லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்தின் இந்த வெற்றியால், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் வாய்ப்பு வெறும் 2 சதவீதமாகக் குறைந்து பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
தற்போது சண்டிகரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பிரம்மாண்டமான இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கியுள்ளது. ஆனால், இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ் இடம்பெறவில்லை. எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும், அது உலக டெஸ்ட் சாம்பியன்شیப் புள்ளிப்பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிரா என 48.15 சதவீத புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தியாவுக்கு முன்னிலையிலும் உள்ளன.
இந்திய அணிக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பலமான அணிகளுக்கு எதிரான இந்த 9 போட்டிகளில், இந்திய அணி குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற மிகக் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு சரியான அணியைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
IND vs AFG: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ-ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான்.. மானவ் அசத்தல்
லார்ட்ஸ் மைதானத்தில் சமமற்ற பவுன்ஸ் இருந்த கடினமான பிட்ச்சில் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 140 ரன்களுக்கும், நியூசிலாந்து 113 ரன்களுக்கும் சுருண்டன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 226 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு 15 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகக் குறைந்து, தரவரிசையில் 2-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம், ஆலி ராபின்சனின் அபார பந்துவீச்சால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்தாலும் அதன் இறுதிப்போட்டி வாய்ப்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.