← முகப்பு தமிழ்

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக்

🕐 15 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிஜடியினர் தொடர் விசாரணையில் பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

2006ஆம் ஆண்டு கல்லடிப் பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை.

பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை.

கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை.

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகச் செயற்பட்டு வந்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் மீதான வழக்குத் தாக்கல் விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிள்ளையானின் பாதுகாப்பு காரணங்களினால் அவரை நீதிமன்றிற்கு அழைத்து வர முடியாது என சிஐடியினர் நீதவானிடம் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றையவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை 'zoom' இணையவழி ஊடாக விசாரணை செய்த நீதவான், பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிள்ளையானின் மிக நெருங்கிய தோழரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரி.எம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் என்பவருக்கு எதிராக 7 மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனியபாரதி தனக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைத்த சம்பவத்திலும் பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று பிள்ளையானை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றப் பகுதியைச் சுற்றி விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் நீதிமன்றப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

மேலும் செய்திகள்
📰
தமிழ்
கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை
15 Jun 2026
📰
தமிழ்
100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரான
15 Jun 2026
📰
தமிழ்
(எம்.ஆர்.எம்.வசீம்)நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டி மாவட்டத்த
8 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
(க.சிவலிங்கமூர்த்தி)தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பன்னிரண்டாவது தேசிய மாநாடு வவுனியா மாவட்டத்தில் உள்ள வோர்ஸ் ம
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள்
3 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
சிலாபம் பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net