அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யா – சீனா கூட்டணியில் புதிய சிக்கல்

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், எவ்ஜெனி புடோவ்கோவின் மற்றும் டாம் லாம்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ரஷ்ய அதிகாரிகளும் ஊடகங்களும் சீனாவுடனான தங்கள் நாட்டின் பொருளாதார உறவுகளை குறித்து சிறப்பான பிம்பத்தை பொதுவெளியில் கட்டமைத்து வைத்திருந்தனர். இரு நாடுகளும் வணிக மற்றும் கூட்டு திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம்.

ஆனால், தற்போது ரஷ்ய நிறுவனங்கள் சீனாவுடன் வணிகம் செய்வதில் உள்ள சிரமங்களைப் பற்றி புகார் செய்யத் தொடங்கியுள்ளன. சீன வங்கிகளால் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படுவது குறித்தும், சக்தி வாய்ந்த சீன நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் எதிர்கொள்ளும் கடும் போட்டி சூழல் குறித்தும் ரஷ்ய நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளத.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுடன் உறவை தங்கள் நாடு வலுப்படுத்தி வருவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறி வந்தனர். இதன் மூலம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தாலும், சீனா உடன் இருந்தால் ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதே அவர்களின் உள்நோக்கம்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீனாவுடன் தனது நாடு ‘முன்னெப்போதும் இல்லாத’ அளவுக்கு ஒத்துழைப்பை கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளில் இருந்து பல ரஷ்யாவை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

சீனாவை நம்பி இருக்கும் ரஷ்யா

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

சீன நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்ய வேண்டும் என புதின் விருப்பம் தெரிவித்தார். இதற்காக சீன நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் கொள்கைகளை ரஷ்யா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த முதலீட்டு மாநாட்டில், ரஷ்யாவில் முதலீடு செய்யவும் நிறுவனங்கள் விரிவுபடுத்தவும் தடையாக இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று புதின் சீன நிறுவனங்களுக்கு உறுதியளித்தார்.

அரசாங்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 240 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா சீனாவிற்கு எண்ணெய் மற்றும் நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதி 12.7 சதவீதம் அதிகரித்து 129.2 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ரஷ்யாவுக்கான சீனாவின் ஏற்றுமதியும் 46.9 சதவீதம் அதிகரித்து 111 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதில் கார்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அடக்கம்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஆட்டம் கண்ட சீன வர்த்தகம்

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் சமீபகாலமாக சில இடையூறுகள் காணப்படுகின்றன. சீன வங்கிகள் வாயிலாக பணம் செலுத்துவதற்காக அனுப்பப்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டதாக ரஷ்ய நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.

ரஷ்ய சார்பு நாளிதழ் இஸ்வெஸ்டியா, சீனாவின் மிகப்பெரிய வங்கிகளான ஐசிபிசி, தொழில்துறை வங்கி மற்றும் பேங்க் ஆஃப் டைசு மூலம் ரஷ்யாவுக்கான பணம் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிக்கல்கள் ஏற்படுவதாக அதன் ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

வணிக செய்தித்தாள் கொம்மர்சன்ட், சந்தை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, “சர்வர்கள், டேட்டா ஸ்டோர் சிஸ்டம்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்னணுப் பொருட்களை கட்டமைப்பதில் சீன உதிரிபாகங்களை பயன்படுத்தும் ரஷ்ய நிறுவனங்கள் அதிக சிக்கல்களை எதிர்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளனர்.

பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பிரச்னைகள் டிசம்பர் 2023க்குப் பிறகு ஏற்படத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஆனால் மார்ச் 2024க்குள் நிலைமை மோசமாகியது.

அதே சமயம், சீனா தனது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கியுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேனில் ஏதேனும் வணிகம் நடைபெறுகிறதா என்ற தகவலை சீனா விசாரிக்கிறது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்தது. ஆனால் புளூம்பெர்க் செய்தி அறிக்கையின்படி, மார்ச் 2023 காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, மார்ச் 2024இல் ரஷ்யாவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் 16 சதவீதம் குறைந்துள்ளது.

ரஷ்ய வணிக செய்தித்தாள் ஆர்பிசி செய்தியின் படி, சீன மின் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றின் நேரடி விநியோகம் 15 சதவீதம் குறைந்துள்ளது. அதே மாதத்தில், சீனாவுக்கான ரஷ்யாவின் நிலக்கரி ஏற்றுமதி 21 சதவீதம் குறைந்துள்ளது.

ரஷ்யாவில் சீன நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

சீனாவுடனான ரஷ்யாவின் வர்த்தக உறவுகள் பிரச்னைகளை உருவாக்குவதாக ரஷ்ய வர்த்தக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உதாரணமாக, ரஷ்யாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ‘AvtoVAZ’இன் தலைவர் மாக்சிம் சோகோலோவ், உள்நாட்டு சந்தையில் சீன நிறுவனங்களின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சீன கார் நிறுவனங்களின் செல்வாக்கு ரஷ்யாவில் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது, ரஷ்யாவின் பயணிகள் கார் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது ரஷ்ய வாகனச் சந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மட்டுமின்றி உள்நாட்டு வாகன மற்றும் வாகன உதிரிபாக சந்தையிலும் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என சொகோலோவ் கூறுகிறார்.

இதற்கிடையில், சீன நிறுவனங்கள் ரஷ்யாவிற்குள் உள்ளூர் சந்தைக்கு உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க ரஷ்ய அரசாங்கம் விரும்புகிறது. இதில் பயணிகள் கார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற தயாரிப்புகள் அடக்கம்.

‘வணிகம் செய்யுங்கள், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்’

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

மற்றொருபுறம், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வது குறித்து சீன ஊடகங்களில் பெரிதாக எந்த விமர்சன செய்திகளும் வெளிவரவில்லை.

ரஷ்யாவுக்கான சீனத் தூதர் ஜாங் ஹன்ஹுய், “மூன்று சீன வங்கிகள் ரஷ்ய பரிவர்த்தனைகளை மறுத்ததற்கு காரணம் மூன்றாவது நாட்டின் குறுக்கீடு” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தல்களை அவர் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் கூறியதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீன அரசு ஊடகமான குவாஞ்சா இந்த பிரச்னைக்கு இரண்டு தீர்வுகளை பரிந்துரைத்துள்ளது. முதலாவதாக, கஜகஸ்தான் அல்லது தஜிகிஸ்தான் போன்ற மூன்றாவது நாடு வழியாக பணம் பரிவர்த்தனைகள் மாற்றப்பட வேண்டும்.

இரண்டாவது தீர்வு ரஷ்யாவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செயல்படுத்த ஒரு சிறப்பு வங்கியை உருவாக்குவதாகும், இது யூரோக்கள் மற்றும் டாலர்களைப் பயன்படுத்தாமல் செயல்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, இரானுக்கான எண்ணெய்க்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இராக் பயன்படுத்தப்பட்டது.

குவாஞ்சாவின் கட்டுரை சீன வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. இன்றும் சீனா அமெரிக்காவுடன் 660 பில்லியன் டாலர்களும், ஐரோப்பிய யூனியனுடன் 480 பில்லியன் டாலர்களும் வர்த்தகம் செய்கிறது. அதேசமயம் ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தகம் இதுவரை 240 பில்லியன் டாலர்களை மட்டுமே எட்டியுள்ளது.

ரஷ்யாவில் கொண்டாடப்படும் சீன நிறுவனங்கள்?

சீனா - ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

குவாஞ்சா செய்தி அறிக்கையில், “இந்த விஷயத்தில் பரஸ்பர வணிக நலன்கள் குறித்து அதிக விவாதம் இருக்க வேண்டும். வணிக விவகாரங்களில் நம் உணர்வுகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது. உணர்ச்சிவசப்படுவதால் பலன் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சீன ஊடகங்களில் ரஷ்ய சந்தையில் சீன கார் நிறுவனங்கள் கொண்டாடப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.

எடுத்துக்காட்டாக, “சீன நிறுவனங்கள் உயர்தர வடிவமைப்புகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதால், சீனாவைப் பற்றிய ரஷ்ய நுகர்வோரின் கண்ணோட்டம் மாறிவிட்டது” என்று குவாஞ்சா பிப்ரவரி 17 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டது.

Dongchedi.com என்ற ஆட்டோமொபைல் இணையதளம் தனது கட்டுரை ஒன்றில் ரஷ்ய ஊடகங்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது. ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு காரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

சினா டெக்னாலஜி (Sina Technology) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய ரஷ்ய கட்டணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இதன் காரணமாக சீன கார்கள் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு விலை உயர்ந்து வருகின்றனவாம்.