உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியின் ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் காணிக்கை பணம் திருடப்பட்ட விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு அனுப் பிரகாஷ் அவஸ்தி என்ற வழக்கறிஞர் நேற்று இ-மெயில் மூலம் 4 பக்க கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார். புகார் குறித்து எப்ஐஆர் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார்.
ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான காணிக்கை திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயிலின் காணிக்கை தொகையை 50 ஊழியர்கள் ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அன்றாடம் எண்ணுகின்றனர். இவர்களில் 24 ஊழியர்கள் பணத்தாள்களை எண்ணி கட்டுகளாக கட்டும் பணியைச் செய்கின்றனர். இந்த ஊழியர்களை, கோயில் அறக்கட்டளை ஒரு தனியார் நிறுவனம் மூலமாகப் பணியமர்த்தியுள்ளது.
பணத்தை எண்ணும் அந்த 24 ஊழியர்களின் பணிகளை அறக்கட்டளையைச் சேர்ந்த 12 ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். தற்போது, அந்த ஊழியர்கள் மற்றும் அவர்களைப் பணியமர்த்திய அறக்கட்டளை ஆகிய அனைத்தும் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக, உ.பி. அரசு அமர்த்திய 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அயோத்தி வந்தடைந்து இருப்பது குறிப்பிடதக்கது.