காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன?

ஐநா தீர்மானத்திற்குப் பிறகு இப்போது இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி

  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்

காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் ‘சேதத்தை’ ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

24 மணிநேரத்தில் 81 பேர் பலி

ஐநா தீர்மானத்திற்குப் பிறகு இப்போது இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், REUTERS

“உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு ‘நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து ‘இறுதியாக ஏதாவது சொல்லும்’ என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார்.

இசா இந்தக் குழுவின் ‘மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்’ என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ‘முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்’ அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.

தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை

ஐநா தீர்மானத்திற்குப் பிறகு இப்போது இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும்.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது.

இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது.

தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது.

“நிரந்தர போர் நிறுத்தத்துடன்” காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது.

ஹமாஸின் நிலைப்பாடு, ‘பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது.

ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்,” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி

ஐநா தீர்மானத்திற்குப் பிறகு இப்போது இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார்.

“இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது” என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர்.

கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார்.

“பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன.

இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும்.

ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.

காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், ‘பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்’ இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் ‘அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர்

ஐநா தீர்மானத்திற்குப் பிறகு இப்போது இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், REUTERS

கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது.

உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ‘ கூட்ட நெரிசலில்’ சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது.

இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின.

திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது.

35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார்.

அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், “அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன,” என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது.