தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க தாய்லாந்து அரசு முயற்சி – முஸ்லிம்களின் மனநிலை என்ன?

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க தாய்லாந்து அரசு முயற்சி - முஸ்லிம்களின் மனநிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு தாய்லாந்து ஒரு வரலாற்றுப்படியை எடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் தன்பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ+) சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“நான் இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். ஆனால் ஒரு குடும்பத்தை உருவாக்க நான் நினைத்தால் வெளியே சென்று வேறு எங்காவது வாழ்வேன்,” என்று தெற்கு தாய்லாந்தில் உள்ள யாலா நகரத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர் அலிஃப் கூறுகிறார்.

அவர் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் தனது பாலியல் ஈர்ப்பு பற்றிய உண்மையைச் சொல்லியிருந்தாலும்கூட அவர்களிடம் எந்தவொரு ஆண் நண்பரையும் இதுவரை அறிமுகப்படுத்தியதில்லை என்று கூறுகிறார் அலிஃப்.

தனது பாலுணர்வு விருப்பத்துடன் போராடுவதாகக் கூறிய அவர், பிபிசி தனது உண்மையான பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தன்பாலின திருமணத்தில் தாய்லாந்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தாய்லாந்தின் நான்கு தென்கோடி மாகாணங்களில் ஒன்றில் 25 வயதான அந்த நபர் வசிக்கிறார். அங்கு பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள்.

நாட்டின் தென் பிராந்தியம் ஒரு இஸ்லாமிய தலைவரால் ஆட்சி செய்யப்பட்டது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் மலாய் இஸ்லாமியர்கள். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பகுதி தாய்லாந்தின் ஒரு பகுதியாக மாறியது. பௌத்தம் தற்போது தாய்லாந்தில் மிகவும் பொதுவாகப் பின்பற்றப்படும் மதமாகும்.

தாய்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தெற்கு தாய்லாந்தில் வாழ்பவர்களில் இஸ்லாமியர்களே அதிகம்.

இது சட்டமாவதற்கு செனட்டின் ஒப்புதல் மற்றும் அரச அனுமதி தேவை. ஆனால் இது 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவேறிவிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து மாறும்.

புதிய சட்டம் முஸ்லிம்களுக்கு தன்பாலின திருமணங்களைச் செய்வதற்கான உரிமையை அளித்தாலும், ஒரு இமாம் ’நிக்காஹ்’ [இஸ்லாமிய திருமண விழா] செய்து வைக்க விரும்பாமலும் இருக்கலாம் என்று திருமண சமத்துவம் குறித்த கீழ்சபைக் குழுவின் உறுப்பினரான நைனா சுபாபுங் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் வசிக்கும் இஸ்லாமிய சமூகம் தன்பாலின திருமண விழாக்களை வரவேற்பது சாத்தியமில்லை என்று அலிஃபும் நினைக்கிறார். “வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு மசூதிக்கு வெளியே சிலர், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை நான் கேட்டேன். இத்தகைய வெறுப்புப் பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்றார் அவர்.

தாய்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தாய்லாந்து இஸ்லாமிய மையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர்.

தற்போதுள்ள 415 எம்.பி.க்களில் 400 பேரால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட மசோதா, திருமணத்தை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்று விவரிக்காமல் இரு நபர்களுக்கு இடையிலான கூட்டு என்று விவரிக்கிறது.

மேலும் இது தன்பாலின ஈர்ப்புகொண்ட தம்பதிகளுக்கு திருமண வரி சேமிப்பு, வாரிசு சொத்து மற்றும் ஊனமுற்ற கூட்டாளர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு சம்மதம் போன்ற சம உரிமைகளை வழங்கும்.

இதன்கீழ் திருமணமான ஒரே பாலினத்தவர்கள், குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், “தந்தை மற்றும் தாய்” என்பதற்குப் பதிலாக “பெற்றோர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான குழுவின் பரிந்துரையை கீழ்சபை ஏற்கவில்லை.

தாய்லாந்தில் ஏற்கெனவே பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்யும் சட்டங்கள் உள்ளன. எனவே இது ஆசியாவிலேயே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மிகச் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

“இது சமத்துவத்தின் ஆரம்பம். இது எல்லா பிரச்னைக்குமான தீர்வு அல்ல. ஆனால் இது சமத்துவத்தை நோக்கிய முதல் படியாகும்” என்கிறார் தனுஃபோர்ன் புனகந்தா.

ஆனால் தன்பாலின விருப்பம் கொண்டவர்கள் இந்த அளவுக்கு திருமண சமத்துவத்தை நெருங்கப் பல ஆண்டுகள் பிரசாரம் தேவைப்பட்டது.

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான முந்தைய முயற்சிகள் பொதுமக்களின் பரவலான ஆதரவையும் மீறி தோல்வியடைந்தன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட ஒரு அரசு ஆய்வு, இதில் கலந்துகொண்டவர்களில் 96.6% பேர் மசோதாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டியது.

இத்தகைய அணுகுமுறைகள் அரிதாக இருக்கும் பிராந்தியத்தில் தன்பாலின ஈர்ப்புகொண்ட தம்பதிகளுக்கு ஆதரவு புகலிடமாக தாய்லாந்தின் நற்பெயரை இந்தப் புதிய சட்டம் வலுப்படுத்தும்.

மேலும் திருமண சமத்துவத்திற்கான கீழ்சபைக் குழுவின் தலைவரான தனுஃபோர்ன் புனகந்தா, மசோதாவின் வரைவை அறிமுகப்படுத்தினார். “இது சமத்துவத்தின் ஆரம்பம். இது எல்லா பிரச்னைக்குமான தீர்வு அல்ல. ஆனால் இது சமத்துவத்தை நோக்கிய முதல் படி. இந்தச் சட்டம் இந்த உரிமைகளை இவர்களுக்கு வழங்கவில்லை. அவற்றை திருப்பித் தர முயல்கிறது,” என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

தாய்லாந்து

பட மூலாதாரம், Getty Images

தெற்கு தாய்லாந்தில் உள்ள சோங்க்லா நகரில் பிறந்த 27 வயதான முஸ்லிம் தன்பாலின ஈர்ப்பாளர், தான் வாழும் இடத்தில் இந்தச் சட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை.

அவர் தனது உண்மையான பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. எனவே அவரை வேயில் என்ற பெயரில் நாங்கள் அழைத்தோம். தனது பாலியல் தேர்வு காரணமாகத் தாம் அடிக்கடி கேலிக்கு ஆளானதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தனது உறவினர்களால் தாம் வளர்க்கப்பட்டதாகவும், அவர்கள் அடிக்கடி தனக்கு ஒப்பனை செய்தனர் என்றும் பெண்களின் ஆடைகளை அணிய வைத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டிப்புடன் இஸ்லாத்தை பின்பற்றும் அவரது பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை.

தனது “வித்தியாசமான நடத்தை” காரணமாகத் தனது பெற்றோரின் நண்பர்கள் தன்னிடம் கடுப்புடன் நடந்துகொள்வார்கள் என்றும் தான் வளரும்போது தனது பாலியல் விருப்பம் பற்றிய கேள்விகளுக்குத்தான் ஆளானதாகவும் அவர் கூறினார்.

தன்பாலின ஈர்ப்பு சமூகத்தில் இருப்பது “சூனிய வேட்டையாக இருக்கக்கூடாது” என்று வேயில் கூறினார். தான் புதிய சட்டத்தை வரவேற்றாலும்கூட, திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகத் தனது பெற்றோருக்கு விளக்குவது மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று என்கிறார் வேயில். இந்தப்புதிய சட்டம் இருக்கும்போதிலும் தாய்லாந்தில் வாழும் பல முஸ்லிம்களுக்கு “அவர்களின் உலகில் இது தவறு” என்ற சிந்தனை உள்ளது என்றார் அவர்.