வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால்
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் பணிகள் தற்போது முற்றாக பலவீனமடைந்துள்ளன. நிதியமைச்சின் செயலாளரின் தகைமை சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இலங்கை நிர்வாக சேவை அல்லது அரச சேவையில் தொழில்முறையில் சிரேஷ்ட மற்றும் அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியை நிதி அமைச்சின் செயலாளராக உடனடியாக நியமிப்பது பொருத்தமானதாக அமையும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.Beaches & Islands
சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் திறைசேரிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையே நிறுவன ரீதியான பரஸ்பர கருத்து முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றியக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு திறைசேரிக்கு நான்கு வார கால அவகாசமும், அதன் பின்னர் மேலும் இரு சந்தர்ப்பங்களில் தலா இரண்டு வாரங்களுக்கும் என்ற அடிப்படையில் காலவகாசம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் தகவல்களை மாற்றுவதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்கும் மற்றும் தகவல்களை மறைப்பதற்கும் சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.5 மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்று தற்போது 8 மாதங்களுக்கும் மேல் கடந்துவிட்டது.
இன்றுவரை இது தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டவாக்கத்துறை தவறியுள்ளது.
பாராளுமன்ற நிதிச் குழுவின் ஊடாக காலத்தை வீணடித்து நடத்தப்படும் இந்த நாடக அரங்கேற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அடுத்த பாராளுமன்ற அமர்வு தினத்திலாவது இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும்.
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கடன் மறுசீரமைப்பின் மிக முக்கியமானதொரு காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் நிபந்தனையின் அடிப்படையில், இதுவரைகாலம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ நடவடிக்கைகள், திறைசேரியின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான “அரசு கடன் முகாமைத்துவ அலுவலகத்திடம்” அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
அரச கடன் முகாமைத்துவம் என்பது, அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்களை உரிய நேரத்தில், சரியான தரப்பினருக்குத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அவற்றின் பதிவுகளைப் பேணிப் பாதுகாக்கும் செயல்முறையாகும்.
இந்த கடமைகள் மத்திய வங்கியிலிருந்து திறைசேரிக்கு மாற்றப்படும் காலத்தில், முறையான கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படாமை மற்றும் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பொதுப்பணம் மோசடிக்காரர்களால் வேறு வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமல்ல,நிர்வாக அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகளின் நேரடி விளைவாகும். ஒரு அதிகாரியின் உயிரைக் கூட பலிவாங்கிய இந்தத் துயரச் சம்பவம், வெறும் நிதி இழப்போடு மட்டும் இதனை வரையறுக்க முடியாது.
இந்த நிதி மோசடி தொடர்பில் நாங்கள் 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி முதன்முறையாக மக்களுக்கு வெளிப்படுத்தினோம். இது குறித்து சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அதிகாரிகளிடமிருந்து அதற்கு எவ்வித உத்தியோகபூர்வ பதிலும் கிடைக்கவில்லை. அதேபோன்று, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கும் இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளோம். ஏனைய நிறுவனங்களுக்கும் கடிதங்கள் மற்றும் பகிரங்க அறிக்கைகள் மூலம் அறிவித்துள்ளோம்.
எவ்வாறாயினும், இந்த வெளிப்படுத்தலை மூடிமறைக்கும் அல்லது தாமதப்படுத்தும் உத்தியாக, அது தொடர்பான இரகசிய அறிக்கையை வழங்குவதற்காக அதிகாரிகள் சுமார் ஒரு மாத கால அவகாசத்தை எடுத்துள்ளனர்.
அதன் பின்னரும், திறைசேரியின் செயலாளர் அந்த அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவின் வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், அதனை உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு அவர் அறிவித்ததன் பின்னரும், அதற்காக மேலும் 10 நாட்களுக்கு காலவகாசம் திறைசேரியால் கோரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 148 வது பிரிவின் கீழ் நாட்டின் நிதி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வார காலப்பகுதியில் இந்தச் சம்பவம் தொடர்பில் மக்களுக்கு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க பாராளுமன்றமும் தவறியுள்ளது.
எனவே, உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையை மீறும் ஒரு செயற்பாடாகும். இந்த மோசடிக்கு இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகிய இரு நிறுவனங்களுமே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன், இதில் இருந்து எவரும் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது:Beaches & Islands
இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பு மற்றும் கடமையை நிறைவேற்ற தவறியுற்றது. புதிய சட்டத்தின் மூலம் கடன் கட்டுப்பாடு திறைசேரியிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்தது, தமக்கு இனிமேல் கடன் முகாமைத்துவம் தொடர்பான பொறுப்பு எதுவும் இல்லை என மத்திய வங்கி வாதிடுகிறது.
2023ஆம் ஆண்டின் மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள சுயாதீனத்தன்மையைக் கேடயமாகப் பயன்படுத்தும் மத்திய வங்கி, தாங்கள் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மட்டுமே செயற்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இது முற்றிலும் தவறானது.
அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் வங்கி மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி என்பன இந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களில் உள்ள சந்தேகத்திற்கிடமான தன்மை குறித்து இரகசிய செய்திகள் மூலம் தெளிவாக எச்சரித்திருந்த போதிலும், அதிகாரிகள் அவற்றை முற்றாகப் புறக்கணித்து புதிய தரப்பினருக்கு பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
முறையான ஒழுங்குவிதிகளை பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக இந்த கடன் நடவடிக்கைகளை பொறுப்பேற்பதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது அவர்களுக்கு கடன் முகாமைத்துவம் குறித்த போதுமான தொழில்நுட்ப அறிவு இருந்திருக்கவில்லை.
மத்திய வங்கி தனது 75 ஆண்டுகால கடன் முகாமைத்துவ அனுபவத்தை புறம்தள்ளிவிட்டு, சட்டப்பூர்வமாக அதிகாரங்கள் நீக்கப்பட்ட காரணத்தினாலேயே சர்வதேச பணப்பரிமாற்றங்களின் போது தன் பொறுப்பில் இருந்து கைகளைக் கழுவிவிட முடியாது.
அதேபோன்று, வலுக்கட்டாயமாகப் பணிகளைப் பொறுப்பேற்ற திறைசேரி அதிகாரிகளும் இந்த நிதி இழப்பிற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் பணிகள் தற்போது முற்றாக பலவீனமடைந்துள்ளன. பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தவரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி அறிக்கை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. நிதி அமைச்சின் நிதி அறிக்கை தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நிபந்தனைகளுக்கான விடயங்களை முன்வைத்துள்ளது.
இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, இலங்கை நிர்வாக சேவை அல்லது அரச சேவையில தொழில்முறையில் சிரேஷ்ட மற்றும் அனுபவம் கொண்ட ஒரு அதிகாரியை நிதி அமைச்சின் செயலாளராக உடனடியாக நியமிப்பது பொருத்தமானதாக அமையும்.
மக்களின் வரிப்பணம் மற்றும் தேசிய சொத்துக்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அனுமதித்து, சாக்குப்போக்குகளைக் கூறி தப்பிச் செல்ல எந்தவொரு அதிகாரிக்கும் உரிமையில்லை என்பதை நாங்கள் மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்என்றுள்ளது.