நாங்குநேரி சின்னதுரை
  • எழுதியவர், ஹேமா ராகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னதுரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, “அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் சின்னதுரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர்.”

இதைப் பார்த்த சின்னதுரையின் தங்கை, அதைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர் தற்போது அத்தனை தடைகளையும் கடந்து பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

அதுகுறித்துப் பேசியபோது, “உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு நான் மருத்துவமனையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோதும்கூட, எது நடந்தாலும் கல்வி கற்பதை மட்டும் எந்த நிலையிலும் விட்டுவிடக்கூடாது என்று நினைத்தேன். அந்த மன உறுதிதான் இன்று பனிரெண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண்களைக் கொடுத்திருக்கிறது,” என நெகிழ்கிறார் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை.

இதில் அதிக காயங்கள் காரணமாக சின்னதுரை 4 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மிகவும் கடின உழைப்புடன் படித்து வந்த சின்னதுரை நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சின்னதுரைக்கு என்ன நடந்தது?

நாங்குநேரி: சாதி வன்முறையை கடந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி - மாணவர் சின்னதுரை என்ன சொல்கிறார்?

“எனக்கு சிறு வயதில் இருந்தே நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அம்மாவும், உறவினர்களும் நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டே இருப்பார்கள். எனது குடும்பத்தில் நான்தான் முதல் ஆண் பிள்ளை என்பதால் எனக்கு குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

என் அம்மா சத்துணவு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். தங்கை பள்ளியில் படித்து வருகிறார். நான் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் போது ஆண்கள் பிரிவில் தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்று வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிஏ படித்து ஆடிட்டர் ஆவதுதான் என் கனவாக இருந்தது. அதற்காக கடும் முயற்சிகளை நான் மேற்கொண்டு வந்திருந்தேன். அப்போதுதான் அந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது,” என்று கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவம் குறித்து நினைவுகூர்ந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னதுரை படித்த அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களால் சின்னதுரை மீது சாதிய பாகுபாடு காரணமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சின்னதுரையின் வீட்டில் புகுந்த மாணவர்கள் அவரையும் அவருடைய தங்கையையும் அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்னதுரை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் காரணமாக அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனைக்கே வந்து கற்பித்த ஆசிரியர்கள்

நாங்குநேரி: சாதி வன்முறையை கடந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி - மாணவர் சின்னதுரை என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Images

இந்த நான்கு மாதங்களும் தினமும் ஆசிரியர் மூலம் அவருக்கு இரண்டு மணிநேரம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும்கூட கல்வியைக் கைவிட வேண்டும் என்கின்ற எண்ணம் தனக்குத் துளியும் இல்லையென்று என்று அவர் கூறுகிறார்.

“சாதிரீதியாக என்மீது தாக்குதல் நடத்தப்பட்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும் என் பள்ளி ஆசிரியர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்,” என்கிறார் அவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும்கூட தினமும் அங்கு வந்த ஆசிரியர்கள் தனக்குப் பாடங்களைக் கற்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் இருந்து மீண்டு வரவேண்டுமென்ற நம்பிக்கையை நல்கியதாகவும் சின்னதுரை நினைவுகூர்கிறார்.

“உடலில் எத்தனை வலிகள் ஏற்பட்டாலும் படிக்கின்ற படிப்பை மட்டும் கைவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலங்களில் நான் மருத்துவமனையில் இருந்து உதவியாளர் மூலம் தேர்வெழுதினேன்.”

சிறு வயதிலிருந்தே சின்னதுரைக்கு கம்ப்யூட்டர் படிப்பின்மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்துள்ளது. இப்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் 94 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் சின்னதுரை. இவருக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. அதற்காகத் தன்னைத் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

உதவியாளர் துணையுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

நாங்குநேரி: சாதி வன்முறையை கடந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி - மாணவர் சின்னதுரை என்ன சொல்கிறார்?

சக மாணவர்களால் அவர் தாக்கப்பட்ட பிறகு, அவரது உடலில் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதற்கு சிகிச்சை எடுக்கவும் அதிக காலம் தேவைப்பட்டுள்ளது. ஆகையால் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும்கூட பிசியோதெரபி பயிற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இதற்கிடையிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டுமென்ற வேட்கை சின்னதுரையின் மனதில் நீடித்துள்ளது.

“அதற்கு எனது பள்ளி ஆசிரியர்கள் பக்கபலமாக இருந்தார்கள். 12ஆம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் நான் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன். எனக்கு கையில் அதிக காயம் ஏற்பட்டிருப்பதால் இயல்பாக என் கையால் தேர்வை எழுத முடியவில்லை.

அதனால் பள்ளியில் நான் தேர்வு எழுதுவதற்காக உதவியாளரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் மூலம் தைரியமாக தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதினேன்,” என்றார் சின்னதுரை.

மேலும், தேர்வில் உடனிருந்த உதவியாளரிடம் தான் கூறும் பதிலை மட்டும் எழுதுமாறும் தனக்காக இரக்கப்பட்டுக் கூடுதலாக அவருக்குத் தெரிந்த எதையும் எழுத வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதாக சின்னதுரை கூறுகிறார்.

“என் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தேர்வை உறுதியாக என்னால் வெற்றிக்கொள்ள முடியும்’ என்று உதவியாளரிடம் கூறினேன். அவரும் அதே போல கேள்விகளுக்கு என் நான் என்ன பதிலைச் சொன்னேனோ அதை மட்டுமே எழுதினார்.”

சின்னதுரையின் உறுதிப்பாடு

நாங்குநேரி: சாதி வன்முறையை கடந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி - மாணவர் சின்னதுரை என்ன சொல்கிறார்?

தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்க தொடங்கிய சின்னதுரைக்கு அந்த நாளும் வந்தது. அவர் எதிர்பார்த்தபடியே தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று 12ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

“இந்தத் தேர்ச்சி எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதைவிட என்னுடைய குடும்பத்திற்கு அது மிகப்பெரிய நிறைவையும், சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது,” என்று நெகிழ்கிறார் சின்னதுரை.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தவுடன் சின்னதுரைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு அவருக்கு திருக்குறள் புத்தகத்தையும் பேனாவையும் நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் சின்னதுரையின் உயர்கல்விக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

“சில மாதங்களுக்கு முன்பு உடலில் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தேன்.”

“அந்தச் சூழலில், இனி எப்படி படிக்கப் போகிறோம் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எந்த நிலையிலும் படிப்பை விட்டுவிடக்கூடாது என உறுதியாக இருந்தேன்.”

“அந்த மன உறுதியே இந்தத் தேர்ச்சிக்குக் காரணம்,” என்று உறுதிப்பாட்டுடன் பேசிய சின்னதுரை, “வாழ்வில் என்ன நடந்தாலும் கல்வி கற்பதை மட்டும் விட்டுவிடாதீர்கள்,” என்று கூறி முடித்தார்.