‘நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்’ – யொகோ கமிகவா !

by admin

‘நண்பன் என்ற ரீதியில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஜப்பான் தொடர்ந்து வழங்கும்’ என்ற செய்தியைக் கூறுவதற்காகவே தான் இலங்கைக்கு வருகைதந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் யொகோ கமிகவா மேலும் கூறியதாவது:

எனது பிறப்பிடமான ஷிஸுவோகா ‘க்ரீன் டீ’க்கு பெயர்போன இடமாகும். எனவே, ‘க்ரீன் டீ’ விளையும் மண்ணில் இருந்து முதன்முறையாக ‘சிலோன் டீ’ விளையும் மண்ணுக்கு வருகைதருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஊக்கமும், சமாதானத்தைக் கட்டியெழுப்பல், புனர்வாழ்வளித்தல் மற்றும் மீள்கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இலங்கையின் முயற்சிகளுக்கு யஸுஷி அகாஷி தலைமையில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவும் இரு நாட்டு மக்களினதும் நினைவலைகளில் இருக்குமென நம்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், இலங்கை எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியது.

அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜப்பான் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கியது.

அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் ஜப்பான், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமைதாங்குகிறது.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன மீளுறுதிப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த இந்து – பசுபிக் பிராந்தியத்தினதும் உறுதிப்பாடு மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இன்றியமையாததாகும்.

‘நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்’ என்ற செய்தியை கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை செயற்திறன் மிக்க வகையில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம்.

அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கடன் நெருக்கடி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலங்கை உரியவாறு கையாள்கிறது.

அந்த வகையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் அனைத்துக் கடன்வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடானது வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடையப்படவேண்டும்.

மேலும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்.

இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட மறுசீரமைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாதவையாகும் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்