பத்தே பந்துகளில் 50 ரன்: தமிழக வீரர்களின் அதிரடியை ஊதித் தள்ளிய ஜேக்ஸ் – ஆர்சிபியால் எந்த அணிகளுக்கு நெருக்கடி?

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும்.

இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி 200 ரன்களை எட்டினாலே அந்த அணிக்கு வெற்றி பெற்றுவிடுவோம் என்று மனரீதியாக நம்பிக்கையும், உற்சாகமும் வந்துவிடும். ஆனால், இந்த சீசனில் மட்டும் எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிடுகிறது.

அப்படித்தான் இன்று ஆர்சிபி-குஜராத் அணிகள் மோதிய ஆட்டமும் அமைந்திருந்தது!!

அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 ஓவர்கள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விக்கெட் சரிவில் குஜராத் அணி

டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. குஜராத் அணியின் சுப்மான் கில், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினர். அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுக்கும் என்பதில் முதல் ஓவரிலே ஆப் ஸ்பின்னர் ஸ்வப்னில் பந்துவீசினார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த சாஹா, அதே ஓவரில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். யாஷ் தயால், சிராஜ் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசவே கில், சுதர்சன் ரன் சேர்க்க தடுமாறினர். பவர்ப்ளேயில் எதிர்பார்த்த அளவு ரன் சேர்க்கமுடியாமல், 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே குஜராத் அணி சேர்த்தது.

7-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். அவரின் 4வது பந்தில் கில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக்கான் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் களத்தில் இருந்து குஜராத் அணிக்காக ஆடினர்.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

ஷாருக்கான் மிரட்டல் அரைசதம்

வழக்கமாக ஷாருக்கான் நடுவரிசையில் களமிறங்குவார் ஆனால் அவரை 3வது வீரராக களமிறக்கினர். களத்துக்கு வந்தது முதலே ஷாருக்கான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கரன் ஷர்மா வீசிய 8வது ஓவரில் சுதர்சன் ஒருபவுண்டரி, சிக்ஸர்உள்பட 12 ரன்களை விளாசினார்.

மேக்ஸ்வெல் வீசிய 9-வது ஓவரில் ஷாருக்கான் ஒருசிக்ஸர், பவுண்டரி என 13 ரன்கள் சேர்த்தார். கரன் ஷர்மா வீசிய 10-வது ஓவரிலும் ஷாருக்கான் ஒருசிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்தது.

கேமரூன் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், கரன் ஷர்மா வீசிய 12ஓவரில் 2 சிக்ஸர் என ஷாருக்கான் அகமதாபாத் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 11.3 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. கிரீன் வீசிய 13வது ஓவரை வெளுத்த ஷாருக்கான் 2பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்து 24 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஷாருக்கான் களத்துக்கு வந்தது முதல் குஜராத் அணி ஓவருக்கு 10 ரன்ரேட்டில் பயணித்தது. நிதானமாக ஆடிய சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

பெருமை சேர்க்கும் தமிழக வீரர் சுதர்சன்

சாய் சுதர்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2022 சீசனில் இருந்து அருமையாகத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்த சுதர்சன் 23 போட்டிகளில் எட்டி, சராசரியாக 45 ரன்கள் வைத்துள்ளார், 135 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாகவே பேட் செய்து வருகிறார். சாய் சுதர்சன் 3வது வீரராக சிறப்பாக ஆடி வருவதால், அவரை தொடர்ந்து 3வதுவீரராக களமிறக்கவே குஜராத் அணி நிர்வாகமும் விரும்பியது.

சுழற்பந்துவீச்சை எளிதாக,அனாசயமாக ஆடக்கூடிய சுதர்சன் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தக்கூடியவர். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து 166 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். சுழற்பந்துவீச்சை எந்த அளவுக்கு விரும்பி ஆடக்கூடியவரோ அதேபோல வேகப்பந்துவீச்சையும் எளிதாக சுதர்சன் ஆடும் திறமை உடையவர்.

இந்த சீசனில் வேகப்பந்து வீ்ச்சுக்கு எதிராக சுதர்சன் 122 ஸ்ட்ரைக் ரேட்டும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 137 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். 2023 சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 148 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர் ப்ளேவில் 18 பந்துகளில் 16 ரன்கள் என நிதானமாக பேட் செய்த சுதர்சன் ஷாருக்கான் களத்துக்கு வந்தபின் பேட்டிங் கியரை மாற்றி ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார். 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ரன் சேர்ப்பை இன்னும் வேகப்படுத்திய சுதர்சன் 13 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இன்றை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 205 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 20 பந்துகளில் 41 ரன்களும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

கலக்கிய தமிழக வீரர்கள்

முகமது சிராஜ் 15வது ஓவரை வீசியபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. அரைசதம் நிறைவு செய்து பேட் செய்த ஷாருக்கான், முதல் பந்திலேயே யார்கரில் க்ளீன் போல்டாகி 58 ரன்களில் (30பந்துகள், 5 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முதல் 13 ஓவர்களுக்குள் குஜராத் அணி ஷாருக்கான் அதிரடியால் 43 ரன்கள் சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு ஷாருக்கான், சுதர்சன் இருவரும் சேர்ந்து 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர்.

நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி மந்தமாக ஆடும் என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் 7-வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை 100 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். 16 ஓவர்களுக்குப்பின் சுதர்சன், மல்லர் இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். கிரீன் வீசிய 17-வது ஓவரில் சுதர்சன் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார்.

சிராஜ் வீசிய 19வது ஓவரில் சுதர்சன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி, 2வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஆனால், மிகவும் சிரமமான அந்த கேட்சை ஜேக்ஸ் தவறவிட்டார். அந்த ஓவரில் சுதர்சன் பவுண்டரி அடித்து 13 ரன்கள் சேர்த்தார். யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரில் மில்லர் சிக்ஸர் உள்பட 13 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது.

தமிழக வீரர் சாய்சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், மில்லர் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

கணினி கணிப்பை பொய்யாக்கிய பேட்டர்

பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி அணி வெற்றி பெற 84 பந்துகளில் 138 ரன்கள் தேவைப்பட்டது. கணினியின் கணிப்புகள் ஆர்சிபி வெற்றிபெற 38.33 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், 24 பந்துகள் மீதமிருக்கையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கணினியின் கணிப்பையே பொய்யாக்கியது.

கணினியின் கணிப்பை பொய்யாக்கியதற்கு முக்கிய காரணமான பேட்டர் வில் ஜேக்ஸ். அதிரடி என்று சொல்வதைவிட காட்டடி அடித்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். 243 ஸ்ட்ரைக் ரேட்டில் ஜேக்ஸ் ஆடினார். 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

குஜராத் அணியின் பேட்டர்கள் 10 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அந்த 10 சிக்ஸர்களையும் ஆர்சிபி பேட்டர் வில் ஜேக்ஸ் ஒருவரே அடித்து 200 ரன்களை அனாசயமாக சேஸிங் செய்ய உதவினார். குறிப்பாக 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

ஆக்ரோஷம் தெறித்த பேட்டிங்

3வது வீரராக களமிறங்கிய ஜேக்ஸ் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக பேட் செய்தார். ரன்களைவிட பந்துகளை அதிகம் வீணாக்கி ஜேக்ஸ் ஆடினார். ஆனால், 10 ஓவர்களுக்குப்பின் ஜேக்ஸ் மதம் பிடித்த யானை போன்று ஆக்ரோஷமாக பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை ஓடவிட்டார்.

குறிப்பாக மோகித் சர்மா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 29 ரன்களை ஜேக்ஸ் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு 2 அல்லது 3 ஓவர்கள் வரை ஆகும் என்று ரசிகர்கள் எண்ணி தேநீர் குடிக்க சென்றவர்களுக்கு திரும்பி வந்தபோது வியப்புதான் காத்திருக்கும்.

ஏனென்றால், ரஷித்கான் வீசிய 16-வது ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து ஆர்சிபி அணியை 24 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெறவைத்து அஹமதாபாத் அரங்கையே வியப்பில் ஆழ்த்தினார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கோலி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக்ஸின் மிரட்டலான ஆட்டத்தின் முன் கோலியின் அரைசதம் கவனிப்பின்றி மாறியது.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

பாவப்பட்ட பந்துவீச்சாளர்கள்

குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் பாவப்பட்டவர்கள். வில் ஜேக்ஸுக்கு எப்படி பந்து வீசுவதென்று தெரியாமல் சிக்கித் தவித்தனர். இதில் பலிகடாவாகியது ரஷித் கான், மோகித் சர்மாதான். இருவரின் ஓவரில்தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது, மோகித் சர்மா 2 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார், ரஷித் கான் நிலைமை அதைவிட மோசம் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஒட்டுமொத்த குஜராத் பந்துவீச்சாளர்களும் ஜேக்ஸ் அதிரடியால் துவைத்து தொங்கவிடப்பட்டனர். ஓமர் ஜாய் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்.

இதுபோன்ற பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக சிக்கிக் கொண்டு பேட்டர்களால் கொடுமையாக வதம் செய்யப்படுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இதுவரை கட்டிக்காத்துவந்த தன்னம்பிக்கை எனும் சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவை பேட்டர்களை கிழித்து தொங்கவிடப்படுகின்றன. ரசிகர்களின் ரசனைக்காக, பந்துவீச்சாளர்கள் பலியிடப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

“நம்பிக்கை துளிர்விடுகிறது”

ஆர்சிபி கேப்டன் டூப்பிளெசிஸ் கூறுகையில் “ அருமையான விக்கெட். நாங்கள் முதலில் பந்துவீசியபோதே சேஸிங் எளிதாக இருக்கும் என நினைத்தோம். கடந்த சில போட்டிகளை விட தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். எங்கள் அணிக்குள் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிவிட்டது. பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சி பெற்று நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள். நாங்கள் இப்போது அடிப்படையான விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

நெருக்கடி தரும் ஆர்சிபி

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், நிகர ரன்ரேட்டில் முன்னேறி வருகிறது. இதுவரை ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்தான் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.415 ஆகக் குறைந்துவிட்டது. தற்போது 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என 3 அணிகள் இருக்கின்றன.

இதில் ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்களும், மற்ற இரு அணிகளுக்கும் 5 லீக் ஆட்டங்களும் உள்ளன. ஆர்சிபி அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் இதுபோல் பெரிய வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது பாதியில் உள்ள அனைத்து அணிகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளன.

RCB vs GT

பட மூலாதாரம், Getty Images

மோசமாகும் குஜராத்

குஜராத் அணி கடந்த 10 நாட்களில் சந்திக்கும் 3வது தோல்வி இதுவாகும். 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி கூடுதலாக 2புள்ளிகள் பெற்றுள்ளதேத் தவிர நிகர ரன்ரேட்டில் ஆர்சிபிக்கும் மோசமாக மைனஸ் 1.113 ஆக இருக்கிறது.

அடுத்து ஒரு போட்டியில் கூட குஜராத் அணி தோற்றாலும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் வந்துவிடும். ஏனென்றால், நிகர ரன்ரேட் மற்ற அனைத்து அணிகளையும் விட மோசமாக இருப்பது பெரும் பின்னடைவாக மாறும்.