மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, சீதாலெட்சுமி
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கொக்கலாஞ்சேரி கிராமத்தில் இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

தொழிற்சாலை செயல்படும் நேரங்களில் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு முன்வைத்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி 5 கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டத்தால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

அரசு சார்பில் தொழிற்சாலையை ஆய்வு செய்த மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு உரம் தயாரிக்கும் ஆலை செயல்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்திருக்கிறது.

உரம் தயாரிக்கும் தொழிற்சாலையால் சந்திக்கும் பிரச்னைகளாக மக்கள் கூறுவது என்ன? மருத்துவக் கழிவுகள் தொழிற்சாலையில் கையாளப்படுகிறதா?

மதுரையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது கே.சென்னம்பட்டி கிராமம் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மானாவரி விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பைப் பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். கோடைக்காலம் என்பதால் வயல்கள் அனைத்தும் வறண்டு காட்சியளித்தன. சில விவசாயிகள் தங்களின் நிலத்தை விவசாயப் பணிகளுக்காக தயார் செய்து வந்தனர்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் எர்த்வைஸ் ஆர்கானிக் (EARTH WISE ORGANIC) என்ற பெயரில் கோழிக் கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருக்கிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துப் போராடி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, சென்னம்பட்டியைச் சேர்ந்த பாட்டைய்யா

இந்த ஆலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது, இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தை முன்னொடுத்தனர்.

இதில் பேய்க்குளம்,கே.சின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு வாக்கைக்கூட செலுத்தவில்லை. மற்ற கிராமங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாயின.

‘தொழிற்சாலையால் வாழ்வாதாரம் பாதிப்பு’

“கோழிக் கழிவுகள் என்ற பெயரில் பல்வேறு கழிவுகளைப் பயன்படுத்தி அதன் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. அதன் வழியாக வரும் துர்நாற்றம் அந்தப் பகுதியில் கூலி வேலை, காட்டு வேலைக்குச் செல்லும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது,” என்கிறார் கே. சென்னம்பட்டியைச் சேர்ந்த பாட்டைய்யா.

கடந்த 8 மாதத்திற்கு முன்பாக கேரளவை சேர்ந்த நபரால் இந்த உரத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த உரத் தொழிற்சாலை கே.சென்னம்பட்டி, பேய்குளம், உன்னிப்பட்டி, ஓடைப்பட்டி சோளம்பட்டி, குராயூர் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

“ஊரின் வழியாக வாகனங்களில் கோழிக் கழிவுகள் என்கிற பேரில் மருத்துவக் கழிவுகள் எடுத்துச் சென்று உரம் தயாரிக்கிறார்கள். ஆலை செயல்படும் நேரம் அதிலிருந்து வரும் நச்சுத் தன்மை கொண்ட நாற்றம் காற்றில் கலந்துவிடுவதால் அதை மக்கள் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் காட்டு வேலைக்குச் செல்ல பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் ஆடு, மாடுகளை அந்தப் பகுதியில் கொண்டு சென்று மெய்ச்சலுக்குவிட மறுக்கிறார்கள்,” என்றார் பாட்டைய்யா.

‘போராட்டத்தால் நிரந்தர தீர்வு இல்லை’

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு

“தொழிற்சாலைக்கு கழிவு ஏற்றிச் செல்லும் வாகனத்தைக் கடந்த வாரம் சிறை பிடித்துப் போராட்டம் நடத்தினோம். அப்போது அங்கு வந்திருந்த அதிகாரிகள், மருத்துவர்கள் நாற்றம் கடுமையாக இருப்பதாகக் கூறினர்.

அதைத் தடுக்க வேண்டுமெனக் கூறி நாங்கள் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினோம். ஆனால் ஆலை தற்காலிகமாக மட்டுமே மூடப்பட்டிருக்கிறது. அதைத் நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்,” என்கிறார் பாட்டைய்யா.

‘வருங்கால தலைமுறையைப் பாதிக்கும் என அச்சம்’

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, சுப்புலெட்சுமி

காட்டு வேலைக்குச் செல்லவே தயக்கமாக இருப்பதாகக் கூறுகிறார் பேய்க்குளம் கிராமத்தில் வசிக்கும் விவாசாய தொழிலாளியான சுப்புலெட்சுமி.

“நாங்கள் எங்கள் கிராமத்திலிருந்து சோளம் பறிக்க, உளுந்து விவசாயப் பணிகளுக்காகச் சென்றிருந்தோம். அப்போது அந்த ஆலையிலிருந்து வரும் துர்நாற்றம் எங்களுக்கு சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தியது.

இதனால் வேலைக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. இதனால் வருங்காலத் தலைமுறைக்கு உடல் சார்ந்த பிரச்னை வருமோ என்ற அச்சம் உள்ளது. எங்களின் எதிர்ப்பைக் காட்டவே நான் வாக்கு செலுத்தவில்லை,” என்கிறார்.

திடீரென வந்த துர்நாற்றத்தால் குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி, மயக்கம்

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு

கிராமத்தில் காற்றில் வீசிய துர்நாற்றத்தால் குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார் சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீதாலெட்சுமி.

“கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இரவு 8:30 மணிக்கு மேல் திடீரென துர்நாற்றம் வரத் துவங்கியது. இதனால் ஊரில் உள்ள அனைவரும் வெளியில் வந்தனர். இதில் குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டது. சிலர் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவிகளையும் பெற்றுக் கொண்டனர்.

நாங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் எங்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அன்று இரவு ஊரின் வெளியே சென்று சாலை மறியலில் ஈடுபட்டோம். அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததையடுத்து ஊருக்கு திரும்பினோம்.”

தங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திலும் அரசு அதிகாரியிடமும் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளதாகவும் சீதாலெட்சுமி தெரிவித்தார். ஆனால், தேர்தல் நேரம் என்பதால் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏற்படுவதாகவும் மனு எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் கூறியதால் தாசில்தாரிடம் மனு கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, மேலாளர் செந்தில்குமார்

கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்த உரத் தொழிற்சாலைக்கு நேரில் சென்றோம். தொழிற்சாலையின் உள்ளே மட்டுமே கோழிக் கழிவின் நாற்றத்தை உணர முடிந்தது. கடந்த ஆறு நாட்களாக அரசின் உத்தரவால் ஆலை தற்காலிகமாகச் செயல்படவில்லை.

வடமாநில பணியாளர்கள் அங்கே தங்கிப் பணி செய்து வருவதைப் பார்க்க முடிந்தது. தொழிற்சாலையின் பின் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கோழிக் கழிவுகளை எடுத்து வரப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேன்கள் வைக்கப்படிருந்தன.

“இரண்டரை ஏக்கர் பரப்பரளவில் ஒன்றரை ஏக்கரில் இந்த தொழிற்சாலை அமைந்திருக்கிறது. ராமநாதபுரம், மதுரை, விருதுநகரின் பல பகுதிகளிலிருந்து குளிரூட்டப்பட்ட 3 வாகனத்தில் தினசரி 5 டன் கோழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு துவங்கி காலை 7 மணி வரையில் உரம் தயாரிப்பு நடைபெறும்.

வார இறுதி நாட்களில் 7 டன் வரையில் தொழிற்சாலைக்கு எடுத்து வரப்படும்,” என அதன் மேலாளர் செந்தில்குமார் பிபிசி தமிழிடம் கூறினார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்படும் தொழிற்சாலை

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, உரத் தொழிற்சாலை உரிமையாளர் அலெக்ஸ்

“கிராம மக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் தொழிற்சாலைக்கு நேரில் வந்து அதன் செயல்பாட்டைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை, கழிவுகளை உரமாக மாற்றும் தொழிற்சாலை இது,” எனக் கூறுகிறார் உரத் தொழிற்சாலையின் உரிமையாளர் அலெக்ஸ் சகார்யா.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையைத் தொடங்கும் நேரத்தில், இது மருத்துவக் கழிவுகளைக் கையாளும் ஆலை எனத் தவறான தகவல் பரப்பப்பட்டதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் கூறுகிறார்.

ஆனால், “அதன் பிறகு ஆலையைத் தொடங்கி 6 மாத காலம் செயல்பட்டு வந்தது. அப்போது மக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. தற்போது திடீரென தேர்தலுக்கு முன்பாக ஆலையால் சிக்கல் எனப் போராட்டத்தைத் தொடங்கி மக்கள் போராடி வருகின்றனர்,” என்று கூறுகிறார் அலெக்ஸ்.

அரசு அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் “நேரில் வந்து ஆலையில் சோதனை செய்தனர்.”

ஆலையில் பொருத்தப்பட்டிருக்கும் “சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு மருத்துவக் கழிவுகளைக் கையாளவில்லை என்பதை உறுதி செய்தனர். ஆலையில் கோழியின் கழிவுகளை மட்டுமே வைத்து தாவரங்களுக்குத் தேவையான உரம் தயாரித்து வருகிறோம்,” என்றார்.

‘ஐந்து கிலோமீட்டர் வரை எப்படி நாற்றம் பரவும்’

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு

தங்களது ஆலையில் உரம் தயாரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் கழிவுக்கு உண்டான நாற்றம் சில மீட்டர் தூரம் வரை மட்டுமே இருக்கும் எனவும் அலெக்ஸ் கூறுகிறார்.

“சோளம்பட்டியில் கழிவு நாற்றம் ஏற்பட்டது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் திடக் கழிவுகள் கொட்டும் இடம் உள்ளது. அங்கு கொட்டப்படும் கோழிக் கழிவுகளின் நாற்றம் மக்களுக்குச் சென்று அவர்களுக்கு உடல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அந்த கிராமத்திலிருந்து எனது தொழிற்சாலை ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது இங்கிருந்து எப்படி அங்கு கழிவு நாற்றம் செல்லும் முடியும்?

சிலர் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்களோ எனத் தோன்றுகிறது. எனது ஆலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையினிடமும் வழங்கி இருக்கிறேன். கிராம மக்கள் எப்போது வேண்டுமானாலும் எனது ஆலைக்கு நேரில் வந்து அதன் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்,” என்றார்.

‘துர்நாற்றம் பரவ வாய்ப்பு குறைவு’

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு

கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து ஆலையை இயக்கச் சொல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிறகு, ஆலைக்கு மிக அருகில் மட்டுமே கோழிக் கழிவின் நாற்றத்தை உணர்ந்ததாகவும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

உரம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எடுத்து வரப்படும் கோழிக் கழிவுகள் குளிரூட்டப்பட்ட மூன்று சிறிய வாகனங்களில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு எடுத்து வருவதால் இதன் நாற்றம் பரவ வாய்ப்பு குறைவு என்கிறார் அவர்.

தொழிற்சாலையில் “5 டன் அளவிற்கான கழிவுகளைச் சேகரித்து வைக்க குளிர்பதன வசதிகள் உள்ளன. அதேபோல், இங்கு பணியில் உள்ள பணியாளர்களும் கையுறை அணிந்து பணியை மேற்கொள்கின்றனர்.”

இந்த ஆலையில் குக்கரை வைத்து கழிவுகள் அவிக்கப்பட்டு 40 நிமிடங்களில் பவுடராக மாற்றப்படுகிறது. “குக்கருடன் கன்ட்ரோல் யூனிட், கண்டன்சர், பயோ ஃபில்டர் ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும் இதன் மூலமாக துர்நாற்றம் நீண்ட தூரம் செல்வது கட்டுப்படுத்தப்படுகிறது. மக்கள் துர்நாற்றம் இருப்பதாக மட்டுமே புகார் தெரிவித்துள்ளனர். அதைக் கணக்கிடும் முறை இல்லை,” என்கிறார் அந்த அதிகாரி.

இது தவிர 30 அடியில் புகைப்போக்கி அமைக்கப்படிருப்பதால் விறகு எரிக்கும் புகை மேலே அனுப்பப்படுகிறது. அதுவும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

“எம்சாண்ட், வேதிப் பொருட்களைக் கையாளும், புகை அதிகம் வெளியேற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு மட்டுமே காற்று மாசு அளவீடு செய்யப்படும்,” என்று மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி பிபிசி தமிழிடம் விளக்கினார்.

‘சுற்றுச்சூழக்கு ஆலையால் பாதிப்பு இல்லை’

மதுரை அருகே உரத்தொழிற்சாலைக்கு எதிராக ஐந்து கிராம மக்கள் தொடர்ந்து போராடுவது ஏன்? - பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் சங்கீதா

“கோழிக் கழிவுகளை உரமாக மாற்றும் தொழிற்சாலையா சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதுமில்லை,” என்கிறார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்த ஆலை பல்வேறு பகுதிகளில் இருந்து கோழிக் கழிவுளை வாகனங்களில் சேகரித்து அதை உரமாகத் தயாரித்து அது தாவரங்களுக்கு ஊட்டச்சத்து தரும் வகையில் மாற்றப்படுகிறது. அதன் கழிவு நீர் மீண்டும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தொழிற்சாலையினுள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து எந்த விதமான சுற்றுச்சூழலுக்கு கேடான வாயுக்களும் வெளியே வரவில்லை,” என்று கூறுகிறார் ஆட்சியர் சங்கீதா.

இதற்கு முன்பு அருகேயுள்ள கிராமத்தில் மருத்துவக் கழிவைக் கையாளும் தொழிற்சாலை செயல்பட்டதாகக் கூறும் அவர், அது மாதிரியான தொழிற்சாலை என மக்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.

“தொழிற்சாலை பகுதியிலிருந்து மக்கள் வசிக்கும் பகுதி இரண்டு கிலோமீட்டருக்கு வெளியில்தான் இருக்கிறது. மேலும், அவரது சொந்த இடத்தில் அரசிடமிருந்து உரிய அனுமதிகளை வாங்கி ஆலையை நடத்தி வருகிறார்.”

“மக்கள் இந்த ஆலை தொடர்பாக புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை ஆய்வு நடத்த அறிவுரை வழங்கினேன். அதன் பேரில் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலை இயங்கி வருவது தெரிய வந்தது. மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலை செயல்பாடு தொடர்பாக மக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கிராமங்களின் பிரதிநிதிகளை நேரடியாக தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று எந்த மாதிரியான கழிவுகள் இந்த ஆலையில் உரமாக மாற்றப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து காண்பிக்க முடிவு செய்துள்ளேன்,” எனவும் தெரிவித்தார்.