வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடங்க உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் பங்கேற்க, ஈரான் நாட்டின் கால்பந்து வீரர்களுக்கு அமெரிக்கா இறுதியாக விசா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது.
இத்தொடரில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஈரானின் முதல் போட்டி தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ப்பதற்றத்தால் வீரர்களுக்கு விசா வழங்குவதில் பெரும் இழுபறி நீடித்தது. தற்போது ஒரு வழியாக வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசா கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அமெரிக்காவில் தங்களது வீரர்கள் அதிக நேரம் இருக்கக்கூடாது என்ற ஈரானின் எண்ணம் காரணமாக, வீரர்கள் தங்களின் பயிற்சி முகாமை அரிசோனாவின் டக்சன் நகரிலிருந்து மெக்சிகோ நாட்டின் டிஹுவானா நகரத்திற்கு மாற்றியுள்ளனர். டிஹுவானா நகரம் கலிபோர்னியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்தபடி அமெரிக்காவுக்குள் நுழைய வசதியாக இருக்கும் என்று ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு வந்தடைவார்கள் என்று மெக்சிகோவிற்கான ஈரான் தூதர் அபுல்பாஸ்ல் பசாந்திதே தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுக்கு பிறகு, தங்களுக்கு எதிராகப் போரிடும் ஒரு நாட்டின் அணியை உலகக் கோப்பை நடத்தும் நாடான அமெரிக்கா வரவேற்பது இதுவே முதல்முறையாகும். இதனால் விளையாட்டு உலகிற்கு அப்பாற்பட்டு இந்த உலகக் கோப்பை ஒரு அரசியல் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. ஈரானிய வீரர்கள் அமெரிக்க மண்ணில் தங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தூதர் பசாந்திதே கூறியிருந்தாலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் அறிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
IND vs AFG: 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி எடுத்த முடிவு.. அஸ்வின், ஜடேஜாவில் ஒருவர் கூட இல்லை!
ஈரானிய ராணுவத்தின் சக்திவாய்ந்த பிரிவான புரட்சிகர காவல் படைகளுடன் தொடர்புடைய நபர்கள் யாரையும் உலகக் கோப்பை குழுவில் அனுமதிக்க மாட்டோம் என்று மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கட்டாய ராணுவப் பயிற்சியின் கீழ் இந்த குறிப்பிட்ட படைப்பிரிவில் பணியாற்றிய சில வீரர்களும் தற்போதைய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி இன்னும் முழுமையாக விலகவில்லை. இந்த விசா சர்ச்சை தற்போதைய உலகக் கோப்பை தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.