பட மூலாதாரம், Getty Images
ஓமன் வளைகுடாவில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும், ராஜீய நிபுணர்களும் இதனை இந்தியாவுக்கான ஒரு எச்சரிக்கை என்று வர்ணித்துள்ளனர்.
ஜூன் 9 அன்று அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலை அமெரிக்க ராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியது; அதனைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த உரையாடலின் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் தான் 'கடுமையான எதிர்ப்பை' பதிவு செய்ததாகவும், இத்தகைய 'கொடிய தாக்குதல் நியாயமற்றது' என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை எஸ். ஜெய்சங்கருக்கும் ரூபியோவுக்கும் இடையிலான உரையாடல் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகளை மீறுவதையும், இரானிய எண்ணெயை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ரூபியோ தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசினார். ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கோ ரூபியோவின் கருத்துகள் இந்தியாவில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன; அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகளும் முன்னாள் தூதர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் 9 அன்று ஓமன் கடற்கரைக்கு அப்பால் செடபெல்லோ (Satebello) என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அக் கப்பலில் 24 இந்தியர்கள் இருந்தனர்; அவர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.
இது முதல் சம்பவமல்ல; ஜூன் 8 மற்றும் ஜூன் 11 ஆகிய தேதிகளில், வளைகுடா பகுதியில் இந்திய பணியாளர்களை கொண்ட மேலும் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன; எனினும், அவற்றில் உயிரிழப்புகள் ஏதுமின்றி அனைவரும் மீட்கப்பட்டனர்.
ரூபியோ கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றின்படி, "அந்த நீரிணையில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேண அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளின்போது, அனைத்து வணிகக் கப்பல்களும் அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் (எஸ். ஜெய்சங்கருடனான உரையாடலின்போது) வலியுறுத்தினார்."
"அமெரிக்காவின் முற்றுகையை மீறுவதையும், இரானிய எண்ணெயை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயல்ளர் வலியுறுத்தினார்."
முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்த உரையாடல் குறித்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று மாலை (வெள்ளிக்கிழமை) அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேசினேன். வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவின் கடும் எதிர்ப்பை நான் மீண்டும் வலியுறுத்தினேன்." என பதிவிட்டுள்ளார்.
"வணிகக் கப்பல் போக்குவரத்தை குறிவைக்கும் இத்தகைய உயிரைப் பறிக்கக்கூடிய நடவடிக்கை எவ்வகையிலும் நியாயப்படுத்தத்தக்கதல்ல."
அமெரிக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் நிகழ்வாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் அமெரிக்கா – இந்தியா இடையிலான ராஜீய ரீதியிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
'நண்பர் எப்படி இவ்வளவு உணர்வற்றவராக இருக்க முடியும்?' – சசி தரூர்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கையை உணர்வற்றது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விமர்சித்துள்ளதுடன், இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சசி தரூர் தனது சமூக ஊடக பக்கத்தில், "அமெரிக்காவின் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் படித்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அப்பாவி இந்தியர்களின் உயிரிழப்பு குறித்து அதில் துளியளவும் வருத்தமோ அல்லது அனுதாபமோ இல்லை. ஒரு 'நண்பரும்' மற்றும் உத்திசார் கூட்டாளியும் இவ்வளவு உணர்ச்சியற்ற முறையில் எப்படி இருக்க முடியும்?" என தெரிவித்துள்ளார்.
"விதிமுறைகளை மீறிய அந்த வணிகக் கப்பலை, உயிர்ச்சேதம் ஏதுமின்றி வேறு ஏதேனும் வழியில் தடுத்திருக்க முடியாதா? பொதுமக்களான பணியாளர்களைக் கொல்லும் வகையிலான ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலாக, அந்தக் கப்பலின் உந்துவிசை அமைப்பையோ அல்லது திசைமாற்றும் அமைப்பையோ செயலிழக்கச் செய்திருக்க முடியாதா?" என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் அவர், "இந்த முக்கியமான கடல் வழித்தடங்கள் வழியாகச் செல்லும் ஏறக்குறைய அனைத்து வணிகக் கப்பல்களிலும் இந்தியக் கப்பல் பணியாளர்கள் உள்ளனர். இனி அவர்களும் அமெரிக்க ஏவுகணைகளுக்கு எளிதான இலக்குகளாகக் கருதப்படுவார்களா?" என பதிவிட்டுள்ளார்.
"இந்த மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது; எஸ். ஜெய்சங்கர் இதை மார்கோ ரூபியோவிடம் சொல்லியிருப்பார் என்று நான் நம்புகிறேன்," என்று சசி தரூர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையிலான உரையாடல் குறித்த விவரங்கள் வெளிவந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இதனை இந்தியாவுக்கு 'அவமானகரமானது' என்று குறிப்பிட்டார்.
"தனது தாக்குதலில் மூன்று இளம் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா கோரியிருக்க வேண்டும். மாறாக, வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ, அமெரிக்க ராணுவ உத்தரவுகளை மீறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இது கட்டளை மொழி, வருத்தம் இல்லை" என்று பவன் கேரா கூறினார்.
அமெரிக்கா, மக்களின் மரணத்தை ஏற்றுக்கொள்ளவோ, அதற்கான பொறுப்பை ஏற்கவோ அல்லது எந்தவித வருத்தத்தையும் தெரிவிக்கவோ இல்லை என்று அவர் கூறினார்.
பவன் கேரா, "இந்தியாவின் எதிர்வினை இவ்விவகாரத்தை இன்னும் அதிக தர்மசங்கடமானதாக மாற்றியது. வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, அத்தகைய உயிரைப் பறிக்கக்கூடிய நடவடிக்கை 'முறையானது அல்ல' என்று மட்டுமே வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்." என எழுதியுள்ளார்.
"சரியானது அல்ல? விமான நிலையத்தில் விலையுயர்ந்த சாண்ட்விச் ஒன்றை வாங்கிய பிறகுதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்; பொதுமக்களைக் கொல்லும் ஒரு ராணுவத் தாக்குதலுக்கு அல்ல."
"அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரிக்கச் சரியான சொற்கள் 'சட்டவிரோதமான', 'பொறுப்பற்ற' மற்றும் 'ஏற்றுக்கொள்ள முடியாத' என்பவைதான்," என்று பவன் கேரா கூறினார். "அதற்குப் பதிலாக, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைத் தவிர வேறு யாரையும் புண்படுத்தாத சொற்களே பயன்படுத்தப்பட்டன."
அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை வெளியான பிறகு, பலர் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.
தொழிலதிபர் சபீர் பாட்டியா, "நமது சிறந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்னதான் கூறினாலும், அமெரிக்கா இந்தியாவை ஒரு நண்பனாகக் கருதவில்லை என்பதையே இது காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனது எக்ஸ் பக்கத்தில், "இது அவமானகரமானது; மிகவும் அவமானகரமானது. மூன்று மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதைவிடவும் அவமானகரமான விஷயம் என்னவென்றால், ஆவேசமாகச் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ளும் நமது வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்துக் கூட குறிப்பிடவில்லை; அவர் 'சரி சார் – உங்கள் விருப்பப்படியே சார்' என்று மட்டுமே கூறினார்." என பதிவிட்டுள்ளது.
'எப்படிப்பட்ட நண்பர்?'

பட மூலாதாரம், @CENTCOM
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் பக்கத்தில், "எந்த அனுதாபமும் இல்லை; எந்த வருத்தமும் இல்லை. அப்பாவி இந்திய மாலுமிகளின் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதல்களை, அமெரிக்கக் கடற்படை முற்றுகையை மீறிய செயல் என்று கூறி நியாயப்படுத்தவே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் முயன்றுள்ளார்." என பதிவிட்டுள்ளார்.
"வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். அமெரிக்கத் தூதர்களை வரவழைப்பது மட்டும் நிச்சயமாகப் போதாது. வெறும் கண்டனப் பார்வையுடன் மட்டும் நின்றுவிடாமல், இந்திய அரசு அதையும் தாண்டிச் செயல்பட வேண்டிய நேரம் இதுவல்லவா?"
இந்தோ-பசிபிக் விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் டெரெக் ஜே. கிராஸ்மேன் தன் எக்ஸ் பக்கத்தில், "ரூபியோவின் கருத்துகள் உணர்வற்றவை; அவை அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை மேலும் தூண்டும். இந்தியாவுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு அவர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கு டிரம்பின் அமெரிக்கா எத்தகைய 'நண்பனாக' இருக்கிறது?" என பதிவிட்டுள்ளார்.
பேராசிரியர் டெரெக் ஜே. கிராஸ்மேன் மற்றொரு பதிவில், "இந்தியா அமெரிக்காவிடம் 'சட்டத்தின் ஆட்சி' குறித்த விவகாரத்தை எழுப்புவது சரியானதுதான்; ஆனால் பிரச்னை என்னவென்றால், டிரம்பின் அமெரிக்கா இப்போது அதில் உண்மையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை." என்றார்.
"அதற்குப் பதிலாக, டிரம்ப் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 'வலிமையே சரி' (might is right) என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. இது அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையாகும்," என்று அவர் கூறுகிறார்.
இந்திய முன்னாள் வெளியுறவு செயலாளரும் வெளியுறவு விவகார நிபுணருமான நிருபமா ராவ், பேராசிரியர் டெரெக் ஜே. கிராஸ்மேனின் பதிவைப் பகிரும்போது, ரூபியோ-ஜெய்சங்கர் இடையிலான உரையாடல் சர்வதேச உறவுகளில் காணப்படும் ஒரு பரந்த போக்கை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார்.
"தடைகள், முற்றுகைகள், இறக்குமதி வரிகள் மற்றும் கட்டாயப்படுத்துதல் ஆகிய மொழிகளில் அதிகாரம் முழு வீச்சில் பேசுகிறது. இதன் விளைவுகளை விளக்குவதற்கு ராஜீய ரீதியிலான நடவடிக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மீது கவனம் செலுத்துவதே (அமெரிக்காவின்) அதிகாரப்பூர்வமான பதிலாக உள்ளது," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நிருபமா ராவின் கூற்றுப்படி, "அமெரிக்கா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; மென்மையான தொனியில் கூடப் பேசுவதில்லை."
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, நன்கு அறியப்பட்ட வியூக விவகார ஆய்வாளரான பிரம்மா செல்லனி இவ்வாறு கூறினார்: "ஓமன் கடல் பகுதியில், இந்தியக் குழுவினரைக் கொண்ட மூன்று வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தொடர் தாக்குதல்களில் மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மோதி அரசாங்கம் வெளிப்படுத்திய பலவீனமான எதிர்வினைக்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தியே, இந்த கோரிக்கைக்கும் அதிகாரப்பூர்வமான கண்டனத்துக்கும் காரணமாக அமைந்திருக்கலாம்." என்றார்.
மேலும் அவர், "இருப்பினும், (இந்தியாவின்) எதிர்வினை பலவீனமாகவே உள்ளது. ஆயுதமற்ற மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பொறுப்பை நிலைநாட்ட வேண்டியதற்குப் பதிலாக, அது விவாதத்துக்குரிய ஒரு விஷயமாகக் கருதப்படும் வகையில், இந்தச் செயல் 'நியாயமற்றது' என்று மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கோர வேண்டும் என்றோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றோ அமெரிக்காவிடம் இதுவரை எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை; அதேவேளையில், வழக்கமான தூதரக நடைமுறைகளைத் தாண்டி இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல புது தில்லிக்குத் திட்டம் ஏதும் உள்ளதற்கான அறிகுறியும் தென்படவில்லை." என எழுதியுள்ளார்.
இந்தியாவுக்கான எச்சரிக்கையா?

பட மூலாதாரம், @FSUIINDIA
அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸின் தூதரகச் செய்தியாளரான எட்வர்ட் வோங், மார்கோ ரூபியோவின் நிலைப்பாடு குறித்த தனது சமூக ஊடகப் பதிவில், அதனை 'இந்தியாவுக்கான எச்சரிக்கை' என்று குறிப்பிட்டார்.
அவர், "டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையிலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது; குறிப்பாக, ஓமன் கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ரூபியோ இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்." என தெரிவித்துள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழின் தூதரக விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதரின் கூற்றுப்படி, ஜெய்சங்கர் மற்றும் ரூபியோ இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை, இருவருக்கும் இடையே உள்ள ஆழமான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது.
"அந்த நீரிணையில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளின்போது, அனைத்து வணிகக் கப்பல்களும் அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று செயலாளர் ரூபியோ வலியுறுத்தினார். அமெரிக்காவின் முற்றுகையை மீறுவதையோ அல்லது இரானிய எண்ணெயை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பாதுகாப்புத் துறை நிபுணரான மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, இந்திய மாலுமிகளின் மரணம் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவு ஒன்றில் அவர், "இரானின் எண்ணெயில் 90 சதவிகிதம் சீனாவுக்குச் செல்கிறது. தகவல்களின்படி, 100-க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் அந்தத் தடையை மீறியுள்ளன. சீன அல்லது ரஷ்யக் கப்பல்கள் எதுவும் தாக்கப்படவில்லை." என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "அமெரிக்காவுடன் நட்பு கொள்ள இந்தியா எல்லாவற்றையும் முயற்சித்தது, ஆனால் இந்திய மாலுமிகளைக் கொன்றதன் மூலம் அமெரிக்கா பதிலளித்தது." என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அதன் நண்பராக இருப்பது உயிருக்கே ஆபத்தானது என்று கிஸ்ஸிங்கர் கூறியது சரிதான். ஏழை இந்தியர்களின் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு சிந்தனைப் பிரிவினரும் உள்ளனர்; ஐரோப்பாவில் (ஜி-7) நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு இவர்களின் மரணம் இடையூறாக இருக்கக்கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்." என தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு