பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்காக இந்த மாணவி வருந்துவது ஏன்?

பிராச்சி நிகம்

பட மூலாதாரம், BBC HINDI

படக்குறிப்பு, பிராச்சி நிகம் உபி போர்டில் முதலிடம் பிடித்தார். ஆனால் சிலர் அவரை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தனர் மற்றும் சிலர் அவரை பாராட்டினர்.
  • எழுதியவர், நீது சிங்
  • பதவி, பிபிசி இந்திக்காக
  • இருந்து சீதாபூரில் இருந்து

உத்திரபிரதேச கல்வி போர்டின் தேர்வு முடிவுகள் வெளியான ஐந்தாவது நாள். பள்ளி வளாகம் காலை 7.30 மணிக்கு, 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளால் நிரம்பி வழிந்தது.

காலை பிரார்த்தனை கூட்டத்திற்காக குழந்தைகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இது பிராச்சி நிகம் படிக்கும் பள்ளியின் காட்சி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 55 லட்சம் மாணவர்களிடையே பிராச்சி முதலிடம் பிடித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வெள்ளை சல்வார் குர்தா மற்றும் சிவப்பு துப்பட்டா அணிந்திருந்த பிராச்சி நிகம் எங்கள் கண்களில் பட்டார். அவரை நாங்கள் நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருந்தோம்.

பிராச்சி பள்ளிக்குள் நுழைந்தவுடன் அவளுடைய தோழிகள் அவளைப் பார்த்து சிரித்தனர். ஏனென்றால் இன்றும் பிராச்சிக்கு ஒரு நேர்காணல் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த சில நாட்களாகவே இந்தப் போக்கு தொடர்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மஹ்முதாபாத் பகுதியில் உள்ள சீதா இண்டர் கல்லூரியில் கடந்த ஒரு வாரமாகவே பண்டிகை போன்ற சூழல் நிலவுகிறது.

இதற்கு காரணம் பிராச்சி நிகம், சுபம் வர்மா உள்ளிட்ட 19 மாணவ மாணவிகள். இவர்கள் ஹை ஸ்கூல் மற்றும் இண்டர்மீடியட்டில் மாநில அளவில் முதல் 10 இடங்களில் சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த டாப்பர்களைப் பற்றி அனைவரும் பெருமைப்படுகிறார்கள். ஆனால் பிராச்சி நிகம் சிலரின் கேலிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கேலிக்கு என்ன காரணம்?

உடல் நலம் தொடர்பான சில காரணங்களால் அவருடைய மேல் உதடுகளில் சிறிய முடிகள் தோன்றியுள்ளன.

‘முதலிடம் பெற்றிருக்கவில்லையென்றால் என் மீது கவனம் வந்திருக்காது.’

“இந்த ட்ரோலிங் மற்றும் கூட்டத்தை பார்க்கும்போது, நான் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் முதலிடம் பெறாமல் இருந்திருந்தால், என் முகத்தை மக்கள் கவனித்திருக்க மாட்டார்கள். உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்தபிறகு என்னை ட்ரோல் செய்தவர்கள் வாயிலாகவே என் முகத்தில் இருக்கும் முடியை நான் முதன்முறையாக உணர்ந்தேன்,” என்று பிராச்சி நிகம் தெரிவித்தார்.

பிராச்சியின் முகத்தில் முடி வளர்ச்சி 9ம் வகுப்பில் இருந்து அதிகமானது.

வீட்டிலோ அல்லது பள்ளியிலோ யாரும் பிராச்சியின் உடல் தோற்றத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. தன் முகத்தில் முடி வளர்வதை பிராச்சி உணரவே இல்லை.

பத்தாம் வகுப்பு தேர்வில் பிராச்சி நிகம் 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரில் பிராச்சி மூத்தவர். அவர் பொறியாளர் ஆக விரும்புகிறார். ”முதலிடம் வராமல் இருந்திருந்தால் நான் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்கமாட்டேன். சோஷியல் மீடியா என்னை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. எங்கிருந்தெல்லாமோ எனக்கு அழைப்புகள் வருகின்றன. வீட்டில் நாள் முழுக்க கூட்டம்,” என்று புன்னகையுடன் கூறுகிறார் அவர்.

ஆனால் தொடர் போன் அழைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதால் பிராச்சிக்கு கஷ்டமாகவும் இருக்கிறது.

“ஒவ்வொரு நேர்காணலிலும் ட்ரோலிங் பற்றி அதிகம் பேசப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, ’நான் எப்படி காணப்படுகிறேன்’ என்பது பற்றி மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். தேவைப்பட்டால் நான் சிகிச்சை செய்துகொள்வேன். ஆனால் இப்போது நான் என் படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.

பிராச்சி நிகம்

பட மூலாதாரம், BBC HINDI

சமூக ஊடகங்களைப் பார்ப்பதை நிறுத்திய பிராச்சி

முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு சமூக ஊடகங்களைப் பார்ப்பதை பிராச்சி நிறுத்திவிட்டார். ட்ரோல்களைப் படிப்பதால் தனது படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்று அவர் நினைக்கிறார். இருப்பினும் சமூக வலைதளங்கள் தன்னை இவ்வளவு இளம் வயதிலேயே பிரபலமாக்கியதற்கு ட்ரோலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என் முகத்தில் பெரிய முடி இல்லாமல் இருந்திருந்தால் நான் ட்ரோல் செய்யப்பட்டிருக்க மாட்டேன். என்னை ட்ரோல் செய்யாமல் இருந்திருந்தால் இவ்வளவு மக்கள் கூட்டம் இருந்திருக்காது என்று அவர் கூறுகிறார்.

தற்போது பிராச்சி மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறார். ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படித்து என்ஜினியர் ஆக வேண்டும் என்பது அவர் கனவு.

“பிராச்சியுடன் இரண்டு நிமிடம் பேசும் தைரியம் எந்த ட்ரோலருக்கும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லமுடியாது. நிச்சயமாக தாக்கம் ஏற்படும். நாங்கள் அவளுக்கு நல்ல தைரியத்தை அளித்துள்ளோம். அவள் மனம் உடையவில்லை. உடையவும் உடையாது. அழகுதான் உயர்ந்தது என்று நினைப்பவர்களின் எண்ணம் மோசமானது,” என்று பிராச்சி ட்ரோல் செய்யப்பட்டதைப் பற்றி சீதா இண்டர் காலேஜ் முதல்வர் ரமேஷ் வாஜ்பாய் கூறினார்.

பிராச்சிக்கு இலவச சிகிச்சை அளிப்பது குறித்து துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் பேசியுள்ளார்.

‘என் மகள் எப்படி இருந்தாலும் அவளை எனக்கு பிடிக்கும்’

தனது பள்ளியில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனது உடல் தோற்றத்தைப் பற்றி ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என்று உரையாடலின் போது பிராச்சி தொடர்ந்து குறிப்பிட்டார்.

10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பிறகு டாக்டரை கலந்தாலோசிப்பேன் என்று அவரது தாயார் சில மாதங்களுக்கு முன்பு சொல்லிக் கொண்டிருந்தார்.

“எங்கள் மகளின் மேல் உதட்டில் முடி வளர்ந்திருக்கிறது. அதை நாங்கள் அதிகம் கவனிக்கவில்லை. இப்படியே என் மகளை எனக்கு பிடிக்கும். பார்லருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அவளது முடி வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருவதால், தேர்வு முடிந்ததும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நிச்சயம் நினைத்தோம். ஆனால் அதற்கு முன்பே மக்கள் சலசலப்பை உருவாக்கிவிட்டனர்,” என்று இதுகுறித்து பிராச்சியின் தாய் மம்தா நிகம் கூறினார்.

“எங்கள் மகளின் திறமையை விட அவளது உடல் தோற்றத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்தியதற்கு நான் வருந்துகிறேன். ட்ரோல் செய்யப்பட்ட உடனேயே, எங்கள் மகளை உட்கார வைத்து, இந்த எல்லா விஷயங்களும் உன்னை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று விளக்கினோம். எங்கள் வீட்டில் யாருக்கும் நேரமில்லாத காரணத்தால் மொபைலை எடுத்து சோஷியல் மீடியாவை பார்ப்பதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

பிராச்சியின் தந்தை மாநகராட்சியில் பணிபுரிகிறார்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரோலர்களிடம் எனக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. பிராச்சிக்கு ஆதரவாக பலர் முன்வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு கோபம் வரவில்லை என்று சொல்லமுடியாது. மன வருத்தமும் ஏற்பட்டது. ஒருவரை தனிப்பட்ட முறையில் அறியாத ஒருவர் எப்படி கருத்துத் தெரிவிக்க முடியும். யாருடைய உணர்ச்சிகளுடனும் விளையாட முடியாதபடி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்று பிராச்சியின் தந்தை சந்திரபிரகாஷ் நிகம் தெரிவித்தார்.

“முதலிடம் பெற்றபிறகு எனக்கும் கொஞ்சம் அழுத்தமும் உள்ளது. இப்போது மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. அதனால் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ட்ரோல்களைப் படிக்க எனக்கு நேரமில்லை. ட்ரோலிங் போன்றவற்றை புறக்கணித்து படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று. சாதாரண மனிதர்களிடமிருந்து உடல் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும் எல்லா பெண்களிடமும் நான் சொல்ல விரும்புகிறேன். அப்போதுதான் நம்மால் முன்னேற முடியும் ” என்கிறார் பிராச்சி.

பிராச்சி நிகம்

பட மூலாதாரம், BBC HINDI

படக்குறிப்பு, குடும்பத்துடன் பிராச்சி நிகம்

பிராச்சிக்கு ஆதரவாக வகுப்புத் தோழர்கள் பிரசாரம்

பிராச்சியின் வகுப்பு தோழர்கள் அவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் #DontTrollPrachi பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

பிராச்சியின் வகுப்புத் தோழரான ஹேமந்த் வர்மா பொதுத் தேர்வில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

“நான் இன்ஸ்டாகிராம் பயனர். பிராச்சிக்காக போடப்பட்ட பெரும்பாலான பதிவுகளுக்கு நான் பதிலளித்துள்ளேன். மக்கள் என்னையும் அதிகம் திட்டியுள்ளனர். அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பிராச்சிக்கு ஆதரவாக எழுதுகிறோம். பிராச்சியை ட்ரோல் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அவர் இன்னும் நிறைய முன்னேறிச்செல்ல வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

“சமூக வலைதளங்களில் பிராச்சியை மக்கள் ட்ரோல் செய்யும் போது, நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த பிரசாரத்தை தொடங்கினோம். வீட்டில் இருந்தபடி முன்பின் தெரியாத ஒருவரை ட்ரோல் செய்வது மிகவும் எளிதானது. பிராச்சி நிகமின் சாதனையை எந்த ஒரு ட்ரோலராலும் முறியடிக்க முடியாது,” என்கிறார் பிராச்சியின் மற்றொரு வகுப்புத் தோழரான க்யானேந்திர வர்மா.

“இப்போது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் போன் உள்ளது. அனைவருமே இந்த ட்ரோல்களைப் பார்த்திருக்க வேண்டும். உயிரியல் காரணங்களால் உடல் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும் பெண்களின் பெற்றோர்கள் தங்கள் பெண்களை எப்படி படிக்க வைப்பார்கள்? படிப்பதால் என்ன நன்மை, ஏதாவது சாதித்தால் தங்கள் மகள்கள் ட்ரோல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே அவர்கள் நினைப்பார்கள்,”என்று அவர் மேலும் கூறினார்.

பிராச்சி நிகம்

பட மூலாதாரம், BBC HINDI

கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள்?

“வீடியோவில் பிராச்சி மற்றும் அவரது பெற்றோர் பேசியதை நான் கேட்டவரையில், அவரது ஆசிரியர்களும் பெற்றோரும் அவளது உடல் தோற்றத்தை புரிந்துகொண்டுள்ளனர் என்றும் மிக எளிதாக அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் என்னால் சொல்லமுடியும். இதன் காரணமாக பிராச்சியின் கவனம் இந்த விஷயத்தின்மீது செல்லவே இல்லை. மேலும் அவளால் படிப்பில் கவனம் செலுத்தி முதலிடம் பிடிக்க முடிந்தது,” என்று 18 ஆண்டுகளாக லக்னெளவில் கவுன்சிலிங் செய்து வரும் மூத்த உளவியலாளர் டாக்டர் நேஹா ஆனந்த் கூறினார்.

“இந்த காலகட்டத்தில் பாடி ஷேமிங் குழந்தைகள் மீது மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல குழந்தைகள் மன சோர்வுக்கு ஆளாகிறார்கள். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“குழந்தைகள் தங்களுடைய திறன்கள் மற்றும் பலங்களில் கவனம் செலுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களைச் சுற்றி அத்தகைய சூழலை உருவாக்க வேண்டும். வெளி அழகுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்,” என்று டாக்டர் நேஹா குறிப்பிட்டார்.

முக்கியமான தகவல்

மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் தெரபி மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும், இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்-

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 (13 மொழிகளில் கிடைக்கிறது)

ஹ்யூமன் பிஹேவியர் அண்ட் அலைட் சைன்ஸஸ்: 9868396824, 9868396841, 011-22574820

ஹித் குஜ் உதவி எண்: மும்பை- 022- 24131212

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெண்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ் – 080 – 26995000