இந்தியாவுக்கு வந்த மாலத்தீவு வெளியுறவு அமைச்சர், மோதி தொடர்பான சர்சைக்குள்ளான கருத்து பற்றிக் கூறியது என்ன?

இந்தியா வந்த மாலத்தீவு அமைச்சர்

பட மூலாதாரம், Moosa Zameer

  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி நியூஸ்

இந்தியா -மாலத்தீவு அரசுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், டெல்லிக்கு வருகை தந்தார்.

மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் இந்தியா வந்தது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உறவுகளில் புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

மூசா ஜமீரின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, மாலத்தீவு சுற்றுலா துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல், மாலத்தீவுக்கு வருமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

”இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுக்கு நீண்ட வரலாறு உண்டு. இப்போது போலவே, கடந்த காலங்களிலும் இந்தியா மாலத்தீவுக்கு உதவியுள்ளது, மீண்டும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட விரும்புகின்றன.” என்று இப்ராஹிம் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது சில மாலத்தீவு அமைச்சர்கள் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து, இந்திய சுற்றுலாப் பயணிகள் பலர் ‘மாலத்தீவு புறக்கணிப்பு’ பிரசாரத்தை தொடங்கினர். அதன் பிறகு மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது

ஜனவரி 2023 இல் மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின்படி, ரஷ்யர்கள் அதிகளவு வந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் இந்தியர்கள் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் மோதி வருகையையொட்டி நடந்த சர்ச்சை சம்பவங்களுக்கு பிறகு, ஜனவரி 2024 இல் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சதவீதம் ஐந்தாவது இடத்திற்கு சரிந்தது.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி (கோப்புப் படம்)

மாலத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்கு 30 சதவீதம். மேலும், அதன் அந்நிய செலாவணியில் 60 சதவீதம் சுற்றுலாத் துறையில் இருந்து வருகிறது. எனவே, இந்திய சுற்றுலாப் பயணிகளை மாலத்தீவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தது அதன் பொருளாதார வீழ்ச்சியை நிர்வகிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருப்பது, இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

மோதி பற்றிய கருத்து குறித்து மாலத்தீவு அமைச்சர் கூறியது என்ன?

இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். மோதி தொடர்பாக மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்து பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அது மீண்டும் நடக்காது என்று அவர் உறுதியளித்தார்.

“இது அரசின் நிலைப்பாடு அல்ல என்று நாங்கள் கூறுகிறோம். அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். இது மீண்டும் நடக்காமல் இருக்க நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமூக ஊடகங்களில் ஒரு தவறான புரிதல் இருந்தது. என்ன நடந்தது என்பதை மாலத்தீவு மற்றும் இந்திய அரசாங்கங்கள் புரிந்து கொண்டன. நாங்கள் இப்போது அந்த நிலையை கடந்துவிட்டோம்,” என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, அரவிந்த் யெல்லேரி – இணைப் பேராசிரியர், சீன ஆய்வு மையம்-ஜேஎன்யு

உறவுகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கையா அல்லது நீண்ட கால உத்தியா?

ஏற்கெனவே, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாலத்தீவில் சில அதிகாரிகள் வெளிப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட விளைவுகளை சரி செய்ய, மாலத்தீவு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறதா அல்லது இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான அதன் நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியா?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி கூறுகையில், “மாலத்தீவு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை கவனிப்பதற்கு பதிலாக, இந்தியா மீதான அதன் அணுகுமுறையைப் பார்க்க வேண்டும்,” என்றார்.

மேலும் பேசுகையில், “மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சார்ந்த கட்சியின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிரானது. கடந்த ஆண்டு அங்கு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மாலத்தீவு சீனாவுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்திக் கொண்டதுடன், இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் தாங்கள் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாக பலமுறை கூறியது. ”

“இந்தியப் பெருங்கடல் அல்லது இந்தோ-பசிபிக் பகுதியில் மாலத்தீவுகள் தங்களை முக்கியமான நாடாக முன்னிறுத்த விரும்பினால், சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதன் அணுகுமுறையால் இந்தியாவுடன் மோதல் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. இது மாலத்தீவுக்கு நல்லதல்ல. அடுத்த ஓரிரு ஆண்டுகளிலும் அந்நாடு இந்தியாவிடம் மென்மையான அணுகுமுறையை கடை பிடிக்கப் போவதில்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து புதிய யுக்திகளை கையாளும்,” என்று அரவிந்த் யெலேரி கூறினார்.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், @MDVINUAE

படக்குறிப்பு, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் (கோப்பு படம்)

மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிக்கையையும் வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகையையும் எப்படிப் பார்ப்பது?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ”இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், வெளியுறவுக் கொள்கைகளில் திறம்பட பண்ணுறவாண்மை (Diplomacy) கையாளப்பட வேண்டும்.

மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் மாலத்தீவிலிருந்து அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, எனவே, இந்தியா-மாலத்தீவு உறவுகளை இயல்பாக்குவதில் எந்தவொரு பெரிய மாற்றமும் நிகழாது,” என்று அரவிந்த் யெலேரி கூறுகிறார்.

இதற்கிடையில், இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு முக்கியமான அண்டை நாடு என்றும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜமீரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மாலத்தீவுக்கு முட்டை, உருளைக்கிழங்கு, வெங்காயம், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள், ஆற்று மணல் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, பிரேமானந்த் மிஸ்ரா

இந்தியாவின் நிலைப்பாடு ஏன் கடுமையாக இல்லை?

எல்லாவற்றிற்கும் மேலாக, மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் இந்த மென்மையான நிலைப்பாடு எதை பிரதிபலிக்கிறது?

இந்த கேள்விக்கு, ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் ஆசிரியர் பிரேமானந்த் மிஸ்ரா பதிலளிக்கும் விதமாக பேசுகையில், “மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம், இந்திய சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு வருமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. சமீப காலங்களில் மாலத்தீவு கடைபிடித்த இந்திய விரோத போக்கிற்கு பிறகு இந்தியாவில் இருந்து கடுமையான எதிர்வினை வரும் என்ற அங்கு அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் சமூக ஊடகங்களில் மட்டுமே மாலத்தீவுக்கு எதிரான போக்கு காணப்பட்டது. அரசாங்க அளவில் அது பிரதிபலிக்கவில்லை, ” என்றார்.

“இந்தியா அவசரகதியில், ஒரு பொறுப்பற்ற அரசாக எந்தவொரு நடவடிக்கையையும் அதன் தரப்பில் இருந்து எடுக்கவில்லை. மாலத்தீவின் சர்ச்சை கருத்துக்கு, இந்தியா மிகவும் மிதமான எதிர்வினை மட்டும் கொடுத்தது. இது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட கசப்பைக் குறைக்கவும் உதவியது,” என்றும் பிரேமானந்த் மிஸ்ரா கூறினார்.

மேலும் விவரிக்கையில், “மாலத்தீவு அதிபர் முய்சுவின் சீனா சார்பு அணுகுமுறைக்கு இந்தியா அதிக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இரண்டாவதாக, நாடாளுமன்றத் தேர்தலில் முய்சு வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு அரசியல் நிலைத்தன்மை மீது அக்கறை வந்தது.

அதனால் இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிகிறது. இந்தியாவில் மீண்டும் மோதி அரசு வந்தால் முய்சு, இந்தியாவுக்கு வருகை தரும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்பும் அவர் இந்தியா வர முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவே அவரை அனுமதிக்கவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், PRESIDENCYMV/X

படக்குறிப்பு, சீன அதிகாரிகளுடன் முய்சு (கோப்பு படம்)

இந்தியாவுடனான மாலத்தீவின் உறவு மோசமடைந்தது ஏன்?

தற்போது மாலத்தீவு அதிபராக இருக்கும் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் என்னும் கட்சி, ’இந்தியா வெளியேறு’ என்னும் முழக்கத்தை முன்னெடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழ இதுதான் ஆரம்ப புள்ளி.

முய்சு சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். முன்னாள் ஜனாதிபதி முகமது சோலிஹ் மற்றும் அவரது கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.ஏ.பி) இந்திய சார்பு கொள்கைகளை முய்சு கடுமையாக எதிர்த்து வருகிறார்.

‘இந்தியா வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற முய்சு, ஜனாதிபதியாக பதவியேற்ற உடன் முதலில் துருக்கிக்கும் பின்னர் சீனாவுக்கும் பயணம் செய்தார். ஆனால், மரபுப்படி மாலத்தீவின் எந்த அதிபரும் பதவியேற்ற பின் முதலில் இந்தியாவுக்கு வருவது வழக்கம்.

2023 நவம்பரில் அவர் மாலத்தீவு அதிபராக பதவியேற்றவுடன், மூன்று விமானங்களை பாதுகாக்க அங்கு இருந்த 88 இந்திய வீரர்களை இந்தியாவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், ஜனவரி 2024 இல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி லட்சத்தீவுகளின் அழகை வர்ணித்து, தன் எக்ஸ் தளத்தில், சில வீடியோக்களை வெளியிட்ட போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து, மாலத்தீவு அரசின் மூன்று இளநிலை அமைச்சர்கள், ‘இழிவான கருத்துக்களை’ வெளியிட்டனர். இந்த கருத்துக்களுக்கு பிறகு, இந்தியர்கள் சமூக ஊடகங்களில் மாலத்தீவைப் புறக்கணிக்கும் பிரசாரத்தைத் தொடங்கினர். இதையடுத்து மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்தப் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் : இரு நாட்டு  உறவுகளில் திருப்புமுனை ஏற்படுமா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மாலத்தீவுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் இந்தியா

இந்த ஆண்டு பிப்ரவரியில், சீன ஆராய்ச்சிக் கப்பலான ஜியாங் யாங் (Xiang Yang Honh 3) மாலத்தீவு தலைநகரான மாலேயில் நிறுத்துவதற்கு முய்சு அரசு அனுமதி வழங்கியது. மாலத்தீவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உடன்படவில்லை. `இது ராணுவ கப்பல் அல்ல’ என்று மாலத்தீவு கூறியது.

இருப்பினும், இந்திய வல்லுநர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கப்பல் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு பின்னர் சீன இராணுவத்தால் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் நம்பினர்.

முய்சு அரசு, இந்தியாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது. ஆனால் இந்தியா வரலாற்று ரீதியாக மாலத்தீவுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இன்றளவும் செய்து வருகிறது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.

மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானம் தொடர்பான பொருட்களுக்கு மாலத்தீவு இந்தியாவையே சார்ந்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு, மாலத்தீவுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து வந்தவை. ஏப்ரல் 10ஆம் தேதி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை குறிப்பிட்டு ஈகை திரு நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி, சிறப்பு செய்தி ஒன்றையும் பதிவிட்டார்.

“நாம் பாரம்பரிய உற்சாகத்துடன் ஈகைத் திருநாளை கொண்டாடும் போது, ​​​​உலகம் முழுவதும் உள்ள மக்கள் அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு அவசியமான இரக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளைக் நினைவில் கொள்கிறார்கள். அதை தான் நாங்கள் விரும்புகிறோம்,” என்று பிரதமர் மோதி பதிவிட்டிருந்தார்.