சாம் பிட்ரோடா தென்னிந்தியர் பற்றி என்ன பேசினார்? முர்முவை குறிப்பிட்டு ராகுலை மோதி விமர்சித்தது என்ன?

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், THIERRY MONASSE/PUNIT PARANJPE/AFP/GETTY IMAGES

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

‘தி ஸ்டேட்ஸ்மேன்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், வட இந்திய மக்களை வெள்ளையர்களுடனும், மேற்கு இந்தியாவில் வாழ்பவர்களை அரேபியர்களுடனும், கிழக்கில் வாழ்பவர்களை சீனர்களுடனும், தென்னிந்தியாவில் வாழும் மக்களை ஆப்பிரிக்கர்களுடனும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பிட்ரோடாவின் இந்தக் கூற்றிலிருந்து விலகி நிற்கிறது. அதன் கூட்டணி கட்சிகளும் இந்தக் கூற்று தவறானது என்று கூறியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சாம் பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் தவறானவை, துரதிருஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. காங்கிரஸ் கட்சி இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது, அவற்றை மறுக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.

ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் தாக்கிப் பேசினார்.

பிரதமர் மோதி பேசுகையில், “இன்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். யாராவது என்னைத் திட்டினால், நான் கோபப்படுவதில்லை. என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்று இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவஞானி (சாம் பிட்ரோடா) என்னை மிகவும் அவமானப்படுத்தியது எனக்குக் கோபத்தை மூட்டியுள்ளது,” என்றார்.

“நமது நாட்டில் தகுதி தோல் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுமா என்று யாராவது சொல்லுங்கள். அரசியல் சாசனத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடுபவர்கள், தோல்நிறத்தின் அடிப்படையில் என் நாட்டு மக்களை அவமதிக்கிறார்கள்,” என்றார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்துத் தாக்கிப் பேசினார் பிரதமர் மோதி.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், X/Jairam Ramesh

இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் புதன்கிழமை (மே 8-ஆம் தேதி) மாலை சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியில் இருந்து விலக சுயமாக முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் அவரது முடிவை ஏற்றுக்கொண்டார்,” என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜனாதிபதி திரௌபதி முர்முவை முன்வைத்து மோதி காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசினார்

திரௌபதி முர்மு குறித்து பிரதமர் மோதி என்ன சொன்னார்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்துப் பேசிய பிரதமர் மோதி, அவரை பெருமை மிக்கப் பழங்குடியினரின் மகள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

“அவரை குடியரசுத் தலைவர் ஆக்குகிறோம் என்றால், அவரைத் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறது? பழங்குடியினர் மீது காங்கிரஸுக்கு என்ன கோபம்? நான் இதைப் பற்றி யோசித்தேன். இளவரசருக்கு (ராகுல் காந்தி) இப்படி ஒரு மனம் இருப்பதாக நான் நினைத்தேன். அவர் முர்மு ஜியை எதிர்க்கிறார்,” என்று பிரதமர் மோதி கூறினார்.

சாம் பிட்ரோடாவைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோதி, “பழங்குடியின மகளான திரௌபதி முர்முவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி ஏன் களம் இறங்கியிருக்கிறது என்பதை இன்று தெரிந்து கொண்டேன்,” என்றார்.

“இளவரசருக்கு (ராகுல் காந்தி) அமெரிக்காவில் மாமா ஒருவர் இருக்கிறார் என்பதை இன்று தெரிந்து கொண்டேன். இந்த இளவரசரின் மாமாதான் அவரது தத்துவ வழிகாட்டி. கிரிக்கெட்டில் இன்று மூன்றாம் அம்பயர்கள் இருப்பது போல, இளவரசரும் குழப்பத்தில் இருக்கும்போது மூன்றாவது அம்பயரிடம் ஆலோசனை கேட்கிறார்,” என்றார் மோதி.

பிரதமர் மோதி மேலும் கூறுகையில், “இந்த மாமா ஒரு பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோல் நிறம் கருப்பாக உள்ளவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். என் நாட்டு மக்கள் தங்கள் தோலின் அடிப்படையில் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றனர். தோல் நிறத்தைப் பார்த்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஆபிரிக்காவைச் சேர்ந்தவள் என அவர்கள் எண்ணியதால், அவரது தோல்நிறம் கருப்பாக இருந்தால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவது புரிந்தது,” என்றார் மோதி.

மேலும், “நாம் நாட்டை எங்கு கொண்டு செல்வோம்? தோலின் நிறம் எதுவாக இருந்தாலும் சரி, கிருஷ்ணரை வணங்குபவர்கள் நாங்கள், அவருடைய தோலின் நிறம் நம்மைப் போலவே இருந்தது,” என்று பிரதமர் மோதி கூறினார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு செல்லும் போது, பிட்ரோடா அடிக்கடி அவருடன் காணப்படுவார்

சாம் பிட்ரோடா என்ன சொன்னார்?

‘தி ஸ்டேட்ஸ்மேன்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சாம் பிட்ரோடா, “இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் கிழக்கில் வசிப்பவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்களைப் போலவும் இருக்கிறார்கள். இது போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்கிறோம். தெற்கில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருக்கிறார்கள். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்,” என்றார்.

மேலும் பேசிய பிட்ரோடா, “இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள், உணவு, மதம், மொழி கொண்டவர்கள், ஆனால் அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்” என்று கூறினார்.

“இந்தியா என்ற கருத்து தொடர்பாக இன்று நாடு உண்மையில் பிளவுபட்டுள்ளது. யார் சரி, யார் தவறு என்பது அல்ல, உங்கள் நம்பிக்கைகள் என்ன என்பதுதான் கேள்வி. இரு தரப்பிலும் சூழ்நிலைகள் மிகவும் கடினமாக உள்ளன,” என்று பிட்ரோடா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் அப்பேட்டியில் சாம் பிட்ரோடா, “தங்களுக்கு இந்து தேசம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் நம்புகிறார்கள். எனது பார்வையில், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் அந்தப் பக்கம் இருக்கிறார்கள். இது சரியா தவறா என்பதைப் பற்றி நாம் விவாதிக்கலாம். அவர்களது கருத்துப்படி இந்தியா மற்ற மத்தினருக்கு – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு – இடமில்லாத இந்துக்களின் நாடு. நாட்டில் 20 கோடி இஸ்லாமியர்க்ள் உள்ளனர். அவர்களை நீங்கள் புறக்கணிக்க முடியாது,” என்றார் பிட்ரோடா.

“இந்தக் கட்சி ராமர் கோவில், வரலாறு, பாரம்பரியம், அனுமான், பஜ்ரங் தளம் போன்ற பிரச்னைகளை சுற்றியே இயங்குகிறது. அவர்களின் கருத்துகளை நான் மதிக்கிறேன்,” என்றார்.

“இந்தக் கருத்துக்கு மறுபக்கம் நிற்பவர்கள், நமது நாட்டின் அடித்தளத்தை அமைத்தவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள் என்கின்றனர். அந்தப் போராட்டம் இந்து தேசத்துக்காக அல்ல, மதச்சார்பற்ற தேசத்துக்காக நடந்தது. பாகிஸ்தான் மதத்தைத் தேர்ந்தெடுத்து. அதன் கதி என்னவென்று பாருங்கள்,” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “உலக நாடுகளிடையே இந்தியா ஜனநாயகத்தின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. நாட்டில் மக்கள் 70 ஆண்டுகளாக மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தோம், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள், நாம் அனைவரும் வெவ்வேறு கலாசாரங்கள், மொழிகள், உணவுகளை மதிக்கிறோம். இதுதான் இந்தியா. ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டது இந்தியா என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் கிரண் ரிஜிஜு

அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சாம் பிட்ரோடாவின் அறிக்கைக்கு பதிலளிக்கையில், “சாம் பாய், நான் வடகிழக்கைச் சேர்ந்தவன், எனது தோற்றம் ஒரு இந்தியனின் தோற்றம். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான். நம் நாட்டைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்திருக்கிறார்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “ராகுல் காந்தியின் தலைமை ஆலோசகர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும், வடகிழக்கு மக்கள் சீனர்களைப் போலவும் இருக்கிறார்கள், என்று சொல்கிறார். இந்தியாவைப் பிளவுபடுத்துவதுதான் இந்த அறிக்கையின் தொனி. இது வெட்கக்கேடானது,” என்று தெரிவித்திருக்கிறார்.

சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்துக்கு பதில் தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அன்பான சாம் பிட்ரோடியா, நான் கருப்பு தோல்நிறமுடைய பாரதீயன்,” என்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான பிரியங்கா சதுர்வேதி இதுகுறித்து பேசுகையில், “சாம் பிட்ரோடா காங்கிரசின் தேர்தல் அறிக்கை குழுவின் உறுப்பினரா அல்லது அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரா?” என்று கேட்டார்.

மேலும் பேசிய அவர், “இந்தப் பிரச்னையை தேசியப் பிரச்னையாக மாற்றுவது துரதிர்ஷ்டவசமானது, என்றும், வேலைவாய்ப்பின்மை, பெண்களின் ஒடுக்குமுறை, விவசாயிகள் பிரச்னை ஆகியவை இதைவிட முக்கியமான பிரச்னைகள்,” என்றார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சாம் பிட்ரோடா இதற்கு முன்பும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்

சாம் பிட்ரோடாவின் முந்தைய சர்ச்சைகள்

சாம் பிட்ரோடா சர்ச்சைகளால் சூழப்படுவது புதிதல்ல.

பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக உள்ளார். ராகுல் காந்தி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு செல்லும் போது, பிட்ரோடா அடிக்கடி அவருடன் காணப்படுவார்.

சென்ற ஏப்ரல் மாதம் தனிநபர் சொத்து விநியோகம் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோதி உட்பட பா.ஜ.க தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆக்ரோஷமாக பதிலளித்திருந்தனர்.

சாம் பிட்ரோடா அமெரிக்காவின் பரம்பரை சொத்து வரியை ஆதரித்துப் பேசியிருந்தார்.

சிகாகோவில் உள்ள ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சாம் பிட்ரோடா, “அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரிவிதிப்பு முறை உள்ளது. இதன் பொருள் ஒருவருக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறந்த பிறகு, குழந்தைகளுக்கு அதில் 45% சொத்து மட்டுமே கிடைக்கும், மீதி 55%-த்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்,” என்றார்.

“இந்தியாவில் இதை உங்களால் செய்ய முடியாது. ஒருவருடைய சொத்து 1,000 கோடி ரூபாயாக இருந்தால், அவர் இறந்தபின் அந்தச் சொத்து அவருடைய குழந்தைகளுக்குச் செல்கிறது, பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. இது பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும். விளைவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் செல்வத்தின் மறுபகிர்வு பற்றி பேசும்போது, ​​​​புதிய கொள்கைகள் மற்றும் பொது நலன்களைப் பற்றி பேசுகிறோம், பணக்காரர்கள் பற்றி மட்டுமல்ல,” என்றார்.

இதைத்தொடர்ந்து, ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோதி, “நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் உங்களை அதிக வரியால் தாக்கும், நீங்கள் உயிருடன் இல்லாத போது, ​​அது உங்களுக்கு பரம்பரை சொத்து வரியை சுமத்திவிடும்,” என்று கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம், பிட்ரோடா 1984 சீக்கிய கலவரம் குறித்து ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“1984-இல் நடந்தது இருக்கட்டும், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுங்கள்,” என்று ஒரு கேள்விக்கு சாம் பிட்ரோடா பதிலளித்திருந்தார்.

இந்தக் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டபோது, அவர் மன்னிப்பு கேட்டார். மேலும் தனது கருத்துக்கு தனது மோசமான இந்தியைக் காரணம் காட்டினார்.

2019-ஆம் ஆண்டு, சாம் பிட்ரோடாவின் மற்றொரு அறிக்கை சர்ச்சையானது.

புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கு இந்தியாவின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு, அவர், “தாக்குதல்கள் நடக்கின்றன. மும்பையிலும் தாக்குதல் நடந்தது. நாமும் விமானத்தை அனுப்பி பதிலடி கொடுத்திருக்கலாம், ஆனால் அது சரியாக இருந்திருக்காது. என்னைப் பொருத்தவரை, உங்களால் அதைச் சமாளிக்க முடியாது,” என்றிருந்தார்.

சாம் பிட்ரோடா, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க, நரேந்திர மோதி, திரௌபதி முர்மு
படக்குறிப்பு, சாம் பிட்ரோடாவின் பயணம் ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து துவங்கியது

யார் இந்த சாம் பிட்ரோடா?

சாம் பிட்ரோடாவின் இயற்பெயர் சத்யநாராயண் பிட்ரோடா. இவர் இந்தியாவிற்கு தொலைபேசி சேவையைக் கொண்டு வந்து சிறந்த கவரேஜ் வழங்கியதில் பெரும் பங்காற்றியதற்காகப் பாராட்டப்படுகிறார்.

சாம் பிட்ரோடாவின் பயணம் ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து துவங்கியது.

அவரது தாத்தா தச்சராகவும் கொல்லராகவும் வேலை செய்து வந்தார்.

அவரது தந்தை தனது மகன் குஜராத்தி மற்றும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அவரையும் அவரது மூத்த சகோதரர் மேனக்கையும் படிக்க அனுப்பினார். முதலில் குஜராத்தில் உள்ள வித்யாநகரில் உள்ள சாரதா மந்திர் போர்டிங் பள்ளிக்கும் பின்னர் பரோடா பல்கலைக் கழகத்திற்கும் அனுப்பினார்.

அங்கிருந்து சாம் பிட்ரோடா இயற்பியலில் எம்.எஸ்சி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.