← முகப்பு செய்திகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு

🕐 15 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net