சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. இதையடுத்து 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்துள்ளது.
சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா மட்டும் பொறுப்புடன் விளையாடி 135 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி 20 ரன்களும், செடிகுல்லா அடல் 17 ரன்களும், அப்துல் மாலிக் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் அந்த அணி 58.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சு தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் அபாரமாக பந்து வீசினார். மொத்தம் 22 ஓவர்கள் வீசிய அவர், அதில் 10 ஓவர்களை மெய்டனாக வீசி, வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவருக்கு பக்கபலமாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 11 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.
இந்திய அணியை விட 412 ரன்கள் பின்தங்கியதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் பாலோ-ஆன் கொடுத்தார். இதையடுத்து மூன்றாம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆப்கானிஸ்தான் அணி.
IND vs AFG: அறிமுக டெஸ்டில் மானவ் சுதார் சாதனை.. ஆப்கானிஸ்தான் அணியை தனி ஆளாக மிரள வைத்து ரெக்கார்டு
பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளதால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 412 ரன்கள் என்ற மிகப்பெரிய பின்னடைவை ஆப்கானிஸ்தான் அணி சமன் செய்வது கடினம் என்பதால், மூன்றாம் நாள் ஆட்டத்திலோ அல்லது நான்காம் நாள் அன்றோ இந்திய அணி பிரம்மாண்டமான இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.