← முகப்பு செய்திகள்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?

பட மூலாதாரம், Getty Images

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே வருகையைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டம் சனிக்கிழமை (ஜூன் 6, 2026) இரவு வெகுநேரம் கழித்தே முடிவுக்கு வந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சனிக்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த அபிஜித் தீப்கே, விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வெழுதிய பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி காவல்துறையிடமிருந்து காக்ரோச் ஜனதா கட்சி அனுமதி பெற்றுள்ளதாக அவர் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்திருந்தார்.

காக்ரோச் ஜனதா கட்சி ஒரு இணையவழி பகடி இயக்கமாகவே தொடங்கியது.

'போலிப் பட்டங்கள் கொண்ட சில இளைஞர்களை' கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டு இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிரானதாகவே இந்த 'இணையவழி இயக்கம்' அமைந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த இணையவழி இயக்கம், பரவலான ஆதரவைப் பெற்று வருவதாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X) மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் இதன் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்தது என்ன?

சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், ANI

சனிக்கிழமை, அபிஜித் தீப்கே வந்து சேர்வதற்கு முன்பே மக்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கூடத் தொடங்கியிருந்தனர்.

டெல்லி விமான நிலையத்திலிருந்து அவர் ஜந்தர் மந்தரை அடைந்த போது, சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர்.

ஜந்தர் மந்தரை அடைந்த அபிஜித் தீப்கே, "கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகப் பக்கத்தை நடத்துவதால் என்ன சாதிக்க முடியும் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, எத்தனை கரப்பான் பூச்சிகள் தங்கள் வீடுகளிலிருந்து ஜந்தர் மந்தருக்கு வெளியே வந்திருக்கின்றன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்," என்று கூறினார்.

"இன்னும் ஓரிரு நாட்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் எங்களுடன் இணைவார்கள். இந்த காக்ரோச் ஜனதா கட்சி என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்சியல்ல; இது அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவரின் குரல்," என்று அவர் கூறினார்.

அவர் கூறுகையில், "10-12 ஆண்டுகளாக இவர்கள் நம்மை இந்து-முஸ்லிம் அரசியலில் சிக்க வைத்திருந்தார்கள்; இதனால் யாருக்குப் பலன் கிடைத்தது? இந்து-முஸ்லிம் அரசியல் செய்வதன் மூலம் நாட்டில் யாருக்காவது வேலை கிடைத்ததா?" என்று கூறினார்.

"இந்த அரசாங்கம் என்னைச் சிறையில் அடைத்துவிடுமோ என்று என் அம்மா மிகவும் பயந்தார். இந்த அரசாங்கத்துக்கு எதிராகத் தன் பிள்ளை குரல் எழுப்பும்போது, ​​இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு தாயும் இவ்வாறு அஞ்சுகிறார்கள். இந்த அரசாங்கத்தைக் கண்டு நாம் எவ்வளவு காலத்துக்குத்தான் அச்சத்துடன் வாழ்வது?" என்றார்.

இளைஞர்கள் மத்தியில் கோபம்

சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், ANI

காக்ரோச் ஜனதா கட்சியின் இந்தப் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்றார்.

இப்போராட்டம் குறித்து செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா, அபிஜித் தீப்கே ஜந்தர் மந்தரைச் சென்றடைந்தபோது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததாக தெரிவித்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கையை அவர்கள் ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்ற பல இளைஞர்களும் ஒரு கேள்வியை எழுப்பினர்: கல்வி முறையை மேம்படுத்துவது ஒருபுறம் இருக்க, நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த தேர்வுகளைக் கூட அரசாங்கத்தால் முறையாக நடத்த முடியவில்லை என அவர்கள் குறை கூறினர்.

அங்கு போராட்டம் நடந்த போது, அருகே இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர் என்றும், ஆனால் அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இல்லை என்றும் தில்நவாஸ் பாஷா கூறினார்.

அரசியல் கட்சிகள் கூறியது என்ன?

சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சிகள் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிபிசி நியூஸ் ஹிந்தியின் காணொளி ஒன்றை பகிர்ந்து, "இந்தக் குரல் ஆணவம் பிடித்த ஆட்சியாளர்களைச் சென்றடைய வேண்டும்; இப்போது இளைஞர்களும் ஒரு புரட்சியைத் தொடங்கியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

சிவசேனா (UBT – உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்துவிட்டது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று அடையாளப்படுத்திக் கொண்டு தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர். அரசு அவர்களின் குரலுக்குச் செவி சாய்க்கத்தான் வேண்டும். இந்த 'கரப்பான் பூச்சிகளை' குறைத்து மதிப்பிடாதீர்கள். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் அரசுக்கு இதை உணர்த்தியுள்ளது," என்று கூறியுள்ளார்.

காக்ரோச் ஜனதா கட்சியை போராட்டம் நடத்த அனுமதித்ததன் மூலம் டெல்லி காவல்துறை சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, சிவசேனா தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை முன்னாள் எம்.பியுமான பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

"காக்ரோச் ஜனதா கட்சியை போராட்டம் நடத்த அனுமதிப்பதன் மூலம் டெல்லி காவல்துறை சரியான செயலைச் செய்துள்ளது," என்று பிரியங்கா சதுர்வேதி தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான யோகேந்திர யாதவ், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக வினோத் குமார் ஷுக்லாவின் கவிதை ஒன்றை வாசித்தார்.

ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், ANI

காக்ரோச் ஜனதா கட்சியின் இந்தப் போராட்டம் சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.

மக்கள் இந்தப் போராட்டம் கூறும் செய்தியைப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் விஷயத்தில் வழக்கமாகவே கடுமையாக செயல்படும் மோதி அரசு, இதை எப்படி இவ்வளவு எளிதாக அனுமதித்தது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அந்தப் போராட்டத்தின் தாக்கம் மற்றும் அதன் 'இணையவழி இயக்கத்தின்' எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஸ்மிதா குப்தா, "வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற ஜென் ஸி (Gen Z) போராட்டங்களை அரசு கவனித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் கரப்பான் பூச்சி குறித்து வெளியிட்ட கருத்தும், அதைத் தொடர்ந்து எழுந்த கடுமையான எதிர்வினையும் அரசுக்கு அந்தப் போராட்டங்களை நினைவூட்டின; எனவே, அவர்களுக்குச் சிறிது இடமளிக்க அரசு முடிவு செய்தது," என்று கூறினார்.

"அதன் வலிமையைச் சோதித்துப் பார்ப்பது அரசின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே, அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு டெல்லி காவல்துறை உடனடியாக அனுமதி அளித்தது."

"வினாத்தாள் கசிவு விவகாரம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கிறது. அதனால்தான் மக்கள் கோபமாக உள்ளனர். இந்தக் கோபம் தணிய வேண்டும் என்று அரசு விரும்பியது," என்று அவர் கூறினார்.

"முன்னதாக, நார்வேயில் ஒரு இளம்பெண் பத்திரிகையாளர் பிரதமர் நரேந்திர மோதியிடம் கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் அவர் சற்றுத் தயக்கத்துடனேயே இருந்தார்."

ஸ்மிதா குப்தா கூறுகையில், "தேர்தல்கள் நடைபெறும் போது, ​​வேலையின்மைதான் பெரும்பாலும் மிகப்பெரிய பிரச்னையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒருபுறம் இருக்க, தேர்வுகளை எழுதுவதே கூடக் கடினமாக உள்ளது. இளைஞர்களிடையே ஒருவித அமைதியின்மை நிலவுகிறது; எதிர்காலம் இருண்டு காணப்படுகிறது" என்றார்.

இது போன்ற இணையதளங்களில் தொடங்கும் போராட்டங்களின் எதிர்காலம் என்ன? அவை எதிர்காலத்தில் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்குமா?

ஸ்மிதா குப்தா கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற இயக்கம் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமை போன்ற முக்கிய விவகாரங்களை மையமாகக் கொண்டிருந்தது; ஆனால் காக்ரோச் ஜனதா கட்சியின் இயக்கம் நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கும் ஒரு பிரச்னையை மையமாகக் கொண்டுள்ளது. அதுதான் மோசமான கல்வி முறை சார்ந்த பிரச்னை. அதனால்தான் அதற்கு ஆதரவு பெருகி வருகிறது." என்றார்.

"மோதி அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட அரசியல் அனுகூலம் (honeymoon period) முடிவுக்கு வரும் வேளையில் இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன. உலகெங்கும் நடைபெற்று வரும் போர்கள் இந்தியாவின் பொருளாதார நிலைக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. சுகாதாரம் போன்ற நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் குறைந்து வருகின்றன. இத்தகைய அதிருப்தி உணர்வு, இதுபோன்ற போராட்டங்களின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும்." என்றார்.

காக்ரோச் ஜனதா கட்சி அரசியல் சக்தியாக உருவெடுக்குமா?

சிஜேபி, அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தர், காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், ANI

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சரத் குப்தா, இந்த ஆர்ப்பாட்டத்தை அமைப்பின் மீதான மக்களின் கோபம் மற்றும் அதிருப்தியின் அடையாளமாகக் கருதுகிறார்.

அவர் கூறுகையில், "மக்களிடையே அதிருப்தி இல்லையென்றால், கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் கூடியிருக்க மாட்டார்கள். இது, நிர்பயா வழக்கில் நீதிகேட்டு டெல்லி மக்கள் கடும் குளிரையும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் காவல்துறை நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடிய காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது." என்றார்.

"இது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில், யாரும் பொறுப்பேற்க அனுமதிக்காத ஒரு அமைப்புக்கு எதிரான போராட்டமே இது. அமைச்சர்கள் பதவி விலகும் வகையிலான அரசாங்கம் இதுவல்ல என்று ஆளும் கட்சி கூறுகிறது." என அவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தை அரசு ஏன் எளிதாக அனுமதித்தது என்று கேட்டபோது, ​"ஜெயப்பிரகாஷ் இயக்கம், வி.பி. சிங் இயக்கம் முதல் அன்னா (ஹசாரே) இயக்கம் வரை, இத்தகைய இயக்கங்களை அரசு ஒடுக்க முயன்ற போதெல்லாம் அவை மேலும் தீவிரமடைந்தனவே தவிர குறையவில்லை. எனவே, போராட்டங்களை அனுமதிப்பதன் மூலம் அவற்றின் தீவிரத்தைத் தணிக்கும் உத்தியை அரசு கையாண்டது." என்றார்.

காக்ரோச் ஜனதா கட்சி போன்ற ஒரு அமைப்புக்கு ஏதேனும் அரசியல் எதிர்காலம் உள்ளதா? அது ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறுமா?

சரத் ​​குப்தா கூறுகையில், "காக்ரோச் ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் அனுபவம் சிறிதும் இல்லை. அவர்களின் செய்தித் தொடர்பாளர்களில் மூவர் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள். எதிர்காலத்தில் அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தால் அது நல்ல விஷயமாக இருக்கும். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைப் போன்ற ஒரு கட்சியாகத் திகழக்கூடும். ஆனால், இப்போதைக்கு அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்த தெளிவான சூழல் எதுவும் எனக்குத் தெரியவில்லை" என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பிபிசிதமிழ்

மேலும் செய்திகள்
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
பாராளுமன்றத்துக்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
1 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
India vs Afghanistan Test: India targets a massive first-innings
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகம்
தலையங்கம் · 30 நிமிடங்கள் முன்னர்
4
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆ
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net