← முகப்பு செய்திகள்

IPL 2026: Gujarat Titans captain Shubman Gill trolls CSK fans after defeating

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
IPL 2026: Gujarat Titans captain Shubman Gill trolls CSK fans after defeating

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியை இரண்டாவது முறையாக வீழ்த்தியதை ‘நன்றி 2’ எனக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 229 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் கனவைத் தகர்த்த குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது ஆதிக்கத்தைச் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் முகமது சிராஜ் மற்றும் ஜோஸ் பட்லருடன் இணைந்து கில் அமர்ந்துள்ளார். அவர்கள் மூவரும் தங்களது விரலை உதட்டின் மேல் வைத்து, 'வாயை மூடுங்கள்' எனச் சொல்லும் வகையில் சைகை காட்டியுள்ளனர். சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத்தில் விசில் சத்தத்துடன் ஆர்ப்பரித்த சிஎஸ்கே ரசிகர்களை அமைதியாக்கிவிட்டோம் என்பதை உணர்த்தவே அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

அந்தப் புகைப்படத்திற்குச் சுப்மன் கில் அளித்துள்ள வாசகம் தான் இப்போது சிஎஸ்கே ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. "நன்றி 2. மஞ்சள் விளக்குகள், நீல நிறத்தில் முடிவு" (Nandri 2. Yellow lights, blue ending) என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராகத் தாங்கள் பெற்ற 2-வது வெற்றி இது என்பதால் 'நன்றி 2' என அவர் கிண்டலாகக் கூறியுள்ளார். மஞ்சள் நிறச் சீருடை அணிந்த சிஎஸ்கே அணியின் கதை, நீல நிறக் குஜராத் அணியால் முடிக்கப்பட்டுவிட்டது என்பதை அவர் 'நீல நிற முடிவு' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாகப் போட்டியின் போது, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிவம் துபேயின் கேட்ச்சை டைவிங் செய்து பிடித்த சுப்மன் கில், மிகுந்த ஆவேசத்துடன் சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். 17 பந்துகளில் 47 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளித்து வந்த துபேயை வெளியேற்றிய மகிழ்ச்சியில் கில் அவ்வாறு செய்தார்.

IND vs AFG: கோலி, ரோஹித்தை கழட்டி விடப் பார்த்த அகர்கர்.. ஆப்கானிஸ்தான் தொடரில் கடைசி நேர ‘பல்டி’

இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் அசத்திய சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாகச் சாய் சுதர்சன் 84 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இறுதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றி, குஜராத் டைட்டன்ஸ் அணியைப் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சிஎஸ்கே-வை வீழ்த்தியதோடு நில்லாமல், ரசிகர்களையும் வம்புக்கு இழுக்கும் கில்லின் இந்த அதிரடி பதிவு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net