மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கோப்பை பெற்றுத் தந்தார் விராட் கோலி. அந்தப் போட்டியில் அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஜூன் 13 முதல் தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.

மே 31 அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார். இந்தப் போட்டியின் இறுதிப் பகுதியில் ரன் ஓடும்போது அவர் வலியால் அவதிப்பட்டது தெரிந்தது. இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய கோலி 675 ரன்கள் குவித்து இருந்தார்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ள கோலிக்கு, இந்த காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜூலை மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அண்மைக்காலமாக மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 4 அரைசதங்களுடன் 651 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக ரன் குவித்த வீரராகத் திகழ்ந்தார். அந்த ஃபார்மை 2026 தொடக்கத்திலும் தொடர்ந்த அவர், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 240 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிக்கு மாற்று வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் அணியில் இருந்தும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றொரு புறம் கெய்க்வாட் தற்போது இலங்கை செல்ல உள்ள இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே தொடை காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோஹித் சர்மா மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் உடற்தகுதி சோதிக்கப்பட்ட பிறகே அவர்கள் அணியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும். இதனால் ரோஹித் சர்மா இந்த தொடரில் முழுமையாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13 அன்று தர்மசாலாவிலும், 2-வது போட்டி ஜூன் 17 அன்று லக்னோவிலும், 3-வது போட்டி ஜூன் 20 அன்று சென்னையிலும் நடைபெற உள்ளது.