பட மூலாதாரம், Getty Images
சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், அசௌகரியம் அல்லது அதிகப்படியான வாயுத் தொல்லை ஏற்படும்போது, உருளைக் கிழங்கு சாப்பிட்டதே இதற்கு காரணம் என்று சிலர் கூறுவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.
உருளைக்கிழங்கு உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. மசித்த உருளைக்கிழங்கு, பொரியல் அல்லது சிப்ஸ் போன்ற அது சார்ந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட்ட பிறகு, சிலர் வழக்கத்திற்கு மாறாக வயிறு உப்புசமாக இருப்பது போல் உணர்வதாகக் கூறுகின்றனர்.
அப்படியானால், அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது உண்மையில் வாயுத்தொல்லையை ஏற்படுத்துமா?
இதற்கு ஆம் என்றோ, இல்லை என்றோ ஒரு குறிப்பிட்ட பதிலைச் சொல்லிவிட முடியாது என்கிறார் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் அருள் பிரகாஷ்.
"பெரும்பாலான நபர்களுக்கு, வாயுவை உருவாக்கும் மிகப்பெரிய உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு மட்டுமே இருப்பதில்லை. இருப்பினும், அதிக அளவிலான உருளைக்கிழங்கை உட்கொள்வது, அதிலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், சிலருக்கு வயிறு உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு, குடல் வாயுத் தொல்லை ஆகிய அசௌகரியங்கள் ஏற்படலாம். ஆனால் இது நபருக்கு நபர் வேறுபடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் விளக்கினார்.
பெரும்பாலும் இத்தகைய வயிற்றுப் பிரச்னைகளுக்கான காரணமாக, உருளைக்கிழங்கு மட்டுமே இருப்பதில்லை என்று கூறும் நிபுணர்கள், மாறாக அது சமைக்கப்படும் முறை, உட்கொள்ளப்படும் அளவு, ஒரு தனிநபரின் செரிமான ஆரோக்கியம் மற்றும் சில வகையான மாவுச்சத்துகளுடன் உடலின் இடைவினைகள் எனப் பல்வேறு காரணிகள் இதில் பங்கு வகிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய நீரிழிவு, செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான (NIDDK) அமைப்பின் கூற்றுப்படி, சிறுகுடலில் முழுமையாகச் செரிக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகளை பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் நொதிக்கச் செய்யும்போது வாயு உருவாகிறது.
"இந்த நொதித்தல் செயல்முறை இயற்கையாகவே ஹைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை உருவாக்குகிறது. அதிகப்படியான நொதித்தல் செயல்முறை, வயிறு உப்புசம், அசௌகரியம் மற்றும் வாயுத் தொல்லைக்கு வழிவகுக்கும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
'உருளைக்கிழங்கு மட்டுமே காரணமில்லை'
உருளைக்கிழங்குகள் முதன்மையான ஸ்டார்ச்சால் ஆனவை. இந்த ஸ்டார்ச்சின் பெரும்பகுதி சிறுகுடலில் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகிறது. இருப்பினும், அதில் சில செரிமானத்தைத் தவிர்த்து பெருங்குடலை அடையக்கூடும். அங்கு குடல் பாக்டீரியாக்கள் அதை நொதிக்கச் செய்கின்றன.
நியூட்ரிஷன் அண்ட் கேஸ்ட்ரோஎன்டிராலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, எதிர்ப்பு ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாட்டிக்காக செயல்பட்டு, நன்மை தரும் குடல் நுண்ணுயிரிகளுக்கு உணவளிப்பதைக் காட்டியுள்ளது. இது பொதுவாக நீண்ட கால குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இந்த நொதித்தல் செயல்முறை சில நபர்களுக்குத் தற்காலிகமாக வாயு உற்பத்தியை அதிகரிக்கக்கூடும்.
அதேவேளையில், "பல பிரதேசங்களில் உணவுமுறையின் முக்கிய அங்கமாக உருளைக்கிழங்குகள் விளங்குகின்றன. எனவே உருளைக்கிழங்குகள் மட்டுமல்லாது, அதைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் அதிமுள்ள உணவுகள், பீன்ஸ், முள்ளங்கி போன்ற வேறு சில காய்கறிகள் போன்றவையும் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்ற அசௌகரியங்களுக்கு வழிவகுக்கின்றன" என்றும் குறிப்பிடுகிறார் மருத்துவர் அருள் பிரகாஷ்.
அதோடு, உருளைக்கிழங்கு போன்ற உணவுப்பொருட்கள் சிலருக்கு இதுபோன்ற அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன என்பதாலேயே அவை ஆரோக்கியமற்றது என்று பொருளில்லை, மாறாக செரிமானத்தின் எதிர்வினை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றார் அவர்.
குறிப்பாக, பல நேரங்களில் உருளைக்கிழங்குகள் இந்த விஷயத்தில் நிரபராதிகளாகவே இருப்பதாகக் குறிப்பிடும் அவர், "அவற்றைவிட பால் பொருட்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், முள்ளங்கி போன்ற உணவுப் பொருட்கள் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுவதற்குக் காரணமாக விளங்குவதாக" மருத்துவர் விவரித்தார்.
கூடுதலாக, "ஒவ்வொருவரின் உடலமைப்பு, செரிமான ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தச் சிக்கல்களும் ஏற்படக்கூடும். உருளைக் கிழங்குடன் பரிமாறப்படும் பொருட்களும் இந்த அறிகுறிகளைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருவேளை பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவை கலந்த உணவைச் சாப்பிடும்போது இந்த அசௌகரியங்கள் ஏற்பட்டால், அடுத்த முறை அவற்றைத் தனித்தனியே உட்கொண்டு, உடல்நிலையை அவதானிக்க வேண்டும். அப்போது உண்மையில் எந்த வகை உணவுப்பொருளால் ஒருவருக்கு பிரச்னை ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி அந்த அசௌகரியங்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்," என்றும் அவர் விளக்கினார்.
"இவை மட்டுமின்றி, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத ஒருவர், பால் பொருட்கள் கலந்த உணவைச் சாப்பிடுகையில் வயிறு உப்புசத்தை, வாயுப் பிரச்னையை அனுபவிக்க நேரிடலாம். அதேபோல, எண்ணெயில் நன்கு பொரித்த உருளைக்கிழங்கை சாப்பிடும் போது, அதிலுள்ள அதிக கொழுப்புச் சத்து காரணமாக வயிறு நிறைந்தது போன்ற உணர்வு நீண்ட நேரம் நீடிக்கலாம். இது உணவுக்குப் பிறகு சிலருக்கு மிகவும் வயிறு நிறைந்தது போன்ற அல்லது அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தக்கூடும்."

வாயுத்தொல்லைக்கு வித்திடும் பிற உணவுப் பொருட்கள்
உருளைக்கிழங்கு போலவே, வயிறு உப்புசம் மற்றும் வாயுப் பிரச்னைக்குக் காரணமாகப் பல்வேறு உணவுப் பொருட்கள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
உதாரணமாக, "பீன்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி, பருப்பு வகைகளை" குறிப்பிடுகிறார் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் அருள் பிரகாஷ்.
இவற்றில் ஒலிகோசாக்கரைட் எனப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்தச் சேர்மங்களை முழுமையாக செரிக்கத் தேவையான நொதிகள் சிறுகுடலில் இல்லாத காரணத்தால், அவை பெருங்குடலை அடைந்து, அங்குள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்படுகின்றன. இது வாயு உருவாக்கத்திற்கு வித்திடுகிறது.
அதேபோல, "காலிஃப்ளவர், ஃப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் ராஃபினோஸ், கந்தகம் கொண்ட சேர்மங்கள் உள்ளன. செரிமானத்தின்போது, இந்தச் சேர்மங்கள் கணிசமான அளவில் வாயு உருவாக வழிவகுக்கக்கூடும்" என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது.
"இந்த உணவுப் பொருட்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருந்தாலும், வயிறு உப்புசத்தைத் தூண்டும் காரணிகளில் அடிக்கடி குறிப்பிடப்படுபவையாகவும் இருப்பதாக" அருள் பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
இவைபோக, பால், ஐஸ்கிரீம், மென்மையான சீஸ், தயிர்களில் லாக்டோஸ் உள்ளது. உடலில் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு, லாக்டோஸை முறையாக செரிக்கத் தேவையான லாக்டோஸ் நொதி போதுமான அளவு உற்பத்தியாவதில்லை.
அவ்வாறு செரிக்கப்படாத லாக்டோஸ் பெருங்குடலை அடைந்து, அங்கு பாக்டீரியாக்களால் நொதிக்கப்படுகிறது. இதனால், வாயு, வயிறு உப்புசம், வயிற்று வலி, சில நேரங்களில் வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படும் என்று விளக்கினார் அருள் பிரகாஷ்.
அறிவியல் ஆய்வுகளின்படி, முழு தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்தை ஆதரித்து, நாள்பட்ட வயிற்றுக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கின்றன. ஆயினும், திடீரென நார்ச்சத்து உட்கொள்வதை அதிகரிப்பது செரிமான மண்டலத்திற்கு ஒரு சுமையாக மாறி, சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சர்க்கரை இல்லாத சூயிங் கம், மிட்டாய்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சார்பிட்டால், மானிட்டால், சைலிட்டால், மால்டிட்டால் போன்ற சர்க்கரை ஆல்கஹால்கள் உள்ளன. இந்த இனிப்பூட்டிகள் சிறுகுடலில் பகுதியளவு மட்டுமே உறிஞ்சப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அவற்றில் மீதமுள்ள உறிஞ்சப்படாத பகுதி, பெருங்குடலை அடைந்து, அங்கு குடல் பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, குடலுக்குள் நீரை இழுக்கக்கூடும். இது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கட் அண்ட் பீடியாட்ரிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இதுகுறித்தான ஓர் ஆய்வு, சார்பிட்டால் உறிஞ்சப்படாமையுடன் தொடர்புடைய இரைப்பை குடல் அறிகுறிகளை ஆவணப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், சார்பிட்டால், மானிட்டால், சைலிட்டால் போன்ற சர்க்கரைக்கான மாற்றுகள் அதிகப்படியான குடல் வாயுவின் பொதுவான காரணங்களாக இருப்பதாக மேயோ கிளினிக் வகைப்படுத்துகிறது.
இவை மட்டுமின்றி, கார்பனேற்றப்பட்ட பானங்களும் செரிமானக் கோளாறுகளுக்குப் பங்களிக்கக்கூடும் என்று மேயோ கிளினிக்கின் தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, "குளிர்பானங்கள் வயிற்றில் வாயு உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதோடு, கார்பனேற்றப்பட்ட பானங்கள் செரிமானப் பாதைக்குள் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்துவதால், அவை ஏப்பத்திற்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, "அவற்றை அதிகளவில் உட்கொள்ளும்போது இந்த அதிகப்படியான வாயு வயிறு உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்."

பட மூலாதாரம், Getty Images
வயிற்று அசௌகரியங்களை தவிர்ப்பது எப்படி?
இரைப்பை குடல் மருத்துவர் அருள் பிரகாஷின் கூற்றுப்படி, செரிமான எதிர்வினைகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன.
அதாவது, "குடல் நுண்ணுயிரிகளின் அமைப்பு, செரிமான வேகம், உணவுப் பழக்கங்கள், உணவு ஒவ்வாமைகள் என ஒருவருக்கு எவ்வளவு வாயு ஏற்படுகிறது என்பதில் பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன."
இரைப்பை குடல் மருத்துவர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான வாயு மற்றும் வயிறு உப்புசப் பிரச்னைகளை எளிய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக, "மிக வேகமாக உண்பது மக்கள் அதிகப்படியான காற்றை விழுங்க வித்திடுகிறது. அந்தக் காற்று செரிமானப் பாதையில் சேர்ந்து வயிறு உப்புசம் மற்றும் ஏப்பத்திற்கு வழிவகுக்கும். எனவே, உணவை நன்கு மென்று, நிதானமான வேகத்தில் உண்பது இத்தகைய அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்கலாம்."
இதேபோல, ஒரு சிலருக்கு சில குறிப்பிட்ட உணவுகள் இதற்கான தூண்டுதலாக இருக்கலாம். சிலர், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைச் சாப்பிடுவதால் இந்த அறிகுறிகளை அனுபவிக்கலாம், அதுவே சிலர் பால் பொருட்களால் அல்லது பருப்பு வகைகளால் அதை எதிர்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் அருள் பிரகாஷ்.
அவரது கூற்றுப்படி, அனைவரிடத்திலும் சமமாக ஒன்றுபோல வயிற்று அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பொருள் என்று எதுவுமில்லை.
ஆகையால், "சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்ட பிறகு இத்தகைய அறிகுறிகள் தோன்றுவது தொடர்ந்தால், அவற்றின் அளவைக் குறைப்பது அல்லது உணவு தயாரிப்பு முறைகளை மாற்றுவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். ஒருவேளை இது தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, வாயு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவை பொதுவாக பாதிப்பில்லாதவையே. ஆனாலும், அவற்றுடன் சேர்த்து, "காரணமற்ற எடை இழப்பு, நாள்பட்ட வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம் வருவது, கடுமையான மலச்சிக்கல், வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்".
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு