பாராளுமன்றத்துக்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்சியின் அரசியல் குழுவினால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தின் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முக்கிய உடன்பாடுகளுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இரவு கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூட்டம் இடம்பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூடி, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குவதற்குத் தேவையான குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
பெரமுனவின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரதான குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சியின் அடிமட்டப் பலத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்குள் ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஒரு கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கான அனுமதியை கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்துத் தேவையான உடன்பாடுகளுக்கு வர அரசியல் குழு அனுமதியளித்துள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிச்சயமாக இரண்டு துணைத் தலைவர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
புதிய அரசியல் கூட்டணிகள் உருவாவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன ஒரு பலமான அரசியல் கட்சி என்பதால் எமது தனித்துவமான அரசியல் பயணத்தை நாம் தொடர்வோம். எதிர்காலத் தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைப்பது குறித்துப் பின்னர் கலந்துரையாட முடியும். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியின் அரசியல் சக்திகள் குறித்துத் எமது கவனம் மிகவும் குறைவாகவே உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகவும் அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே பொதுஜன பெரமுனவின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், அரசாங்கத்ததுக்குள் நிலவும் எல்லையற்ற ஊழல்கள், குறிப்பாக நிலக்கரி ஊழல் மற்றும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு எதிராகப் போராடுவதே எமது நோக்கமாகும். எதிர்க்கட்சிகளை விட அரசாங்கத்தின் தவறுகளிலேயே எமது கவனம் உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி போன்ற ஏனைய கட்சிகளிலிருந்து மக்கள் எமது கட்சியுடன் இணைந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம். கிராம மட்டத்தில் பொதுஜன பெரமுன மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. புதியவர்களையும் இணைத்துக் கொண்டு மிகப் பலமான முறையில் கட்சி முன்னோக்கிச் செல்லும் என்றார்.