செல்வங்கள்

ராமதநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் அதிமுக சின்னம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராக 25ஆம் தேதி காலை, தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து அன்று மாலை உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்ற சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மறுநாள் காலை ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரைத் தொடர்ந்து திருமங்கலம் வாகைகுளத்தைச் சேர்ந்த ஒச்ச தேவர் மகன் பன்னீர்செல்வம், சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளர்களாக ராமநாதபுரத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் புதன்கிழமை அன்று மதுரை கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்த்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

யார் இந்த பன்னீர் செல்வங்கள் – இவர்களின் பின்புலம் என்ன?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒ.பன்னீர்செல்வம், ம.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஐந்து சுயேச்சை வேட்பாளர்களில் மூவர் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஒருவர் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், மற்றொருவர் டீக்கடை நடத்தி வருபவராகவும் உள்ளனர். அவர்களுடைய தேர்தல் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பு மற்றும் சுய விவரங்கள் அடிப்படையில் இதில் பலருக்கும் சொந்த வீடு ஏதும் இல்லை. வங்கிக் கணக்கில் ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் இருப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இரண்டு பன்னீர்செல்வங்கள் தங்களுக்கு கல்வித் தகுதி ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்யும்போது உறுதிமொழி வாசிக்கக் கொடுத்தபோது தனக்குப் படிக்க தெரியாது என இருவர் கூறினர்.

இந்த சுயேச்சை வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது அவர்களுடன் வழக்கறிஞரும், அதிமுக கரை வேட்டி கட்டி சட்டைப் பையில் ஜெயலலிதா புகைப்படமும் வைத்திருந்த சிலர் உடன் வந்திருந்தனர்.

மனுத்தாக்கல் செய்ய வந்த சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், “தான் மக்களுக்குப் பணி செய்வதற்காக ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.”

அதைத் தொடர்ந்து உசிலம்பட்டியைச் சேர்ந்த மற்றொரு பன்னீர்செல்வத்திடம் பேசுகையில், “தான் மக்களுக்கு பணியாற்றுவதற்காக யாருடைய தூண்டுதலும் இல்லாமல், என் தனி விருப்பத்தின்படி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ததாக” தெரிவித்தார்.

ராமதநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் அதிமுக சின்னம்

பட மூலாதாரம், Getty Images

நேற்றுடன் (27ஆம் தேதி) வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யப்பட்டன.

இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனு உட்பட பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதில், மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் என்பவர் தவிர ஓபிஎஸ்ஸை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த அனைவரின் இனிஷியலும், ‘ஒ’ குறில் என்ற பெயரில் உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை பெயரின் அடிப்படையில் அவர் ‘ஓ‘ என்ற இனிஷியலை தனது பெயருடன் பயன்படுத்துகிறார். இந்த குறில், நெடில் வித்தியாசம் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்’

ராமதநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் அதிமுக சின்னம்

பட மூலாதாரம், Getty Images

நேற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் முன்பு, பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தது குறித்து பிபிசி தமிழ் கேள்வியை முன்வைத்தது.

அதற்குப் பதிலளித்த அவர், “வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுகுறித்து பதில் அளிக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத்திடம் பிபிசி தமிழ் இதே கேள்வியை முன்வைத்தபோது அதற்குப் பதில் அளித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் பெயரில் நான்கு பேர் இல்லை நான்காயிரம் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் எங்களுக்குத் துளி அளவும் கவலை இல்லை,” என்றார்.

“யார் அசல், யார் போலி என மக்களுக்குத் தெரியும், தமிழக முன்னாள் முதல்வராக இருந்தவரை மக்கள் மறக்க மாட்டார்கள். அவருடைய அரசியல் பயணத்தை நாட்டு மக்கள் கவனித்து வருவதால் எங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாது.”

எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் மகன் குற்றச்சாட்டு

இதனிடையே ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் வெற்றி பெறக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில் சிலர் என் தந்தை பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக அவரது பெயரில் உள்ள ஐந்து நபர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார்.

இது ராமநாதபுரம் மக்களை முட்டாளாக்கும் முயற்சி. ஆனால் ராமநாதபுரம் மக்கள் மிகவும் தெளிவானவர்கள். எனவே தேர்தல் முடிவில் என் தந்தைக்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு உள்ளது எனத் தெரிய வரும்,” என்று கூறியுள்ளார்.

‘ஓ.பி.எஸ்-க்கு பாதிப்பில்லை’

ராமதநாதபுரம் தொகுதி ஓபிஎஸ் அதிமுக சின்னம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகரும், மூத்த செய்தியாளருமான எஸ்.பி லட்சுமணன், தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக செய்யக்கூடிய ஒரு பழைய யுக்திதான் இது என்று கூறினார்.

அவரது கூற்றின்படி, ஒரே பெயரில் வேட்பாளர்களைக் களம் இறக்குவது புதிதல்ல, இது வேட்பாளரைப் பலவீனப்படுத்தும், ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் புரிதலுடன் இருப்பதால் இவ்வாறான யுக்திகளைப் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள்.

“சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயரில் 5 பேர் வேட்பு மனுக்களை சுயேச்சையாகத் தாக்கல் செய்திருந்தாலும், தற்போதுள்ள சமூக ஊடக பயன்பாடு, ஓபிஎஸ் அரசியல் பலம் உள்ளிட்டவற்றால் நிச்சயம் ஓபிஎஸ் இதை எதிர்கொள்வார்,” என்று எஸ்.பி லட்சுமணன் கூறினார்.

“பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஐந்து நபர்கள் மனு தாக்கல் செய்திருப்பதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தே அந்த முன்னாள் அமைச்சர் இவ்வாறு செய்திருந்தால் அதை அதிமுகவினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதன் மூலம், ஓபிஎஸ்ஸை கண்டு அதிமுக பயப்படுகிறது என்ற பொருள்படுகிறது,” என்று எஸ்.பி லட்சுமணன் கூறினார்.

தேர்தல் நேரங்களில் இவ்வாறு ஒரே பெயரில் வேட்பாளர்களை நிறுத்துவது புதிதல்ல. இருப்பினும் சின்னத்தை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள், ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது என்கிறார் பத்திரிகையாளர் பிரியன்.

ஓபிஎஸ் பிரபலமானவர் என்றாலும் அவருடைய சின்னம் என்னவென்றே பலருக்கும் தெரியாது. சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்திருப்பதால் அவருக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

இன்னும் சில நாட்களில் சின்னம் ஒதுக்கப்பட்டாலும், நேரமின்மை காரணமாக சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது கடினமான ஒன்று என்றார் அவர்.

“யாரோ சிலரால் டெபாசிட் தொகை செலுத்தி போட்டியிடும் பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட வேட்பாளர்கள் பெரிய அளவில் செலவு செய்து பிரசாரம் செய்ய மாட்டார்கள். எனவே இந்த பன்னீர் செல்வங்களால் ஓபிஎஸ்க்கு மோசமான பாதிப்பு வராது,” என்கிறார் மூத்த செய்தியாளர் ப்ரியன்.

அதிமுக கூறுவது என்ன?

இதுகுறித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வனிடம் பேசியபோது, “ஒரு தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர்கூட இருப்பார்கள். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தால் அதற்கு அதிமுக என்ன செய்ய முடியும்?

இத்தகைய சிறு விஷயத்திற்கெல்லாம் ஓபிஎஸ் தரப்பு எங்களை குற்றம்சாட்டுவதில் இருந்தே, அவர்களின் பயமும் தடுமாற்றமும் அப்பட்டமாகத் தெரிகிறது. பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று கூறினார் அவர்.