மும்பை: 700 பேரை பலி கொண்டு, தங்க மழை பொழியச் செய்த குண்டுவெடிப்பு – எப்படி நடந்தது?

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஹர்ஷல் அகுடே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில், 1945இல் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

உலக வரலாற்றில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது நடந்த அணுகுண்டு தாக்குதல்தான் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா அந்த இரண்டு அணுகுண்டுகளை ஜப்பான் மீது வீசுவதற்கு முன்பு வரை அன்றைய காலகட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவம் எது தெரியுமா?

அது இந்தியாவில் நடந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இரண்டாம் உலகப் போரின்போது, 1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை விக்டோரியா கப்பல் துறையில் (dock) பிரிட்டிஷ் சரக்குக் கப்பல் எஸ்.எஸ். ஃபோர்ட் ஸ்டைகின்- ‘SS Fort Stikine’ தீப்பிடித்து, இரண்டு பெரிய வெடிப்புகளுக்கு வழிவகுத்தது. உலகின் சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவங்களில் இதுவும் ஒன்று.

காலப் போக்கில் பலர் இந்தச் சம்பவத்தை மறந்துவிட்டனர். அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் மிகக் குறைவு. ஆனால் அந்த நிகழ்வின் பயங்கரத்தை அதுபற்றிய கட்டுரைகளில் இருந்து உணர முடியும்.

கடந்த 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி, பம்பாய் கப்பல் துறையில் ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலில் இரண்டு பயங்கர வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், இதுபற்றித் தற்போது வரை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. அந்த வெடிப்பின் அதிர்வு புனே வரை உணரப்பட்டது. மும்பையில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இரண்டு நாட்களுக்கு டிராம் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

விக்டோரியா கப்பல் துறையில் நிகழ்ந்த இந்தக் கோர சம்பவத்தில் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்யவும், மீண்டும் கப்பல் துறையைக் கட்டி முடிக்கவும் ஆறு மாத காலம் ஆனது. அதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த வெடிப்பில் மும்பையைச் சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 முதல் 21 வரை தீயணைப்பு சேவை வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலின் முழு கதையையும் தெரிந்து கொள்வோமா?

பிரிட்டிஷ் சரக்குக் கப்பல் ‘எஸ்.எஸ். ஃபோர்ட் ஸ்டைகின்’

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்
படக்குறிப்பு, வரலாற்று அறிஞரும், மும்பை வரலாற்று ஆராய்ச்சியாளருமான நிதின் சாலுகே எழுதிய ‘அறியப்படாத மும்பை’ நூல்

அது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஃபோர்ட் ஸ்டைகின் என்ற கப்பல் 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டனின் லிவர்பூல் பகுதியில் உள்ள பிர்கன்ஹெட் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டது. பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமான இந்தக் கப்பல், இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக அனுப்பப்பட்டது. இந்த கப்பல் பிர்கன்ஹெட்டில் இருந்து கராச்சி வழியாக மும்பைக்குள் நுழையும்படி திட்டமிடப்பட்டிருந்தது.

வரலாற்று அறிஞரும், மும்பை வரலாற்று ஆராய்ச்சியாளருமான நிதின் சாலுகே எழுதிய ‘அறியப்படாத மும்பை’ என்ற புத்தகத்தில் ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.

நிதின் சாலுகேவின் கூற்றுப்படி, “ஃபோர்ட் ஸ்டைகின் 424 அடி நீளமும், 7,124 டன் எடையும் கொண்டது. அதில் போர் விமானங்கள், கப்பல்களின் உதிரி பாகங்கள், பல்வேறு திறன் கொண்ட வெடிகுண்டுகள், துப்பாக்கித் தோட்டாக்கள், ஆயுதங்கள், நிலம் மற்றும் நீர் கண்ணி வெடிகள், அதீத அழிக்கும் திறன் கொண்ட சுமார் 1,400 டன் வெடிமருந்துகள் இருந்தன.

வெடிபொருட்களைத் தவிர, ஒரு மில்லியன் பவுண்டுகள் (million pounds) மதிப்புள்ள சுமார் 382 கிலோ தங்கக் கட்டிகளும் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டன. இந்தத் தங்கம் பிரிட்டன் வங்கியில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக அனுப்பப்பட்டது. கப்பலில் மொத்தம் 30 மரப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றிலும், ஏறக்குறைய 12 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் நிரப்பப்பட்டிருந்தன. இந்த மரப்பெட்டிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரும்புப் பெட்டிகளின் உள் வைக்கப்பட்டு, அவற்றுக்கு வெல்டிங் மூலம் சீல் வைக்கப்பட்டன. வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் இந்தப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

45 வயதான கேப்டன் அலெக்சாண்டர் நைஸ்மித், கப்பலில் உள்ள பொருட்களைப் பாதுகாக்கும் துறையின் தலைவராக இருந்தார். கப்பலில் ஆபத்தான சரக்குகள் இருந்ததால் ஆரம்பம் முதலே அவர் பதற்றத்துடன் இருந்தார். மற்றொரு புறம், போர் நடந்து கொண்டிருந்ததால், பயணத்தின் போது எதிரி நாடுகள் கப்பலைத் தாக்கினால் என்ன நடக்கும் என்று எண்ணி கவலைப்பட்டார்.

கப்பலில் இருக்கும் அபாயகரமான சரக்குகளைக் கருத்தில் கொண்டு, கப்பலில் உள்ள பணியாளர்கள் புகை பிடிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

கராச்சி துறைமுகத்தில் ஏற்பட்ட சலசலப்பு

இந்தக் கப்பல் 1944-ஆம் ஆண்டு, பிப்ரவரி 24-ஆம் தேதி லிவர்பூலில் இருந்து புறப்பட்டு மார்ச் 30-ஆம் தேதி கராச்சியை அடைந்தது. போர் விமானங்கள், கப்பல் உதிரி பாகங்கள் மற்றும் பிற சிறிய பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன.

பிரிட்டனில் கப்பல் புறப்படுவதற்கு முன்னர் தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் கப்பலை பழுதுபார்க்க முயற்சி செய்தார், ஆனால் அங்கு கப்பல் அவசரமாக பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டிய சூழல் இருந்ததால், தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள நேரம் இல்லை. எனவே கராச்சியில் கப்பலை சரி செய்ய முயன்றார், ஆனால் அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அலெக்ஸ் மேலும் பதற்றமானார்.

கப்பலில் உள்ள தங்கம் மற்றும் வெடிப் பொருட்கள் ஆகியவற்றை முடிந்த அளவுக்கு விரைவில் மும்பையில் தரையிறக்க வேண்டும். பழுது பார்க்கும் செயல்பாட்டுக்கு நேரம் எடுக்கும் என்பதால், கப்பல் மும்பைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். அதனால் கப்பலைப் பழுது பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இருப்பினும், கப்பல் மார்ச் 30-ஆம் தேதி கராச்சியை அடைந்து, அடுத்த 10 நாட்களுக்கு அங்கேயே இருந்தது. காரணம், கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டப் பிறகு கணிசமான இடம் காலியாக இருந்தது. ஏற்கெனவே இரண்டாம் உலகப் போரின் காரணமாக, சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஃபோர்ட் ஸ்டைகினில் காலியாக உள்ள இடத்தை நிரப்பி மும்பைக்கு சரக்குகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியை கராச்சி துறைமுக அதிகாரிகளால் எதிர்க்க முடியவில்லை. சரக்குகளை ஏற்றுவதற்காக கராச்சியில் 10 நாட்களுக்கு கப்பலை வைத்திருந்தனர்.

கப்பல் பிரிட்டனை விட்டு வெளியேறிய போது, கராச்சியிலிருக்கும் சரக்குகளும் கப்பலில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை, எனவே அலெக்ஸ் மிகவும் கோபமடைந்தார், ஆனால் அதிகாரிகளின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் நடக்கவில்லை. போர் நடப்பதால் கப்பலில் ஒரு அடி இடம் கூட காலியாக விடக்கூடாது என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, அலெக்ஸின் எதிர்ப்பையும் மீறி, 87,000 பருத்தி மூட்டைகள், 300 டன்களுக்கு மேல் கச்சா கந்தகம், 10,000 டன் மரங்கள், 100 கலன்களில் கச்சா எண்ணெய், பல்வேறு உலோகக் கழிவுகள், அரிசி மூட்டைகள் மற்றும் மீன் உரம் ஆகியவை கப்பலில் ஏற்றப்பட்டன. வெடிபொருட்கள் அடங்கிய பிரிவில் பருத்தி சாக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

கப்பலில் ஏற்கனவே வெடிமருந்துகள் அதிக அளவில் ஏற்றப்பட்டிருந்தன. இப்போது அது பருத்தி, எண்ணெய், பிசின் மற்றும் மரம் போன்ற அதிக எரியக்கூடிய பொருட்களால் நிரப்பப்பட்டது. இதனால் அலெக்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் அது பயனளிக்கவில்லை.

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை துறைமுகத்தின் இன்றைய தோற்றம் (கோப்புப் படம்)

மும்பை துறைமுகத்தில் பரபரப்பு

ஃபோர்ட் ஸ்டைகின் கப்பல் ஏப்ரல் 9-ஆம் தேதி கராச்சியில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 12-ஆம் தேதி அதிகாலையில் மும்பை துறைமுகத்திற்குள் நுழைந்தது. கராச்சி துறைமுகத்தைப் போலவே, மும்பையில் ஃபோர்ட் ஸ்டைகின் கப்பல் குறித்து பெரும் குழப்பம் நிலவியது.

வெடிபொருட்களுடன் ஒரு கப்பல் துறைமுகத்திற்கு வரும்போது சிவப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும். அவ்வாறு காண்பித்த பின், அந்த கப்பலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சரக்குகள் தரையிறக்கப்படும். ஆனால் ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலில் அத்தகைய சிவப்புக் கொடி காட்டப்படவில்லை. அதனால் கப்பல் நங்கூரமிட நீண்ட நேரம் பிடித்தது. விக்டோரியா துறைமுகத்தில், கப்பல் நிறுத்தப்படுவதற்கான முதல் இடத்தில் நங்கூரமிட்ட கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.

முதலில் கப்பலில் இருந்து பருத்தி மூட்டைகள் மற்றும் எண்ணெய் டிரம்களை இறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனுடன், வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பொருட்களை இறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்குத் தேவையான சிறிய படகுகள் கிடைக்காததால், அந்தச் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், கப்பலின் என்ஜின் பழுது பார்ப்புக்கு என்ஜின் பாகங்கள் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இயந்திர பாகங்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டதால், கப்பலை நகர்த்த முடியவில்லை. அடுத்து நடக்க இருக்கும் அபாயத்துக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

மறுநாள் காலை, கப்பலில் இருந்த பெரும்பாலான சரக்குகள் அப்படியே இருந்தன. தங்கத்தால் நிரப்பப்பட்ட இரும்புப் பெட்டிகளை யாரும் தொடவில்லை. கப்பலில் இருந்து இறக்கப்பட்ட பிறகுதான் வங்கி அதிகாரிகள் பெட்டிகளைத் திறந்து சரிபார்ப்பார்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், கப்பலில் உள்ள இரும்பு பெட்டிகளை திறக்க வெல்டிங் இயந்திரம் கொண்டு வர வேண்டும். வெல்டிங்கில் வெளியாகும் தீப்பொறிகள் அருகில் உள்ள வெடிக்கும் பொருட்களில் பட்டு வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே அலெக்ஸ் வெல்டிங் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வெடிப் பொருட்களை இறக்கி வைத்த பிறகே அதிகாரிகள் முன்னிலையில் தங்கப் பெட்டிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 13-ஆம் தேதி மதியம் வரை வெடிபொருட்களை இறக்குவதற்கு தேவையான சிறிய படகுகள் வரவில்லை. அதனால் வெடிபொருட்கள் கப்பலிலேயே வைக்கப்பட்டிருந்தன. கப்பலில் இருந்த நீண்ட மரக்கட்டைகளை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் குழு மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை துறைமுகத்தின் அன்றைய தோற்றம் (கோப்புப் படம்)

பரபரப்பை ஏற்படுத்திய புகை மூட்டம்

மூன்று நாட்களாகியும், கப்பலில் இருந்து பொருட்களை இறக்கும் பணி முடியவில்லை. ஏப்ரல் 14 -ஆம் தேதி அன்று துறைமுகத்தில் ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலுடன் சேர்த்து 10-12 கப்பல்களும் நின்று கொண்டிருந்தன. காலையில் தொடங்கிய சரக்கு இறக்கும் பணி மெதுவாக நடந்துகொண்டிருந்தது. அன்று மதியம், வழக்கமாக மதிய உணவு இடைவேளையின் போது, முன்னால் நின்று கொண்டிருந்த கப்பல்களில் இருந்த இரண்டு அதிகாரிகள் ஸ்டைகின் கப்பலில் ஏதோ வித்தியாசமாக நடப்பதை உணர்ந்தனர். கப்பலின் கீழ் பகுதியில் இருந்து புகை வருவதை அவர்கள் கவனித்தனர். ஆனால் புகை சட்டென்று மறைந்ததும் அது பிரமையாக இருக்கக்கூடும் என்று எண்ணி அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

கப்பல் துறைக்கு அப்பால் காவலுக்கு நின்று கொண்டிருந்த காவல் துறையினரும் கப்பல் நின்ற திசையில் இருந்து புகை வருவதைக் கண்டனர். ஆனால் கப்பல் துறையில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக இருந்ததால், அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கருதி அவர்களும் அதனைப் புறக்கணித்தனர். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு வேலையைத் தொடர கப்பலில் ஏறிய தொழிலாளர்கள், பெரிய பொருட்களை வெளியே எடுத்தவுடன் உள்ளே இருந்து பெரும் அளவிலான புகை மூட்டம் வெளியேறியது.

உடனே தீயணைப்பு அலாரம் அடித்தது. புகை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் புகை காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. கப்பலில் இருந்த பம்ப் மூலம் தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்புப் படை வரவழைக்கப்பட்டது. மதியம் 2.25 மணியளவில் தீயணைப்புப் படையினரின் இரண்டு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.

தீயின் தாக்கம் எவ்வளவு? கப்பலில் வெடிபொருட்கள் இருந்ததா? போன்ற தகவல் இல்லாததால் கப்பலுக்குள் இருந்த தீயணைப்புப் படை, இரண்டு வெடிகுண்டுகளை மட்டுமே வெளியே அப்புறப்படுத்தியது. தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் மேலும் 10-12 குண்டுகளை வெளியே அனுப்பினர்.

கப்பலின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெட்டியில் ஏராளமான வெடிபொருட்கள், பருத்திச் சாக்குகள் மற்றும் தங்கம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. கப்பலின் இயந்திரங்கள் துண்டிக்கப்பட்டதால், கப்பலை இழுத்துச் செல்ல முடியவில்லை. இறுதியில் கப்பலின் உலோகப்பகுதி கடும் வெப்பத்தால் உருகத் தொடங்கியது, இதனால் அங்கிருந்த அனைவரும் பதறினர்.

திடீரென கப்பலுக்கு வெளியே ஒரு பெரிய நெருப்புப் பந்து தோன்றியது. எனவே கேப்டன் அலெக்ஸ் அனைவரையும் கப்பலில் இருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டார். பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வெடிப்பில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 முதல் 21 வரை தீயணைப்பு சேவை வாரமாக அனுசரிக்கப்படுகிறது

இரண்டு பெரும் வெடிப்புகள்

மாலை 4.06 மணியளவில் ஃபோர்ட் ஸ்டைகினில் முதல் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கப்பல் இரண்டு துண்டுகளாக உடைந்தது. ஒரு துண்டு கடலில் மிதந்தது, மற்றொன்று பறந்து சென்று அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடத்தில் மோதியது.

வெடிவிபத்தால் தரையில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குடிநீர் குழாய்கள் உடைந்தன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் தூக்கி எறியப்பட்டனர். இந்த வெடிப்பால் கடலில் ஏற்பட்ட பெரிய அலையின் காரணமாக அங்க்கிருந்த வேறு 10-12 கப்பல்கள் கடலில் மூழ்கின. அருகில் கிடந்த மூன்று டன் கப்பலின் பாகங்கள் உடைந்துச் சிதறின. அவை மேலே விழுந்ததால் பலர் இறந்தனர். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னரே, 4.20 மணியளவில் மீண்டும் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதன் தீவிரம் முதல் வெடிப்பை விடப் பலமடங்கு அதிகமாக இருந்தது.

வெடிவிபத்தால், துறைமுக வளாகத்தில் உள்ள மரக்கட்டைகள் மற்றும் நிலக்கரிச் சாக்குகள் தீப்பிடித்து எரிந்தன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கம்பிகள் உடைந்ததால் டிராமும் நிறுத்தப்பட்டது. மும்பையில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் வெடித்துச் சிதறி சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்தன. இந்த வெடிவிபத்தில் பாதி இடிந்த கட்டிடங்களை இடிக்கும் போது அங்கு சிதறிக்கிடந்த மற்ற வெடிகுண்டுகளும் வெடித்ததாக செய்திகள் வந்தன.

இச்சம்பவத்தில், சுமார் 20 லட்சம் மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 500 முதல் 700 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தோராயமாக கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் பலர் காணாமல் போயினர். சிலரது சடலங்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்தது. பல நாட்களாக மும்பை கடலில் தொடர்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாளிதழ்களில் இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.

இந்திய வரலாறு, மும்பை துறைமுகம், கப்பல், தங்கம், வெடிவிபத்து, இரண்டாம் உலகப்போர்

பட மூலாதாரம், MARIO TAMA

படக்குறிப்பு, ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலில் இருந்த தங்கம் என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை

கப்பலில் இருந்த தங்கம் என்ன ஆனது?

வெடி விபத்தால் தூக்கி எறியப்பட்ட உலோகத் துண்டு ஒன்று துறைமுகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பார்சி சமூக நபரின் வீட்டின் கூரை மீது விழுந்து மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்தத் துண்டை பார்த்ததும் அவர், ‘இது தன் தலையில் விழுந்திருந்தால் உயிர் போயிருக்கும்’ என்று எண்ணினார். அவருக்குச் சுய நினைவு திரும்பிய பிறகு, அந்த உலோகத் துண்டு உண்மையில் 28 பவுண்டுகள் எடையுள்ள ஒரு தங்க கட்டி என்பதை உணர்ந்தார்.

அந்தச் கப்பலில் 382 கிலோ தங்கம் இருந்த விவரம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது. அந்த பார்சி நபரின் வீட்டின் மேற்கூரையில் இருந்து விழுந்த தங்க கட்டி , ‘தங்க மழை’ என்று பலராலும் மிகைப்படுத்தி அழைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பார்சி நபரின் வீட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நடந்ததாக எந்தச் செய்தியும் இல்லை.

ஃபோர்ட் ஸ்டைகின் கப்பலின் அடிப்பகுதியில் உள்ள இரண்டாவது பெட்டியில் தங்கம் வைக்கப்பட்டிருந்தது. வெடி விபத்தில் இரும்புப் பெட்டிகள் உடைந்ததால் சில தங்கக் கட்டிகள் வெளியே விழுந்திருக்கும். ஆனால் பெரும்பாலான தங்கம் கடலில் மூழ்கியிருக்கலாம்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விக்டோரியா கப்பல்துறையில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கையின் போது ஒரு தொழிலாளி சில தங்க பிஸ்கட்களைக் கண்டார். அவை 1944 காலக்கட்டத்தைச் சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டது. இது தவிர, 1980-இல், துறைமுகத்தில் வண்டல் மண் அகற்றும் போது, பத்து கிலோ எடையுள்ள ஒரு தங்க கட்டி கிடைத்தது. அதை அரசிடம் கொடுத்த ஊழியருக்கு ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்டோரியா கப்பல் துறையில், பூமிக்கு அடியில் சில தங்கக் கட்டிகள் இருக்கலாம். இது கண்டுபிடிக்கப்படலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.