அதிக மழைவீழ்ச்சியினால் பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கே இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய ஆறு பயிர்ச்செய்கைகளுக்கான சேத விபரங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர் இந்த இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், ஆரம்பக் கட்டத்திலிருந்த பயிர்ச்செய்கை நிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களில் இருந்து நீர் வடிந்தோடிய பின்னர், சேதமடைந்த துல்லியமான நிலப்பரப்பை மதிப்பிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் பயிர்ச்சேத விபரங்களை, எதிர்வரும் 14 நாட்களுக்குள் தத்தமது பகுதி விவசாய சேவை மையங்களில் உள்ள சேத விபரப் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். இத்திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து எவ்வித காப்புறுதி கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் விவசாயிகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே, இதுகுறித்த தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து, விவசாயிகளுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.