தோனி போன்ற சீனியர்களை கையாளும் ருதுராஜின் உத்தி; ஹைதராபாத் அணியில் அம்பலமான பலவீனம்

சிஎஸ்கே

பட மூலாதாரம், SPORTZPICS

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. கிட்டத்தட்ட அதே அளவு ரன்களைக் குவித்து அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனத்தை ஆர்சிபி “எக்ஸ்போஸ்” செய்துவிட்டு சென்றது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை பெற்ற 5 வெற்றிகளில் சேஸிங் செய்து பெற்ற வெற்றிகளைவிட முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து எதிரணியை திக்குமுக்காடவைத்து வெல்வதையே ஃபார்முலாவாக வைத்திருந்தது.

முதல் முறையாக ஆர்சிபிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றபோது, சன்ரைசர்ஸ் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. இதை சிஎஸ்கே அணி இறுகப்பற்றிக் கொண்டு அதே உத்தியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம்

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி திடீரென உயர்வு பெற்று, 3வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 5வெற்றி 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக இருக்கிறது.

சிஎஸ்கே அணிக்கு இணையாக 10 புள்ளிகளுடன் கொல்கத்தா, லக்னெள, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இதனால் முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 5 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் மைனசில் வைத்துள்ளது. மற்ற 4 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பாசிட்டிவாக இருக்கிறது.

கொல்கத்தா-டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது என்பது தெரிந்துவிடும். தற்போது நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தா அணி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் சன்ரைசர்ஸ் நிகரரன்ரேட் மோசமாகக் குறைந்து, 0.075 ஆகச் சரிந்துள்ளது. 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டை குறைவாக சன்ரைசர்ஸ் வைத்துள்ளது.

சிஎஸ்கே

பட மூலாதாரம், SPORTZPICS

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், இதே மைதானத்தில் 210 ரன்களை டிபெண்ட் செய்ய முடியாமல் லக்னெள அணியிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணியை டிபெண்ட் செய்து வென்றுள்ளது.

ஆதலால் சிஎஸ்கே பந்துவீச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், பந்துவீச்சாளர்களிடையே ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியக் காரணம்.

அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்தகளில் 98 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கணக்கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதேபோல கெய்க்வாட்டுக்கு துணையாக டேரல் மிட்ஷெல் 32 பந்துகளில் அடித்த அரைசதம்(52), ஷிவம் துபே(39)ரன்கள் ஆகியவையும் ஸ்கோர் உயர்வுக்கு காரணம். கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் அமரவைக்கப்பட்ட மிட்ஷெல் நேற்று சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல ஷிவம் துபே, கெய்க்வாட் கூட்டணி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தவிர அணியில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரஹானே தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வருவதால், அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு ரவீந்திரா உள்ளேவரவும் வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

சீனியர் வீரர்களை கெய்க்வாட் எப்படிக் கையாளுகிறார்?

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ பனிப்பொழிவுக்கு மத்தியில் இந்த ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது கடினமானது. எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சேப்பாகத்தில் அதிகமான வெப்பம், ஈரப்பதமும் கூடுதலாக இருந்தது. நான் சதம் அடிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, அணியின் ஸ்கோரை 220 அதற்கு மேல் நகர்த்தவே திட்டமிட்டேன். கடந்த போட்டியில்கூட நான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை. சில ஷாட்களை நான் தவறவிட்டது எனக்கு வருத்தம். கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். தவறான பந்துகள் பல வீசினோம், பீல்டிங் சரியில்லை. ஆனால், தவறுகளைத் திருத்திக்கொண்டு, திட்டங்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். தேஷ்பாண்டே சிறப்பாகப் பந்துவீசினார், அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். குறிப்பாக இந்த ஈரப்பதமான சூழலில், சுழற்பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 25ரன்கள் மட்டுமே கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் பங்கு சிறப்பானது.”

“’நான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவருமே மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். சீனியர் வீரர்களிடம் நேரில் சென்று இப்படி விளையாடுங்கள், இப்படி பந்துவீசுங்கள் எனக் கூற முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பின்னால் இருந்து கொள்கிறேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே

பட மூலாதாரம், SPORTZPICS

சிஎஸ்கே அணி எப்படி வென்றது?

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகள் ஏதும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி செய்யாததே வெற்றிக்கு முக்கியக் காரணம். சன்ரைசர்ஸ் அணியில் எந்த பேட்டரையும் நங்கூரமிட வைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாய்னிஸைவிட ஆபத்தான பேட்டர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள்.

குறிப்பாக டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம், அபிஷேக் ஆகியோர் நிலைத்துவிட்டால் ஸ்கோர் எங்கோ சென்றுவிடும் என்பதால் இந்த பேட்டர்களை தனியாகக் கட்டம் கட்டி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

அடுத்தாக ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பதிரணா ஆகியோர் தங்களின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களை திணறவிட்டனர். பந்துவீச்சில் சரி செய்யப்பட்ட தவறுகள், ஆட்டத்தின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால், அந்தத் தவறுகள் நேற்று திருத்தப்பட்டு, கட்டுக்கோப்பான பீல்டிங் வீரர்களிடையே காண முடிந்தது.

குறிப்பாக மிட்ஷெல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்சுகளைப் பிடித்து, ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த முகமது நபி சாதனையுடன் சமன் செய்தார். பெரிதாக எந்த பவுண்டரிகளையும் கோட்டைவிடாமல், கட்டுக்கோப்பாக பீல்டிங் செய்தது, மனரீதியாக சன்ரைசர்ஸ்பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது.

சிஎஸ்கே

பட மூலாதாரம், SPORTZPICS

மெருகேறிய தேஷ்பாண்டே பந்துவீச்சு

சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாக காய்களை நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்குள் சென்றுவிட்டால் எந்த வீரரும் விளையாடுவிடுவார்கள், விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு.

அதுபோல் அன்கேப்டு வீரர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் நேற்று பெரிய மாற்றம், துல்லியம், லைன்லென்த் காணப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஹெட் ,பவுண்டரியும், அடுத்த ஓவரில் சிக்ஸரும் விளாசினாலும் கவலைப்படவில்லை. ஸ்லோவர் பாலை வைடாக தேஷ்பாண்டே வீச, அதை அடிக்க முற்பட்டு ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அன்மோல்பிரித் சிங்கை வந்தவேகத்தில் தேஷ்பாண்டே வெளியேற்றினார். டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததைதப் போல், அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்து அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை தேஷ்பாண்டே அளித்தார்.

சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், இந்த திறன் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லை, இந்த உத்தியை செயல்படுத்தவும் இல்லை. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் 3 பெரிய விக்கெட்டுகளை இழந்ததுமே மனரீதியாக நம்பிக்கை உடைந்துவிட்டது.

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் பயணித்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் சிக்ஸர் அடித்தும், கெய்க்வாட் ஒரு சிக்ஸரும் விளாசினர்.

ரன்களை அதிகமாகச் சேர்க்க சிக்ஸர், பவுண்டரி அவசியம் என்பதை உணர்ந்து நேற்று மிட்ஷெல், கெய்க்வாட் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேட் செய்தனர். இதனால் சிஎஸ்கே அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. மிட்ஷெல்(52) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபோது, 13.3 ஓவர்களில் சிஎஸ்கே 126 ரன்கள் சேர்த்திருந்தது.

சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் பினிஷிங் பணியை ஷிவம் துபே சிறப்பாகச் செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் அணியினர் நேற்று டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், துபே தனது அதிரடியால் மிரட்டி 4 சிக்ஸர்களை விளாசி 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் களமிறங்கி, 2 பந்தகளில் ஒருபவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்து தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் என்ன?

சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் வெளிப்பட்டதிலிருந்து தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சேஸிங்கில் தோற்று, இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் சேஸிங்கில் வீழ்ந்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி மீது எழும் கேள்வி அவர்களின் சேஸிங் முறைதான். ஏனென்றால், இதுவரை டிபெண்ட் செய்து ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ், சேஸிங் செய்தும் ஒருவெற்றிதான் பெற்றுள்ளார்கள்.

முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை திணறவைத்து வெல்வதையே உத்தியாக சன்ரைசர்ஸ் இதுவரை செயல்படுத்திவந்தது. ஆனால், வலிமையான, பவர் ஹிட்டர் பேட்டர்கள் அணியில் இருந்தும், சேஸிங்கில் கோட்டைவிடுகிறது. அதிலும் தொடர்ந்து இரு ஆட்டங்களும் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ஆட்டமுறையை சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெட், அபிஷேக், கிளாசன், மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, அன்மோல் பிரித் சிங், அப்துல் சமது ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் தோல்வி அடைந்தது அந்த அணியின் அடுத்தக் கட்டநகர்வை கேள்விக்குள்ளாக்குகிறது.

பந்துவீச்சில் நேற்று சன்சைர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதே தவிர சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நிதிஷ் ரெட்டிக்கு ஒரு ஓவர் வழங்கிய நிலையில் அப்படியே நிறுத்திக்கொண்டது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை பயன்படுத்திய அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை.