நீங்கள் இறக்கும் கடைசி நொடியில் உங்கள் கண்களுக்கு என்ன தெரியும்?

மரணம் நெருங்கும் வேளையில், மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன

பட மூலாதாரம், Christopher Kerr

படக்குறிப்பு, கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும்.
  • எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா
  • பதவி, பிபிசி நியூஸ், பிரேசில்.

1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார்.

கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி விசித்திரமாக செயல்படத் தொடங்கினார்.

70 வயதான மேரி திடீரென படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவர் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய குழந்தையைத் தொட்டிலில் வைப்பது போல் கைகளை அசைக்கத் தொடங்கினார். அவர் அந்த குழந்தையை ‘டேனி’ என்று அழைத்தவாறே அணைத்து, முத்தமிடுவது போன்று செய்கை செய்தார்.

டேனி என்று யாரையும் மேரியின் பிள்ளைகளுக்கு தெரியாததால், அவர்களால் மேரியின் இந்த செயலை புரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்த நாள், மருத்துவமனைக்கு வந்த மேரியின் சகோதரி, நான்கு பிள்ளைகளுக்கு முன்பாக, மேரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகவும், அக்குழந்தைக்கு ‘டேனி’ என பெயரை மேரி சூட்டியதாகவும் கூறினார்.

அந்த இழப்பின் வலி மிகவும் அதிகமாக இருந்ததால், மேரி தனது இறந்த குழந்தையைப் பற்றி மீண்டும் ஒருபோதும் யாரிடமும் பேசவில்லை.

முதலில் ஒரு பொது மருத்துவராக மட்டுமே பயிற்சி பெற்ற கெர், பின்னர் இருதயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். அதன் பிறகு நியூரோபயாலஜியில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் மேரியின் நிகழ்வை மிகவும் அசாதாரணமான ஒன்றாகக் கருதிய அவர், தனது பணியின் போக்கை மாற்றி, இறக்கும் மக்களின் அனுபவங்களைப் படிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

மரணம் நெருங்கும் வேளையில், மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன

பட மூலாதாரம், Plan Shoot / Imazins / Getty Images

படக்குறிப்பு, நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் கெர்.

மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களின் அனுபவங்கள்

அவர் மேரியைச் சந்தித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. மரணம் அடையும் மக்கள் இறுதிக் கட்டத்தில் காணும் காட்சிகள் மற்றும் கனவுகளைப் பற்றிய ஆய்வில், உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கிறிஸ்டோபர் கெர்.

இந்த அனுபவங்கள் பொதுவாக மரணத்திற்கு சில வாரங்கள் முன்பாகத் தொடங்கி, மரணம் நெருங்கும்போது இதன் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார் கெர்.

அப்போது மக்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நினைவுகூர்வதையும், பல வருடங்களுக்கு முன்னர் இறந்த தங்கள் தாய், தந்தை, பிள்ளைகள் மட்டுமல்லாது இறந்த செல்லப்பிராணிகளுடன் கூட பேசுவதைத் தான் கண்டதாக கூறுகிறார் கெர்.

நோயாளிகளுக்கு இந்த காட்சிகள் உண்மையானதாகவும், தீவிரமானதாகவும், ஒரு வகையான அமைதி உணர்வைத் தருவதாகவும் தெரிகிறது.

“காட்சிகளில் வரும் உறவுகள் பெரும்பாலும் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் நோயாளிகளுக்கு தோன்றுகின்றனர். அது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. அதையொட்டி, அவர்களின் மரணம் குறித்த பயத்தை குறைக்கிறது”, என்று மருத்துவர் கெர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

இந்த நோயாளிகள் குழப்பத்தில் அல்லது மனப்பிறழ்வில் இதைச் செய்யவில்லை. அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைந்தாலும் கூட, உணர்ச்சி ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கெர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், பல மருத்துவர்கள் இந்த நிகழ்வை மாயத்தோற்றம் (Hallucination) அல்லது மனக் குழப்பத்தின் விளைவாக ஏற்படுகிறது எனக் கூறி இதை நிராகரிக்கிறார்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலும் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இதன் விளைவாக, 2010-இல் அமெரிக்காவில் ஒரு முன்னோடி ஆய்வைத் தொடங்கினார் கெர். கருத்துக்கணிப்புகள் மூலம், மரணத்தை நெருங்கும் நோயாளிகளிடம் அவர்களுக்கு என்ன தெரிகிறது என கேட்டு, ஆய்வு செய்யத் தொடங்கினார்.

கிறிஸ்டோபர் கெர்

பட மூலாதாரம், Christopher Kerr

படக்குறிப்பு, மரணத்திற்கு அருகில் உள்ளவர்களின் அனுபவங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார் கிறிஸ்டோபர் கெர்.

இந்த ஆய்வுகளில் நோயாளிகளை ஈடுபடுத்துவதற்கு முன், மனக் குழப்பத்தில் இல்லை என்பதை உறுதிசெய்ய, அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

இந்த ஆய்வுக்கு முன், இந்த அனுபவங்களைப் பற்றிய பெரும்பாலான அறிக்கைகள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து தான் வந்தன. நோயாளி எதைப் பார்க்கிறார் என்று அவர்கள் நினைத்தார்களோ அதுவே ஆவணப்படுத்தப்பட்டது.

ஸ்வீடிஷ் தேசிய மருத்துவ நூலகம் உட்பட பல அறிவியல் ஆய்விதழ்களில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நோயாளிகளின் இந்த அனுபவங்களை விளக்குவதற்கு ஒரு உறுதியான பதிலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அதே சமயத்தில் இத்தகைய அனுபவங்களின் காரணத்தைப் புரிந்துகொள்வது தனது ஆய்வுகளின் முக்கிய நோக்கம் இல்லை என்றும் கெர் கூறுகிறார்.

“ஆதாரத்தையும் செயல்முறையையும் என்னால் விளக்க முடியவில்லை என்பதால் அது நோயாளியின் அனுபவத்தை போலியானதாக மாற்றி விடாது,” என்று அவர் கூறுகிறார்.

கெர் இப்போது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின், பஃபலோ நகரில் மரணவலி தணிப்புச் சிகிச்சையை (Palliative care) வழங்கும் ஒரு அமைப்பின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.

அவரது புத்தகமான, ‘Death Is But a Dream: Finding Hope and Meaning at Life’s End’, 2020இல் வெளியிடப்பட்டு 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இறுதி அனுபவங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த இறுதி அனுபவங்கள் இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன என்கிறார் கெர்.

இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன?

பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தனது ஆய்வுகள் மற்றும் வாழ்க்கையின் இறுதி அனுபவங்களின் அர்த்தம் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் மருத்துவர் கிறிஸ்டோபர் கெர்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன?

“மரணம் என்பதில் நாம் காணும் உடல் ரீதியான வீழ்ச்சியை விட, அதில் இன்னும் அதிகமான விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். மரணம் நெருங்கும் சமயம் என்பது, உங்கள் கருத்துகள் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றம், வாழ்க்கையை உறுதிப்படுத்தும் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.”

“மரணம் உங்களை வாழ்க்கையின் கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான விஷயங்கள் குறித்தும், மிகப்பெரிய சாதனைகளாக கருதும் வாழ்வின் உறவுகள் குறித்தும் கவனம் செலுத்த மக்கள் முனைகிறார்கள்.”

“அவர்களின் இந்த நினைவுகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு சுவாரஸ்யமான, மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் அவர்கள் முன் தோன்றுகின்றன. அவை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன, இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன.”

“ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர்கள் உளவியல் ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அன்பு மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றிய உணர்வுகளால் மக்கள் ஆட்கொள்ளப்படுவதை நாங்கள் காண்கிறோம்.”

உங்கள் ஆராய்ச்சியின்படி, இந்த வாழ்க்கையின் இறுதி அனுபவங்கள் எவ்வளவு பொதுவானவை?

“எங்கள் ஆய்வுகளில் பங்கேற்ற சுமார் 88% மக்கள், இந்த அனுபவங்களில் ஒன்றாவது தங்களுக்கு ஏற்பட்டதாக கூறினர். இது வழக்கமான விகிதத்தை விட அதிகமாக இருந்தது, அனேகமாக 20% அதிகம். காரணம் நாங்கள் தினந்தோறும் ஆய்வுகளில் ஈடுபட்டோம், மக்களிடம் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.”

“மரணம் என்பது உடனடியாக நிகழ்வது அல்ல, அது ஒரு செயல்முறை. எனவே, ஒரு திங்கட்கிழமை அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும், ​​​​வெள்ளிக்கிழமை அதைவிட வித்தியாசமான ஒரு பதிலை நீங்கள் பெறலாம். நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இந்த நிகழ்வுகளின் தாக்கம் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம்.”

இறுதி அனுபவங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதி அனுபவங்கள் நோயாளிகளுக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் என்கிறார் கெர்.

‘காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது’

இந்த அனுபவங்களின் முக்கிய கருப்பொருள்கள் என்ன?

“நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற காட்சிகள் தோன்றுவதாகக் கூறுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நேசித்த மற்றும் இழந்த நபர்களை நினைவுகூர்கிறார்கள்.”

“மரணத்தை நெருங்கும்போது இந்தக் காட்சிகள் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆறுதலான அனுபவமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரைப் பற்றி கனவு கண்டார்கள் என்பதும் சுவாரஸ்யமானது.

அவர்கள் தங்களை நேசித்தவர்கள், ஆதரித்தவர்கள் மற்றும் மிகவும் முக்கியமானவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அது தாய், தந்தையில் ஒருவராக அல்லது உடன்பிறப்புகளில் ஒருவராக இருக்கலாம், மற்றவர் குறித்து அவர்கள் நினைப்பதில்லை.”

“இந்த கருத்துக்கணிப்புகளில், சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர். அதாவது, உங்களுக்கு வாழ்வில் எந்த காயங்கள் இருந்தாலும், இந்த அனுபவங்கள் மூலம் அவை வெளிப்படும்.

போரில் ஈடுபட்டு, தப்பிப்பிழைத்த ஒருவருக்கு குற்ற உணர்வு இருக்கலாம், ஆனால் வாழ்வின் இறுதியில் போரில் மரணித்த தோழர்களைப் இந்தக் கனவுகளில் பார்க்கும்போது அவர் ஆறுதல் அடைவார்.”

இதை மாயத்தோற்றம் என்று நினைப்பது தவறு என நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அனுபவங்களை வேறுபடுத்துவது எது?

“சித்தப்பிரமை அல்லது குழப்பமான மனநிலைகள் மிகவும் பொதுவானவை, குறிப்பாக வாழ்க்கையின் முடிவில் ஏற்படக்கூடும். ஆனால் இந்த அனுபவங்கள் அதிலிருந்து மிகவும் வேறுபட்டவை.

மக்கள் சித்தபிரமை நிலையிலிருந்து எளிதாக வெளியே வருவதில்லை. அந்த நிலை அவர்களின் பயத்தைத் தூண்டும் அல்லது நோயாளிகளை அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், படுக்கையில் கட்டிப்போட வேண்டிய நிலையில் அல்லது மூர்க்கமானவர்களாக மாற்றிவிடும்.”

“ஆனால் மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளின் அனுபவங்கள் உண்மையான மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளினால் தூண்டப்பட்டவை. அவர்கள் அதை தெளிவுடன் நினைவுகூர்வார்கள். மேலும் அந்த அனுபவங்கள் மிகுந்த ஆறுதலைத் தரும்.”

மரணம் நெருங்கும் வேளையில், மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயாளிகளில் சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர்.

குழந்தைகளின் இறுதி அனுபவங்கள்

சில நேரங்களில் நோயாளிகள் கனவு காண்கிறார்கள், ஆனால் மற்ற நேரங்களில் அவர்கள் விழித்திருக்கிறார்கள். இந்த இரண்டு வகையான அனுபவங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளதா?

“ஆய்வின்போது, நோயாளிகளிடம் தூங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரம் குறித்துக் கேட்டோம், அது உண்மையில் 50-50 என்ற ரீதியில் இருந்தது.”

“மரணத்தை நெருங்குவது என்பதில் ஒரு தீவிரமான உறக்க செயல்முறையும் அடங்கும். பகல், இரவு என்ற கால சுழற்சி உடைந்து விடும், நேரம் கணக்கில்கொள்ளப்படாது. எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத போது, யதார்த்த நிலை குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.”

நீங்கள் உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஆய்வு செய்கிறீர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இறுதி அனுபவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?

“குழந்தைகள் இதை இன்னும் சிறப்பாகச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர்கள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் கோடுகளை வரைவதில்லை. அவர்களுக்கு மரணம் குறித்த கருத்துகளும் இல்லை. எனவே, அவர்கள் அந்த தருணத்தில் உண்மையாக வாழ்கிறார்கள்.”

“அவர்களுக்கு இந்த அனுபவங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் வண்ணமயமான வழிகளில் ஏற்படுவதைக் காண முடியும். இதன் அர்த்தத்தையும் அவர்கள் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொள்வார்கள்.”

“இறந்து போன யாரையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றால், நிச்சயமாக இறந்துபோன ஏதேனும் விலங்குகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். அது குறித்த அனுபவங்கள் ஏற்படும்”

மரணம் நெருங்கும் வேளையில், மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இறந்தவர்கள் குறித்த காட்சிகள் அதிகம் தோன்றும் என்று கெர் கூறுகிறார்

குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீதான தாக்கம்

இந்த அனுபவங்கள் நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

“750 நோயாளிகளின் நேர்காணல்களுடன் இரண்டு ஆவணங்களை வெளியிட்டோம். இதன் முடிவுகள் என்னவென்றால், நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது.”

“துக்கத்தின் செயல்முறைகளைப் பற்றி நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஆய்வை மேற்கொண்டோம். இந்த வகையான விஷயங்களைக் கண்டவர்கள் மிகவும் நேர்மறையான வழிகளில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இழந்த நபரின் நினைவையும் அவர்கள் குறித்த உணர்வையும் இது மாற்றி வடிவமைக்கிறது.”

இந்த விஷயத்தைப் பற்றிய பெரும்பாலான விவாதங்கள் மனிதநேயம் சார்ந்த துறைகளில் இருந்து தான் வந்துள்ளன, மருத்துவத் துறைகளில் இருந்து அல்ல என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த ஆய்வுக்கு மருத்துவம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை? கடந்த சில ஆண்டுகளில் அது மாறியுள்ளதா?

“இல்லை, அது மோசமாகி வருகிறது என்று நினைக்கிறேன். மனிதநேயம் நமது இருப்பையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். மனிதநேயத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது.”

மரணம் நெருங்கும் வேளையில், மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன

பட மூலாதாரம், Getty Images

‘மரணம் குறித்த அனுபவங்களில் ஆர்வம் காட்டும் மக்கள்’

மற்ற மருத்துவர்கள் ஆதாரங்களைக் கேட்டதால் தான் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கியதாகச் சொன்னீர்கள். ஆனால் உங்கள் பணி மருத்துவத் துறையை விட மீடியாக்களிடம் இருந்து அதிக கவனத்தைப் பெற்றது. இந்த மாறுபாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

“நோயாளிகளின் இறுதி அனுபவங்களை, இளம் மருத்துவர்களுக்கு புரிய வைத்து, அவர்கள் பாராட்டைப் பெறுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே ஆதாரங்களை உருவாக்கி, அவற்றை அவர்களுக்கு புரியக்கூடிய வகையில் முன்வைத்தோம்.”

“ஆனால் தவறான பிரிவினரை திருப்திபடுத்த முயற்சி செய்கிறேன் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், இந்த ஆய்வு குறித்து முக்கிய ஊடகங்களில் வெளியான போது, அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.”

“எனவே, மருத்துவச் சேவையை வழங்குபவர்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை, ஆனால் அந்தச் சேவையைப் பெறுபவர்கள் அல்லது பராமரிப்பில் இருப்பவர்கள் அல்லது மரணம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், இந்த ஆய்வைப் பாராட்டுகிறார்கள். இந்த முரண்பாடு சுவாரஸ்யமாக உள்ளது”