கற்பிட்டி – தளவில கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட முகாமின் கடற்படை வீரர்களால் கடந்த 17ஆம் திகதி கற்பிட்டி – தளவில கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 28 சந்தேகத்துக்கிடமான மூடைகளை சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 496 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 6,000 வெளிநாட்டு சிகரெட் பொதிகள், 1,958 பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 1,146 பூச்சிக்கொல்லி திரவப் போத்தல்கள் மற்றும் 15,180 பூச்சிக்கொல்லி பொதிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமாக இடம்பெறும் கடத்தல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்காக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.