← முகப்பு செய்திகள்

உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான அதிநவீன கையடக்கத் த

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான அதிநவீன கையடக்கத் த
87 கையடக்கத் தொலைபேசிகளுடன் 03 சீனப் பிரஜைகள் கைது

உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பற்றரிகளுடன் மூன்று சீனப் பிரஜைகளைக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை, விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள எவ்விதப் பொருட்களும் இல்லை என அறிவிக்கும் கிரீன் சேனல் ஊடாக வெளியேற முயன்ற போதே இவர்கள் சுங்கப் பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரு ஆண்களும் அடங்குவர். இவர்கள் நேற்றைய தினம் மாலை 6.43 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் ஒரு சந்தேகநபர், தீர்வையற்ற கடைகளில் வழங்கப்படும் கறுப்பு நிறப் பொலித்தீன் பையுடன் கிரீன் சேனல் வழிக்குள் நுழைந்தபோது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைச் சோதனையிட்ட போது, சொக்லேட் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே மிக சூட்சுமமாக கையடக்கத் தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏனைய இருவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் அணிந்திருந்த ஜாக்கெட்டுகளுக்கு உள்ளே பிரத்தியேகமாகத் தைக்கப்பட்டிருந்த ரகசிய ஆடைகள், காலுறைகள் , காலணிகள் மற்றும் பயணப் பைகளுக்குள்ளும் தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அம்பலமானது.

இவர்களிடமிருந்து, 87 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் 140 பற்றரிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் 5.14 மில்லியன் (51 இலட்சத்துக்கும் அதிகம்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சீனப் பிரஜைகள், கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளைக் கொண்டு இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் ‘சைபர்’ சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பினர் பலமாகச் சந்தேகிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களான மூன்று சீனப் பிரஜைகளும் மேலதிக விசாரணைகளுக்காகச் சுங்கப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net