டம்புள்ளா: ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், இந்திய 'ஏ' அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய 'ஏ' அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து தனது இடத்தை உறுதி செய்துள்ளது. டம்புல்லாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய 'ஏ' அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.
கேப்டன் திலக் வர்மா, பிரியான்ஷ் ஆர்யா மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோரின் சிறப்பான அரைசதங்கள் இந்த இமாலய இலக்கை எட்ட உதவின. தொடர்ந்து 320 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 36.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் மற்றும் +0.597 என்ற சிறந்த நிகர ரன் ரேட்டுடன் (NRR) முதலிடத்தைப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இலங்கை 'ஏ' அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் (+0.494 NRR), ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
IND vs AFG: ரோகித் சர்மா மீண்டும் சாதனை.. சிக்சர்களை பறக்கவிட்டு அபாரம்
முன்னதாக, டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணியின் முடிவை இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தவிடுபொடியாாக்கினர். வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இணை முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் வேகமான 75 ரன்களைச் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆர்யா தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து, 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 58 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் திலக் வர்மா மற்றும் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 59 ரன்களும், குஷாக்ரா 58 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 300-ஐக் கடக்க உதவினர். இறுதிக்கட்டத்தில் விப்ராஜ் நிகாம் விளாசிய அதிரடி ரன்கள் இந்திய அணியை 319 ரன்களுக்கு கொண்டு சேர்த்தது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஹசன் ஈசகில் (14) மற்றும் கேப்டன் இம்ரான் மிர் ஆகியோரை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் அவுட்டாக்கினர். ஃபைசல் ஷினோசாடா (46) மற்றும் பஹீர் ஷா (57) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து ஓரளவிற்கு எதிர்ப்பைக் காட்டினாலும், அவர்கள் இருவரது விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்ததால் ஆப்கானிஸ்தான் அணியின் சரிவு வேகமானது.
இந்திய அணி தரப்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நிஷாந்த் சிந்து சிறப்பாக பந்துவீசி 6.5 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர் யஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ், விப்ராஜ் நிகாம், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
IND vs AFG: சுப்மன் கில் 9வது சதம் விளாசி அபாரம்.. அதிவேக சதம் விளாசிய 4வது இந்திய கேப்டன் என பெருமை