வாஷிங்டன்: அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது. மொத்தம் 16 நகரங்களில் நடைபெறும் இந்த மாபெரும் தொடரில், சாம்பியன் பட்டத்தை வெல்ல உலகின் முன்னணி அணிகள் தயாராகி வருகின்றன. இந்தத் தொடரில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கப் போகும் 10 முக்கிய நட்சத்திர வீரர்களின் பட்டியல் இதோ:
கால்பந்து உலகின் இரு பெரும் ஜாம்பவான்களான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி மற்றும் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இது 6வது உலகக் கோப்பையாகும். கடந்த 2022 தொடரில் கோப்பையை வென்ற 38 வயதான மெஸ்சி, இம்முறை கோப்பையைத் தக்கவைக்கக் களமிறங்குகிறார்.

தனது வாழ்நாளில் அனைத்துக் கோப்பைகளையும் வென்ற 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவரை உலகக் கோப்பையை மட்டும் வெல்லாததால் தனது இறுதி வாய்ப்பில் சாதிக்கக் காத்திருக்கிறார்.
கடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து தங்க காலணி வென்ற பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே, இம்முறை தனது அணிக்கு 3வது கோப்பையைப் பெற்றுத் தர தீவிரமாக உள்ளார். 27 வயதான அவர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்.
பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வினிசியஸ் ஜூனியர், தனது அசாத்திய வேகம் மற்றும் திறமையால் பிரேசில் அணிக்கு 6வது கோப்பையை வென்று தரும் முனைப்பில் உள்ளார்.
ஸ்பெயின் அணியின் 18 வயது இளம் புயலான லமீன் யமால், யூரோ 2024 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற உத்வேகத்துடன் தனது முதல் உலகக் கோப்பையில் தடம் பதிக்க உள்ளார்.
துருக்கி அணியை 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பைக்கு அழைத்து வந்துள்ள 21 வயது நட்சத்திரமான ஆர்டா குலேர், தனது அபாரத் திறமையால் உலக அரங்கில் சாதிக்கத் தயாராகி வருகிறார்.
நார்வே அணியை 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்கு அழைத்து வந்துள்ள முன்கள வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார். தகுதிச்சுற்றுப் போட்டிகளில் அதிக கோல் அடித்த அவர் எதிரணிகளை மிரட்ட உள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனும், 2018 தொடரின் தங்க காலணி வென்றவருமான ஹாரி கேன், தனது பேயர்ன் முனிச் கிளப் அதிரடியை இங்கும் தொடர உள்ளார்.
ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வீரரான எகிப்து அணியின் முகமது சாலா கிளப் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்தாலும், தேசிய அணிக்காக ஒரு பெரிய கோப்பையை வெல்லத் துடிக்கிறார். 33 வயதான இவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்.
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யாருக்கும் சாப்பாடு கிடைக்காது.. சோஃபி மைதான ஊழியர்கள் போராட்டம்
கானா அணியின் அதிரடி முன்கள வீரரான அன்டோயின் செமென்யோ, தனது முதல் உலகக் கோப்பையில் ஆப்பிரிக்காவின் புதிய நட்சத்திரமாக ஜொலிக்க உள்ளார்.