2024 மக்களவைத் தேர்தல், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்றும், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் வெற்றிக்கான அளவுகோல்களைத் தன்னால் பூர்த்தி செய்ய இயலவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அவர் தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். ஆந்திரா அல்லது தமிழகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்று முன்னர் ஊகங்கள் கிளம்பின. நரேந்திர மோதியின் இரண்டு ஆட்சிக் காலங்களிலும் அமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். இரண்டு முறை மாநிலங்களவை எம்.பியாக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அமைச்சர் பதவி பெற்றவர்களும் இம்முறை மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தற்போது இருவரும் மாநிலங்களவை எம்.பிக்களாக உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ‘டைம்ஸ் நவ்’ செய்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் “தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இல்லை” என்று கூறினார். “தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் இருந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்று கட்சியின் தலைவர் என்னிடம் கேட்டார். இதைப் பற்றி யோசிக்க பத்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லாததால் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்,” என்றார் நிர்மலா சீதாராமன்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு இன்னொரு பிரச்னை இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான அளவுகோல்களை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு குறிப்பிட்ட மதம் என்ற சமன்பாடும் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நான் இந்த அளவுகோல்களுக்குள் பொருந்தாததால் வேண்டாம் என்று சொன்னேன்.

எனது வாதத்தை கட்சி ஏற்றுக்கொண்டது. அதற்கு நன்றி. நான் தேர்தலில் போட்டியிடவில்லை,” என்று கூறியிருந்தார் அவர்.

நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை பதவிக்காலம் 2028 வரை உள்ளது.

நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர்

2024 மக்களவைத் தேர்தல், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை (Corporate affairs) ஆகிய இரண்டு முக்கிய அமைச்சகங்கள் நிர்மலா சீதாராமனின் பொறுப்பில் உள்ளன.

இவர்தான் நாட்டின் முதல் (முழுநேர) பெண் நிதியமைச்சர். இதற்கு முன், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ​​சில காலம் நிதியமைச்சராகவும் இருந்தார்.

மோதியின் முதல் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, நிர்மலா சீதாராமன் ஜேஎன்யூவில் படித்துவிட்டு கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்தார். இதன் பிறகு கணவருடன் லண்டன் சென்று அங்கு பிபிசியில் பணிக்கு சேர்ந்தார்.

நிர்மலா சீதாராமன் 1990களில் இந்தியாவுக்கு திரும்பி வந்து கற்பித்தல் துறையில் பணிபுரிந்தார். பின்னர் ஹைதராபாத்தில் பிரணவ பள்ளியை நிறுவினார்.

நிர்மலா சீதாராமன் 2008ஆம் ஆண்டு பாஜகவில் நுழைந்தார், அப்போது அவருக்கு தேசிய செயற்குழுவில் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. தேசிய செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்த தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது மூத்த தலைவர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.

ராஜ்நாத் சிங் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதும், தேசிய செயற்குழுவில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்கு மீண்டும் கிடைத்தது. அப்போது அருண் ஜெட்லி மேடையில் இருந்தார்.

அவர் ராஜ்நாத் சிங்கிடம், “நிர்மலாவின் பேச்சைக் கேளுங்கள், அதில் நிறைய முக்கிய அம்சங்கள் இருக்கும்” எனப் பரிந்துரைத்தார். நிதின் கட்கரி ஜனாதிபதியாக பதவியேற்றதும், நிர்மலா செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

நிர்மலா தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆந்திராவிலும் உறவினர்கள் உள்ளார்கள். தென்னிந்திய பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியில் பேசுவதிலும் சிரமப்பட்டார். ஆனால், இந்தி சரியாகப் பேசாவிட்டாலும், திறம்பட செயல்படக் கூடியவர் என கட்சியில் முடிவு செய்யப்பட்டது. அவருடைய ஆங்கிலத்திலும் ஒரு புத்துணர்ச்சி இருந்தது.

அடல் பிஹாரி வாஜ்பேயி அரசில் தேசிய மகளிர் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன். 2009இல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

நிர்மலா சீதாராமன் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜகவால் மாநிலங்களவை எம்பி ஆனார். இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​பிரான்ஸ் உடனான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நரேந்திர மோதி அரசு ஊழல் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தனது அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரித்துப் பேசினார் நிர்மலா சீதாராமன்.

மோதி அரசை விமர்சிக்கும் நிர்மலா சீதாராமனின் கணவர்

2024 மக்களவைத் தேர்தல், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், PARAKALA PRABHAKAR

படக்குறிப்பு,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர்.

நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஆந்திர அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தார். அவர் ஒரு பிரபலமான பொருளாதார நிபுணரும்கூட.

மோதி அரசின் கொள்கைகளை அடிக்கடி விமர்சித்து வருகிறார் பிரபாகர். புதன்கிழமையன்று, பிரபாகரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், தேர்தல் பத்திரங்களுக்கான விலையை பாஜக தர வேண்டும் என்று அவர் பேசியிருந்தார்.

தொலைக்காட்சி நிருபரிடம் பேசுகையில், “தேர்தல் பத்திர விவகாரம் வரும் காலங்களில் பாஜகவுக்கு தலைவலியாக இருக்கும். தேர்தல் பத்திரங்கள் என்பது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னையால் பாஜகவை வாக்காளர்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்,” என்று பிரபாகர் கூறியிருந்தார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. 2019 ஏப்ரல் 12 முதல் 2024 பிப்ரவரி 15 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூபாய் 6 ஆயிரத்து 986 கோடிக்கு மேல் நன்கொடையாகப் பெற்றுள்ளது பாஜக. இதற்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

மன்மோகன் சிங், பிவி நரசிம்மராவ் ஆகியோரின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பாஜக அடிக்கடி காங்கிரஸை குறிவைத்து விமர்சித்து வருகிறது. பாஜகவின் இந்த நிலைப்பாட்டை பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார்.

“மன்மோகன் சிங், பி.வி.நரசிம்மராவ் ஆகியோரை பொருளாதாரக் கொள்கைகளுக்காக பாஜக குறிவைக்கிறது, இது அரசியலுக்காகவே அன்றி பொருளாதாரப் புரிதலுடன் அல்ல,” என்று ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையில் பிரபாகர் கூறியிருந்தார்.

தனது கட்சிக்காகப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன். கொள்கை விஷயங்களில்கூட, கட்சி அவரை ஆய்வு செய்யச் சொன்னது. இவ்வாறு படிப்படியாக அவர் செய்த பணிகள் உயர்மட்ட தலைமையில் தாக்கங்களை ஏற்படுத்தியது.

கட்சி மாநாடுகளில் தனது உரைகள் மூலமாகப் பலரின் கவனத்தை ஈர்த்தார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி தனது மாநிலத்திற்கு அவரை அழைத்திருந்தார். அங்கு பெண்கள் குழுக்களில், குறிப்பாக சுய உதவிக் குழுக்களில் பாஜகவுக்காக பிரசாரம் செய்தார்.

நிர்மலா சீதாராமனின் தேர்தல் பணிகள் மோதியைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. குஜராத்தியோ, இந்தியோ சரியாகத் தெரியாவிட்டாலும்கூட கடந்த குஜராத் தேர்தலில் சுறுசுறுப்பாகப் பணியாற்றினார்.

தென்னிந்தியாவில் இந்தி தொடர்பாகப் பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு ​​அரசியல் ஆளுமையாக இருந்தாலும்கூட தனது சுமாரான இந்தி பேசும் திறனால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார் நிர்மலா சீதாராமன்.