12 வகுப்பு முடிவுகள், கல்லூரி

பட மூலாதாரம், Getty Images

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது என்பது பற்றி ஒவ்வொரு மாணவருக்கும் அவரது தேர்வும் கனவும் இருக்கும்.

அதற்கு ஏற்றார்போல உயர்கல்வியில் பல வாய்ப்புகளும் தேர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், பொறியியல், மருத்துவம் படிப்புகளைத் தவிர வேறென்ன வாய்ப்புகள் உள்ளன போன்றவற்றையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

இந்த வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் உயர்கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க என்னென்ன படிவங்கள், ஆவணங்கள், விண்ணப்பங்கள் தேவை, என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

தமிழ்நாட்டின் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்கள் (மே 6ஆம் தேதி) வெளியாகியுள்ளன. சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில், 94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னென்னெ?

இதைத் தெரிந்துகொள்ள, கல்வியாளர்களிடமும், கல்வி ஆலோசகர்களிடமும் பிபிசி தமிழ் பேசியது. அவரகள் தெரிவித்த தகவல்களும் கருத்துகளும் இங்கே தொகுத்து அளிக்கப்படுகின்றன.

என்னென்ன ஆவணங்கள், படிவங்கள் அவசியம்?

12-ஆம் வகுப்பு முடிவுகள்: மாணவர்களுக்கு அவசியம் தேவையான சான்றிதழ்கள், கல்லூரி பற்றி அறியவேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

பள்ளியிலிருந்து பெறவேண்டிய ஆவணங்கள்

1) மதிப்பெண் சான்றிதழ்

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பின் அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க சில நாட்கள் ஆகும். ஆனால் அதற்குள் சில மேற்படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கிவிடும். அதனால், பள்ளியில் வழங்க்கப்படும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (provisional marksheet) பெறுவது அவசியம். அசல் மதெப்பெண் சான்றிதழ் வந்ததும் அதையும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2) பள்ளியின் டி.சி

பள்ளியில் வழங்கப்படும் டி.சி எனப்படும் மாற்றுச் சான்றிதழ் (ட்ரான்ஸ்ஃபர் சர்டிஃபிக்கேட்) மிகவும் முக்கியமான ஆவணம். மேற்படிப்பில் சேர்வதற்கு இது இன்றியமையாதது. பள்ளியிலிருந்து இதைத் தவறாமல் பெறவேண்டும்.

3) போனஃபைட் சான்றிதழ்

ஒரு மாணவர் ஒரு பள்ளியில் கல்வி பயின்றதற்கு ஆதாரமாக விளங்கும் மற்றோர் ஆவணம், ‘போனஃபைட் சான்றிதழ்’. இதையும் பள்ளியிலிருந்து தவறாமல் பெறவேண்டும்.

பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், ஒரு மாணவர் முதலில் ஒரு கல்லூரியில் சேர்ந்தபின், மற்றொரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து அங்கு மாறவேண்டுமெனில், முதல் கல்லூரியில் இருந்து போனஃபைட் சான்றிதழ் பெறவேண்டியது அவசியம்.

4) மைக்ரேஷன் சான்றிதழ்

ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்தின்படி படித்துவிட்டு மற்றொரு பாடத் திட்டத்திற்கு மாறியிருந்தால், அதற்கான சான்றாக ‘மைக்ரேஷன் சான்றிதழை’ வைத்திருக்க வேண்டும். இதை பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து பெற வேண்டும்.

அரசிடமிருந்து பெறவேண்டிய ஆவணங்கள்

12 வகுப்பு முடிவுகள், கல்லூரி

பட மூலாதாரம், Getty Images

அரசிடமிருந்து பெறவேண்டிய ஆவணங்கள்

1) சாதிச் சான்றிதழ்

இது இடஒதுக்கீட்டுக்கு மிக அவசியமானது.

ஒரு மாணவர் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பிக்கவும் இந்தியாவின் பிற மாநிலங்களில் விண்ணப்பிக்கவும் அவற்றுக்குரிய சாதிச் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

தேசிய அளவிலான கல்லூரிகளில் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம், தாசில்தார், அல்லது இ-சேவை இணையதளம் போன்ற வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம், ஆங்கிலத்தில் சாதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

2) பிறப்பிடச் சான்றிதழ்

ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர், அந்த மாநிலத்தில் பள்ளிக்கல்வி பயின்றுவிட்டு, வேறொரு மாநிலத்தில் இருக்கும் கல்லூரியில் சேர விரும்பினால், அதற்கு பிறப்பிடச் சான்றிதழ் (Nativity certificate) வேண்டும். ஒரு மாணவரின் பெற்றோர் வேறு மாநிலத்தில் தங்கிப் பணியாற்றி வந்தாலும் இது பொருந்தும். இதையும் மாவட்ட நிர்வாகம், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெறவேண்டும்.

3) பிறப்புச் சான்றிதழ்

ஒரு மாணவர், சரியான பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம்.

4) முதல் பட்டதாரி சான்றிதழ்

ஒரு மாணவர் தனது குடும்பத்தின் முதல் பட்டதாரி என்றால், அதாவது அவரது பெற்றோர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள், அவரது மூத்த சகோதர, சகோதரிகள் யாரும் பட்டதாரிகள் இல்லையெனில் அந்த மாணவருக்கு முதல் பட்டதாரிக்கான சலுகைகள் கிடைக்கும். அதற்கான சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.

5) பெற்றோரின் வருமானச் சான்றிதழ்

சில சலுகைகள், உதவித் தொகைகள் ஆகியவை பெற்றொரின் வருமானத்தைச் சார்ந்து இருப்பதால், அதற்கான சான்றிதழையும் பெற வேண்டியது அவசியம். இதை இணைய வழியிலோ, மாவட்ட நிர்வாகத்திடமிருந்தோ பெறலாம்.

கல்லூரி கலந்தாய்வு விண்ணப்பங்கள்

12 வகுப்பு முடிவுகள், கல்லூரி

பட மூலாதாரம், Raja Rajan

படக்குறிப்பு, கல்வியாளர் ராஜராஜன்

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான விண்ணப்பச் செயல்முறை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. இது ஒற்றைச் சாளர முறையில் நடைபெறுகிறது.

பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கான விண்ணப்ப முறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் ராஜராஜன், இந்த முறையில், கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தில் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்பதால், மாணவர்கள் இதைத் தங்கள் ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களைப் பொறுத்தும், அவர்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பொறுத்தும் மிகக் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும் என்றார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், அதற்கான கலந்தாய்வு குறித்துப் பேசிய ராஜராஜன், எம்.பி.பி.எஸ் தவிர பல் மருத்துவம், ஹோமியோபதி, சித்தா, ஆயிர்வேதம் ஆகியவற்றுக்கு நீட் மதிப்பெண்கள் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

“மேலும், நேச்சுரோபதி, யோகா, விலங்குநல மருத்துவம், ஃபிசியோதெரபி, ஆகிய படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பின் கட்-ஆஃப் மதிப்பெண் முறையில் சேர்க்கை நடக்கும். எனவே மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைக்காவிட்டால், மற்ற தேர்வுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும்,” என்றார்.

‘விண்ணப்பங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்’

12 வகுப்பு முடிவுகள், கல்லூரி

பட மூலாதாரம், Nedunchezhian

படக்குறிப்பு, கல்வியாளர் நெடுஞ்செழியன்

மேற்படிப்புக்கான விண்ணப்பங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், பொதுவாக தமிழகப் பெற்றொரிடமும் மாணவர்களிடமும் விண்ணப்பங்கள் குறித்த விழிப்புணர்வோ அறிதலோ முழுமையாக இல்லை, என்றார்.

இதுகுறித்துப் பேசிய அவர், “இந்தியாவில் மேற்படிப்புக்கான சுமார் 80 நுழைவுத்தேர்வுகள் உள்ளன. இவற்றில் 75க்கும் மேற்பட்டவை 12ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்வதில்லை. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களைப் பெரும்பாலும் தவறவிடுகின்றனர்,” என்றார்.

“தமிழகப் பெற்றோரும் மாணவர்களும் நுழைவுத்தேர்வுக்கான ‘கோச்சிங் வகுப்பு’களுக்கு அதிக பணம் செலவிடுகின்றனர். ஆனால் இந்த நுழைவுத் தேர்வுகளுக்குச் செலவிடுவதில்லை,” என்றார்.

மேலும் பேசிய அவர், பொறியியல், மருத்துவம் தவிர, தமிழகத்தின் கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான ‘Tamil Nadu Government Arts and Science Colleges Admissions (TNGASA)’ பற்றியும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

அதேபோல், பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science – IISc), பரோடாவில் இருக்கும் எம்.எஸ் பல்கலைக்கழகம், புனேவில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறூவனம் (Indian Institutes of Science Education and Research) ஆகியவற்றின் நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், அவை பற்றியும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

“ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காது என்று எண்ணி ஒரு மாணவர் விண்ணப்பிக்காமல் இருக்கக்கூடாது. முதல் சுற்றில் வாய்ப்பு கிடைக்காவிட்டால், காத்திருப்புப் பட்டியல் மூலம் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே விண்ணப்பிப்பது அவசியம்,” என்றார்.

அதேபோல, தனியார் கல்லூரிகளில் சேர்ந்தபின் வேறு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து அங்கு செல்ல வேண்டுமென்றால், அந்தத் தனியார் கல்லூரியில் சமர்பித்த சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இந்தச் சிக்கல் இருக்காது என்றார்.

கல்வியாளர் ராஜராஜன், ஆர்க்கிடெக்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NATA (National Aptitude Test in Architecture) பற்றியும் மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

NATA இணையதளத்தின்படி, இந்தத் தேர்வு ஏப்ரல் முதல் ஜுலை வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடக்கும்.

ஒரு கல்லூரியைப் பற்றி எப்படி அறிந்துகொள்வது?

12 வகுப்பு முடிவுகள், கல்லூரி

பட மூலாதாரம், Getty Images

ஒரு கல்லூரியைப் பற்றி முழுமையாக எப்படித் தெரிந்துகொள்வது என்ற கேள்வி குறித்து பிபிசி தமிழ் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கருத்து கேட்டது.

அவர், “இன்று யூட்யூப் போன்ற தளங்களில் இன்று ‘இன்ஃப்ளுயன்சர்ஸ்’ பலர் கல்லூரி தரவரிசைப் பட்டியல்கள், கல்லூரிகளுக்கான விளம்பரங்கள் ஆகியவற்றைச் செய்து வருவதாகவும் அவற்றைப் பார்த்து மாணவர்களோ பெற்றோர்களோ எளிதில் ஏமாறலாம்” என்று கூறுகிறார்.

அதேபோல், ஒரு கல்லூரியின் பேராசிரியர்களிடம் கேட்டால், அந்தக் கல்லூரியைப் பற்றிப் பெருமையாகத்தான் பேசுவார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், ஒரு கல்லூரியைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் “அக்கல்லூரியில் தற்போது பயிலும் மாணவர்களிடம் சென்று உரையாட வேண்டும். அப்போதுதான் அதைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கும்,” என்றார்.