ஏழுவருடங்கள் தாண்டி விசாரணை!

by admin

தனது அதிகாரத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் அணி பாதுகாப்பினை வைத்திருந்தாராவென்ற விமர்சனங்கள் மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு  ஏழு வருடங்களின் பின்னராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (24)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்திருந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரும் சாட்சியமளித்திருந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டுக்களிற்குள்ளாகியுள்ள முன்னாள் போராளி தற்போதும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்