மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள்

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், keralatourism

படக்குறிப்பு, இடுக்கி ராமக்கல்மேடு

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது.

இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன.

குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம்.

இடுக்கி ராமக்கல்மேடு

‘டைட்டானிக்’ புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம்.

‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்’, ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

திண்டுக்கல் மலைக்கோட்டை

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், tamilnadutourism

படக்குறிப்பு, திண்டுக்கல் மலைக்கோட்டை

மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.

கும்பக்கரை அருவி

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், tamilnadutourism

படக்குறிப்பு, கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி.

இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும்.

கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது.

அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

தேனி மேகமலை

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேனி மேகமலை

தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும்.

தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்’, தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள்.

யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.

மதுரை யானைமலை

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும்.

இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது.

சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

சமணர் மலைகள்

மதுரையை சுற்றி 'மிஸ்' செய்யக்கூடாத ஐந்து சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், tamilnadutourism

மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம்.

பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.