KKR vs PBKS: பேட்ஸ்மேன்கள் காட்டு அடி, கலக்கத்தில் பவுலர்கள் - எங்கே செல்கிறது டி20?

பட மூலாதாரம், SPORTZPICS

  • எழுதியவர், அயாஸ் மேமன்
  • பதவி, கிரிக்கெட் எழுத்தாளர்

உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள்.

இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய (26.04.2024) பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெளிவாகிவிட்டது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன.

ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே.

பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.

எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள்

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன.

ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை.

இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது.

செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது.

சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர்.

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம்.

டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.

இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன?

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன.

டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது.

இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர்.

அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன.

உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது.

சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.

கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம்.

இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். “இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்,” என்று அவர் கூறுகிறார்.

பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட்.

வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம்.

“ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார்.

நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது.

முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். “பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது” என்கிறார் ஸ்டெய்ன்.

டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்.