சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி அறிமுகப்படுத்திய புதிய மின்சார வாகனம்

சியோமியின் மின்சார வாகனம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மரிகோ ஒய் மற்றும் பீட்டர் ஹாஸ்கின்ஸ்
  • பதவி, வணிக செய்தியாளர்கள், பிபிசி

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது முதல் மின்சார வாகனத்தை (EV) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில், ஷாவ்மியின் தலைமை நிர்வாகி லய் ஜுன், SU7 மாடலின் விலை 215,900 யுவான்(ரூ.24.89 லட்சம்) மற்றும் மேக்ஸ் பதிப்பின் விலை 299,900 யுவான் (34.58 லட்சம்) என்று கூறினார்.

விற்பனையின் முதல் 27 நிமிடங்களுக்குள் 50,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றதாக ஷாவ்மி நிறுவனம் கூறுகிறது.

உலகளவில் விற்பனைகள் குறைந்து, அதன் காரணமாக மாற்றி மாற்றி விலையை நிர்ணயிக்கும் போர் நிறுவனங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும்போது ஷாவ்மி சந்தையில் நுழைகிறது.

மின்சார கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான டெஸ்லா மற்றும் பி.ஒய்.டி நிறுவனங்களை ஷாவ்மி எதிர்கொள்கிறது. சீனாவில் டெஸ்லா மாடல் 3இன் ஆரம்ப விலை 245,900 யுவான் (ரூ. 28.35 லட்சம்).

போர்ஷேவின் டெய்கான் மற்றும் பனமேரா மாடல்களுடன் ஒப்பிடுகையில், SU7 குறைந்தபட்சம் 700 கிமீ (435 மைல்கள்) செல்லக் கூடியது. இது, டெஸ்லா மாடல் 3இன் 567 கி.மீ தூரத்தை முறியடிக்கும் என்றும் லய் ஜுன் கூறினார்.

SU7இல் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களுடன் இணைப்பதற்கான வசதி இருப்பதால் தற்போதுள்ள வாடிக்கையாளர்களை அது ஈர்க்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தரும் தரவுகளின்படி, ஷாவ்மி உலகளவில் ஸ்மார்ட்போன்களின் மூன்றாவது பெரிய விற்பனையாளராக உள்ளது. செல்போன் சந்தையில் சுமார் 12% பங்கை ஷாவ்மி கொண்டுள்ளது.

இது அரசுக்குச் சொந்தமான கார் உற்பத்தியாளர் BAIC குழுமத்தின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஆலையில் தயாரிக்கப்படும், இது ஆண்டுக்கு இரண்டு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.

சியோமியின் மின்சார வாகனம்

பட மூலாதாரம், Getty Images

“இவ்வளவு தூரம் அடைந்ததே பெரிய சாதனை என்றாலும், ஷாவ்மியின் மின்சார கார்களுக்கு வாடிக்கையாளர் சந்தை இருக்கிறது என்று நிரூபிப்பதே இலக்கு” என்று ஆட்டோமொபிலிடி என்னும் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் பில் ரூஸோ பிபிசியிடம் தெரிவித்தார்.

மின்சார கார்களை தயாரிக்க விரும்பும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல சவால்கள் இருக்கின்றன. அதனால்தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் மின்சார வாகனங்களை உருவாக்கும் திட்டத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

சீனாவில் தங்கள் பிராண்டிற்கான தேவை இருக்கிறது என்ற ஷாவ்மி நம்புவதால்தான் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக ரூஸோ கூறுகிறார். அதேநேரம் சீனாவை தவிர உலக சந்தையில் வேறு எங்கும் தனக்கான வரவேற்பு இருக்காது என்று ஆப்பிள் கருதியதால்தான் திட்டத்தைக் கைவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அடுத்த 10 ஆண்டுகளில் தனது வாகன வணிகத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக ஷாவ்மி தெரிவித்துள்ளது. “சீன மின்சார வாகனச் சந்தை மிகவும் முதிர்ச்சியடைந்தது. உற்பத்தியாளர்களுக்கு மிகவும் நிலையான சூழலை உருவாக்குகிறது,” என்று ஆராய்ச்சி நிறுவனமான ரைஸ்டாட் எனர்ஜியை சேர்ந்த அபிஷேக் முரளி கூறினார்.

“உதாரணமாக, பேட்டரி விநியோகச் சங்கிலி மிகவும் வலுவாக உள்ளது. மேலும் வளர்ந்து வரும் மின்சார வாகன ஊட்டத்தைப் பூர்த்தி செய்ய நாட்டில் சார்ஜிங் நெட்வொர்க்கும் வளர்ந்து வருகிறது,” என்கிறார்.

சீனாவின் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான விலை நிர்ணயிக்கும் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில் ஷாவ்மியின் முதல் கார் அறிமுகமாகியுள்ளது.

சியோமியின் மின்சார வாகனம்

பட மூலாதாரம், Getty Images

கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா, சமீபத்திய மாதங்களில் சீனாவில் தனது கார்களின் விலையை ஆயிரக்கணக்கான டாலர்கள் குறைத்துள்ளது. ஏனெனில் உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன தயாரிப்பாளரான BYD போன்ற உள்ளூர் போட்டியாளர்கள் விலைகளைக் குறைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கார் சந்தை ஏற்கெனவே பல உற்பத்தியாளர்களைக் கொண்டு நெரிசலாக உள்ளது. எனவே புதிதாக நுழைபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் அதிகாரிகளிடம் இருந்து ஷாவ்மி ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், BYD வருடாந்திர லாபத்தில் சாதனை படைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் வளர்ச்சி குறைந்துவிட்டதாகக் கூறியது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைவதால் நுகர்வோர் செலவினங்கள் குறைந்துள்ளன. எனவே, ஷாங்காயை தளமாகக் கொண்ட மின்சார கார் தயாரிப்பாளர் நியோ, இந்த ஆண்டின் முதல் காலாண்டு விநியோகங்களின் கணிப்பைக் குறைத்துள்ளது.

சியோமியின் மின்சார வாகனம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா அடுத்த வாரம் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான அதன் விநியோக கணிப்புகளை அறிவிக்க உள்ளது.

அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருகின்றன.

பெய்ஜிங் அமெரிக்க பணவீக்க குறைப்பு சட்டத்தின் கீழ் “பாரபட்சமான மானியங்களை” எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இதற்கிடையில், சீன அரசு வழங்கும் மானியங்கள் அவர்கள் நாட்டின் மின்சார கார் உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாடல்களைவிட குறைவான விலையில் விற்க உதவியதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.