கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜேம்ஸ் கலாகர்
  • பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டப் பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனெகா இந்தத் தடுப்பூசியைப் பற்றி ‘மிகவும் பெருமையாக உணர்வதாகக்’ கூறியது. ஆனால் அந்த நிறுவனம் இந்த வணிக முடிவை எடுத்துள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் அதிகரித்து வருவதால் புதிய, மேம்பட்ட தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றின்போது அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசி பல லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் அது ஆபத்தான இரத்தம் உறைதலையும் ஏற்படுத்தியது. இதனால் சில மரணங்களும் நிகழ்ந்தன.

கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது

மிகத் துரிதமாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி

கோவிட் தொற்றுநோய் பொதுமுடக்கத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் பணியில், கோவிட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகத் துரிதமாக உருவாக்கினர். பொதுவாக 10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது.

இது மற்ற கோவிட் தடுப்பூசிகளை விட மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்பதால் இது ‘உலகத்திற்கான தடுப்பூசி’ என்று கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அறிவிக்கப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அதை வெகுஜனப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

இங்கிலாந்து பொது முடக்கத்தில் இருந்து வெளிவரும் திட்டத்திற்கு இந்தத் தடுப்பூசியே அடித்தளமாக இருந்தது.

“உண்மையில் இது ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஃபைசரின் மற்றொரு தடுப்பூசியுடன் சேர்ந்து அந்தப் பேரழிவிலிருந்து நம்மை மீட்டெடுத்தது,” என்கிறார் இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் ஃபின்.

கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம், PRESS ASSOCIATION

படக்குறிப்பு, ‘சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன’

ரத்தம் உறைதலும் மரணங்களும்

இருப்பினும், தடுப்பூசியின் அரிதான பக்க விளைவாக அசாதாரண இரத்தக் கட்டிகள் தோன்றியதால் அதன் நற்பெயர் சிதைந்தது. இதனால், இங்கிலாந்து மாற்று வழிகளுக்கு திரும்பியது.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது ஒரு அறிக்கையில், “சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன,” என்று கூறியது.

மேலும் அந்த அறிக்கையில் “எங்கள் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய அங்கமாக பரவலாகக் கருதப்படுகிறது,” என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ‘கொரோனா வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி மிகத்தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது

புதிய வைரஸ் பிறழ்வுகள், புதிய தடுப்பூசிகள்

இப்போது பரவலாக இருக்கும் கொரோனா நுண்கிருமியின் பிறழ்ந்த வடிவங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதாக அவ்வறிக்கை தெரிவித்தது. இதனால், ‘நமக்கு அதிகளவிலான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன’ என அந்த அறிக்கை கூறுகிறது. இது அதன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான (கோவிஷீல்டு தடுப்பூசி) ‘தேவை குறைவதற்கு’ வழிவகுத்தது. இது ‘இந்த தடுப்பூசி இனி உற்பத்தியோ அல்லது சப்ளையோ செய்யப்பட மாட்டாது’ என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

இதுகுறித்து பேசிய பேராசிரியர் ஃபின், “இந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்படுவது, அது இனி பயனற்றது என்பதையே சொல்வதாக நான் நினைக்கிறேன்,” என்றார்.

“கோவிட் வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி வெகு தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது. எனவே அந்தத் தடுப்பூசிகள் ஒரு வகையில் பொருத்தமற்றதாகிவிட்டன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே இப்போது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது,” என்கிறார் அவர்.