காஷ்மீருக்கு உயிர் பயத்தையும் தாண்டி பிகார் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வது ஏன்?

பிகார் மக்கள்
படக்குறிப்பு, ராஜா ஷாவின் குடும்ப உறுப்பினர்கள்.
  • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாடே
  • பதவி, பிபிசி நிருபர், பாங்கா, பீகார்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் கடந்த வாரம் புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட நபரின் பெயர் ராஜா ஷா (ராஜு ஷா). அவர் பிகாரின் பாங்கா மாவட்டத்தின் நவாதா பஜார் கிராமத்தில் வசிப்பவர் என்று காவல்துறை தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீரில் டஜன்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பிகார் மாநில மக்கள் வாழ்வாதாரம் தேடி உள்நாடு மற்றும் உலகின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர்.

பிகாரில் இருந்து புலம்பெயர்வோர் இந்தியாவில் பொதுவாக டெல்லி, மும்பை மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு செல்கின்றனர். ஆனால் பிகாரின் சில பகுதி மக்களுக்கு காஷ்மீர், வாழ்வாதாரத்திற்கு மிகவும் பிடித்த இடம்.

கடந்த வாரம் சுடப்பட்ட 35 வயதான ராஜா ஷா, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஸ்ரீநகரில் வசித்து வந்தார்.

ராஜா ஷா அனந்த்நாக்கில் பக்கோடா (பஜ்ஜி) விற்று அதில் நல்ல வருமானம் பெற்றார். கடந்த வாரம் கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவர் கொலை செய்யப்பட்டார்.

பிகார் மக்கள்

பட மூலாதாரம், NIRA DEVI

காஷ்மீரை அடைந்தது எப்படி?

“அவர் காஷ்மீரில் பத்து வருடங்களாக வசித்து வந்தார். பக்கோடா விற்று வாழ்க்கை நடத்தினார். பிகாரில் வேலை வாய்ப்பு இருக்கவில்லை. ராஜா அனந்தநாக்கில் வசித்து வந்தார். அவரால் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியவில்லை. ஆனால் அவரது வாழ்க்கை நன்றாகவே இருந்தது,” என்று ராஜா ஷாவின் தாயார் நீரா தேவி கூறினார்.

ராஜா ஷா ஏப்ரல் 20 ஆம் தேதி ஒரு உறவினரின் திருமணத்திற்காக கிராமத்திற்கு வரவிருந்தார். ஆனால் அவர் கிராமத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ராஜாவின் தந்தை இப்போது உயிருடன் இல்லை. ராஜாவின் மூத்த சகோதரரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

”கிராமத்தில் வருமானம் இல்லாததால் தனது மைத்துனருடன் அவர் காஷ்மீர் சென்றார். அங்கு தினமும் நாலாயிரம் முதல் ஐயாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. நல்ல லாபமும் சம்பாதித்தார். இப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை,” என்று ராஜாவின் அண்ணி சோனி தேவி குறிப்பிட்டார்.

ராஜா ஷாவின் உடல் காஷ்மீரிலேயே தகனம் செய்யப்பட்டது. ஆவண வேலைகள் மற்றும் கிராமத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்ற பயம் காரணமாக உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்படவில்லை. ராஜாவை கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்காததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

பாங்கா மாவட்டத்தின் நவாதா பஜார் கிராமத்தில் வசிப்பவரும், ராஜா ஷாவின் அண்டை வீட்டாருமான திகம்பர் ஷாவும் 2005 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் வசித்து வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் தனது கிராமத்திற்கு திரும்பிவிட்டார்.

காஷ்மீரில் வாழும் பிகாரிகளின் கிராமம்

பிகார் மக்கள்
படக்குறிப்பு, திகம்பர் ஷாவின் கூற்றுப்படி, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு மாதம் தனது வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது, வாய்ப்பு கிடைத்தவுடன் காஷ்மீரை விட்டு வெளியேறினார்.

திகம்பர் ஷாவும் ஸ்ரீநகரில் பக்கோடா கடை நடத்தி வந்தார். அவர் ஸ்ரீநகரின் லால் சௌக் அருகே வசித்து வந்தார்.

“பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நான் ஒரு மாதம் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் மிகவும் பயந்துபோனேன். அதனால் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். அங்கு தினமும் ஏறக்குறைய எழுநூறு முதல் எண்ணூறு ரூபாய் வருமானம் இருந்தது. அதனால் அங்கு மீண்டும் செல்லலாம் என்று தோன்றியது, வீட்டு சொந்தக்காரரும் தொலைபேசியில் அழைத்து என்னை வருமாறு கூறுவார். ஆனால் இனி அங்கு போகமாட்டேன்,” என்று திகம்பர் ஷா கூறுகிறார்

திகம்பர் ஷாவும் ராஜா ஷாவும் காஷ்மீரில் இருந்து பலமுறை ஒன்றாக கிராமத்திற்கு வந்து சென்றுள்ளனர். திகம்பர் தனது தோழர்களுடன் காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் மதியத்திற்குள் வண்டியை தயார் செய்து கடையைப் போடுவார். பின்பு இரவு 10 மணிக்குள் வீடு திரும்புவது அவரது தினசரி வாடிக்கை.

பாங்கா மாவட்டத்தின் இந்தப் பகுதியில் வழக்கமாக பக்கோடா மற்றும் இனிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் ‘பத்கடி’ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் காஷ்மீர் பிகாரிகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏராளமான மக்கள் வாழ்வாதாரம் தேடி காஷ்மீர் சென்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமம் அடிப்படையில் இனிப்பு செய்பவர்கள் மற்றும் பொற்கொல்லர்களின் கிராமம். சிறந்த வாழ்க்கை தேடி கிராமத்தின் சுமார் 150 வீடுகளை சேர்ந்த மக்கள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

பத்கடி கிராமத்தில் உள்ள பலரிடம் பேச நாங்கள் முயற்சித்தோம். ஆனால் காஷ்மீரின் சமீபத்திய சூழ்நிலை காரணமாக பெரும்பாலான மக்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தவும், காஷ்மீர் பற்றி பேசவும் தயாராக இல்லை. அடையாளம் தெரியவந்தால் காஷ்மீரில் தங்கள் குடும்பம் குறிவைக்கப்படலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

காஷ்மீரில் பிகாரிகளின் வாழ்க்கை

பிகார் மக்கள்
படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு காஷ்மீரில் தேவேந்திர ஷாவின் மகன் கொல்லப்பட்டார்.

2021ஆம் ஆண்டு காஷ்மீரில் தேவேந்திர ஷாவின் மகன் கொல்லப்பட்டார்.

இந்த கிராமத்தில் தேவேந்திர ஷாவை சந்தித்தோம். அவருடைய கண்ணீர் இன்னும் வற்றவில்லை. தேவேந்திர ஷாவின் 22 வயது மகன் அரவிந்த் ஷா 2021 அக்டோபர் 16 ஆம் தேதி ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டார்.

“மகன் கொலை செய்யப்பட்ட போது, ​​அரசு 12 லட்சம் ரூபாய் தருவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும், நிலம் தருவதாகவும் உறுதியளித்தது. எங்களுக்கு 12 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது,” என்று தேவேந்திர ஷா குற்றம்சாட்டுகிறார்.

அரவிந்த் ஷா ஸ்ரீநகரில் கோல் கப்பா கடை நடத்தி வந்தார். இவர் 2004 முதல் காஷ்மீரில் வசித்து வந்தார். சிலர் அரவிந்திடம் ஆதார் அட்டையைக் காட்டச் சொல்லி அவரை சுட்டுக் கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரவிந்தின் சகோதரர் குமார் ஷாவும் 2000 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் வசித்து வந்தார். அவர் முதலில் அங்கு பணிபுரிந்தார். பின்னர் தெருவில் தள்ளுவண்டி மூலம் தனது தொழிலைத் தொடங்கினார். இதன் மூலம் நல்ல வருமானம் பெற்று வந்தார். கிராமத்திலோ அல்லது பிகாரிலோ வேலை வாய்ப்பு இல்லை. எனவே தான் காஷ்மீரில் வசித்ததாக அவர் கூறினார்.

“காஷ்மீரில் சம்பாத்தியம் இருந்தது. ஆனால் மன அமைதி ஒருபோதும் கிடைக்கவில்லை. 2016 இல் புர்ஹான் வானியின் மரணத்திற்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சூழல் மிகவும் மோசமாகிவிட்டது. எனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன், 2017 இல் நான் பிகார் திரும்பினேன்,” என்று குமார் கூறினார்.

பிகார் மக்கள்
படக்குறிப்பு, 2016 இல் புர்ஹான் வானியின் மரணத்திற்குப்பிறகு, காஷ்மீரில் இருந்து திரும்ப முடிவு செய்தார் குமார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி 2016இல் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். புர்ஹான் வானி சமூக வலைதளங்கள் காரணமாக காஷ்மீர் இளைஞர்களிடையே பிரபலமாக இருந்தார். வானியின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீரில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை மோதல்கள் நடந்தன. இதில் பலர் இறந்தனர்.

‘பிகாரைச் சேர்ந்தவர்கள் அங்கு குடியேறிவிடுவார்கள் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகிறார்கள். வெளியில் இருந்து யாரும் அங்கு குடியேறுவதை காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை,” என்று குமார் குறிப்பிட்டார்.

காஷ்மீர் காவல்துறையும் அவ்வப்போது யார் எங்கிருந்து வந்துள்ளார்கள் என்பதை சோதிக்கும் என்றும் மக்களின் ஆதார் அட்டைகளின் நகல்களை காவல்துறை சேகரிப்பதாகவும் அவர் எங்களிடம் கூறினார்.

இந்த கிராமத்தில் காஷ்மீரில் வசிக்கும் அரவிந்த் ஷாவை நாங்கள் சந்தித்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் பிகாரில் இருக்கிறார். அரவிந்த் ஷா புல்வாமாவில் பக்கோடா விற்கிறார். சுமார் 15 ஆண்டுகளாக அவர் காஷ்மீரில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் புல்வாமாவில் வசிக்கின்றனர்.

அரவிந்த் தனது சித்தப்பாவை தொடர்ந்து காஷ்மீர் சென்றடைந்தார். அவர் மீண்டும் காஷ்மீர் செல்ல இருக்கிறார். அவரது சித்தப்பா மற்றும் பல உறவினர்கள் ஏற்கனவே பிகாருக்குத் திரும்பிவிட்டனர்.

​​“இங்கு எந்த வேலையும் இல்லை. காஷ்மீரில் வருமானம் நன்றாக உள்ளது. அங்கு எனக்கு ஒருபோதும் பயம் ஏற்படவில்லை. பயந்திருந்தால் என்றோ திரும்பி வந்திருப்பேன். காஷ்மீரின் வருமானத்தால் எங்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளது,” என்று அரவிந்த் ஷா கூறினார்.

உயிர் பயத்தை விட வேலைவாய்ப்பு குறித்த கவலை அதிகம்

பிகார் மக்கள்
படக்குறிப்பு, பிகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் பத்கடி கிராமம்.

”எனக்குத் தெரிந்த பலர் காஷ்மீரில் வசிக்கின்றனர். சிலர் அங்கு கூலி வேலை செய்கிறார்கள், சிலர் சிறு தொழில் செய்கிறார்கள். இதுவரை காஷ்மீரில் எந்த விதமான பதிவு செய்யவோ அல்லது தனது அடையாளத்தை நிரூபிக்கவோ அவசியம் ஏற்பட்டதில்லை,” என்று அரவிந்த் கூறினார்.

தற்போது காஷ்மீருக்கு வெளியில் இருந்து வருபவர்கள் குறைவாக இருப்பதால் வியாபாரத்தில் போட்டி இல்லை என இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் கூறுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஆடை, நல்ல உணவு மற்றும் கல்வி வழங்குவதற்கு போதுமான பணத்தை இவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

பிகாரில் உள்ள சீதாமர்ஹி பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் காஷ்மீரில் பல ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார்.

காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற பல சம்பவங்கள் இருந்தபோதிலும், அலாவுதீன் காஷ்மீரை விட்டு ஓடவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயமாக அவரை கவலைக்குள்ளாக்குகின்றன.

“காஷ்மீரில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் கவலையாக இருக்கும். சில சமயங்களில் காஷ்மீரை விட்டு வெளியேறவும் நினைப்பேன். ஆனால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று எண்ணம் வரும். சில நேரங்களில் இங்கே விஷயங்கள் சிறப்பாக இருக்கும், சில சமயங்களில் மோசமாகிவிடும்.” என்று பிபிசியின் இணை செய்தியாளர் மஜித் ஜஹாங்கீரிடம் அவர் தெரிவித்தார்.

பிகார் மக்கள்

பட மூலாதாரம், MAJID JAHANGIR/BBC

படக்குறிப்பு, காஷ்மீரில் தொழிலாளர்கள் நல்ல வருமானம் பெறுகிறார்கள், ஆனால் அச்சமும் நீடிக்கிறது.

காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் மக்கள் ஏன் காஷ்மீருக்கு வருகிறார்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “நம்முடைய சொந்த மாநிலத்திலும் கூலி வேலை கிடைக்கும். ஆனால் காஷ்மீரில் கிடைக்கும் ஊதியம் பிகாரில் இல்லை. பிகாருடன் ஒப்பிடும்போது காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேலை கிடைத்துவிடும். கூலியும் பிகாரை விட அதிகம் கிடைக்கும்,” என்று பதில் அளித்தார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காஷ்மீரை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் வசிக்கும் முகமது கம்ரான், 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீருக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார்.

அனந்த்நாக் சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கம்ரான் கூறுகிறார். கொல்லப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ‘இலக்கு வைத்து கொல்லப்படுகிறார்களா’ என்பது தனக்குத் தெரியாது என்றும் கம்ரான் கூறினார்.

காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும் அங்கு அவர் ஏன் வருகிறார் என்று கேட்டதற்கு “காஷ்மீரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது. என்னைப் பொறுத்தவரை வானிலை ஒரு பெரிய காரணம். வருமானம் பற்றி பேசினால் அதில் பெரிய வித்தியாசம் இல்லை. காஷ்மீரில் எவ்வளவு சம்பாதிக்கிறோமோ அதே அளவுக்கு நம் மாநிலத்திலும் சம்பாதிக்கலாம்,” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவம் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிய வரும்போது அவர்கள் கவலையடைந்து காஷ்மீரில் இருந்து திரும்பி வருமாறு சொல்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(ஸ்ரீநகரில் இருந்து மஜித் ஜஹாங்கிருடன், பிபிசி இந்திக்காக)