இஸ்ரேலின் இந்த படைப் பிரிவு அமெரிக்கா கோபம் ஏன்? தடை விதிக்கும் அளவுக்கு என்ன செய்தது?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அல்ஹரேத் அல்ஹாப்ஷ்னேஹ்
  • பதவி, பிபிசி அரபு சேவை

இஸ்ரேலிய ராணுவத்தில் உள்ள யூத பழமைவாத படைப் பிரிவான நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப்பிரிவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏக்சியோஸ் (Axios) செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு அமலுக்கு வந்தால், ஓர் இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்க அரசு தடை விதிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இதுகுறித்து பதிலளித்த இஸ்ரேல் ராணுவம், நெட்ஸா யெஹூதா படை மீது ‘அமெரிக்கத் தடைகள் பற்றி எதுவும் தெரியாது’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) கூறியது. மேலும், அந்தப் படை ‘சர்வதேசச் சட்டத்தின் கொள்கைகளின்படி செயல்படும் ஒரு போர்ப் பிரிவு’ என்றும் கூறியது.

“இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது மறுபரிசீலனை செய்யப்படும்,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், “எந்தவொரு அசாதாரணமான சம்பவம் நடந்திருந்தாலும் அதை நடைமுறை அளவிலும், சட்டத்தின் படியும் விசாரிக்கத் தொடர்ந்து பணியாற்றும்,” என்றும் கூறியது.

நெட்ஸா யெஹுதா மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தப் பிரிவுக்கு அமெரிக்க ராணுவ உதவி அல்லது பயிற்சிகள் கிடைக்காது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலத்தீனயர்களுக்கு எதிராக இந்தப் படைப்பிரிவு நடத்திய தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் முடிவுகளை அமெரிக்கா இஸ்ரேலிடம் பலமுறை கோரியதாக, இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய பொது ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலில் பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள்

இஸ்ரேலின் காட்டமான எதிர்வினை

அமெரிக்கத் தடைகள் குறித்த இந்தச் செய்தியறிக்கைகளுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோபமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் அரசின் போர்க்குழு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இந்த இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்கா தடைகளை விதிப்பது ஒரு ‘ஆபத்தான முன்னுதாரணம்’ என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

நெட்ஸா யெஹூதா படையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, நடந்துவரும் போரின் போது ‘இஸ்ரேலின் சட்டபூர்வமான நிலைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று காண்ட்ஸ் கூறினார்.

“ராணுவப் படைப் பிரிவுகள் சர்வதேச சட்டத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டவை என்பதால் அவற்றின் மேல் தடைகளை விதிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா பரிசீலித்துவரும் தடைகளுக்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், இஸ்ரேல் மூலம் பாலத்தீன அதிகார அமைப்புக்கு வழங்கப்பட்ட அனைத்து நிதியையும் பறிமுதல் செய்ய அழைப்பு விடுத்தார்.

பாலத்தீன வங்கிகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அவர் இஸ்ரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்

எதிர்ப்புக் குரல்கள்

நெட்ஸா யெஹூதா படைப்பிரிவுக்கு எதிரான எந்தவொரு தடையும் “பாலத்தீன அதிகாரத்தில் இருக்கும் இஸ்ரேலின் எதிரிகளை ஆதரிப்பதாக” இருக்கும் என்று பென்-க்விர் கூறினார்.

இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சர் காடி ஐசென்கோட், நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது ‘அடிப்படையில் தவறானது’ என்று கூறினார்.

இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது மற்றும் பாலத்தீன அரசை உருவாக்கும் முடிவை இஸ்ரேல் மீது திணிக்கும் முயற்சி’ என்று விவரித்தார்.

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யேர் லாபிட், “இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்டவிரோத கொள்கை மற்றும் அரசியல் தோல்வியால் முதலில் பாதிக்கப்படுவது இஸ்ரேலிய ராணுவமும் அதன் தலைவர்களும்தான்,” என்றார். ஆனாலும் அவர் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீதான பொருளாதாரத் தடைகள் ‘தவறானவை, தடுக்கப்படவேண்டியவை’ என்றார்

ஆனால் இவை அனைத்திற்கும் எதிரான கருத்தைத் தெரிவித்த இஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவரான மெராவ் மைகெலி, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவை கலைக்க அழைப்பு விடுத்தார். இப்படையின் ‘மூர்க்கத்தனமான, ஊழல் மலிந்த’ செயல்பாடுகள் ‘பல வருடங்களாக அனைவருக்குக் தெரிந்ததே’ என்றார்.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், Nahal Haredi

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது

‘நெட்ஸா யெஹூதா’ படைப்பிரிவில் இருப்பது யார்?

இஸ்ரேலில் ராணுவ சேவை கட்டாயமாகும். ஆண்கள் சுமார் மூன்று ஆண்டுகளும், பெண்கள் இரண்டு ஆண்டுகளும் கட்டாய ராணுவச் சேவை செய்யவேண்டும்.

ஆனால், யூத மத நம்பிக்கையில் வேரூன்றிய பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள்.

ஏனெனில், அவர்கள் தோரா (ஹீப்ரு யூத பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள்) மற்றும் மத புத்தகங்களின் விளக்கங்களை கற்றுக்கொள்வதில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், என்று தலைமை ராபி (யூத மதகுரு) யிட்சாக் யோசெப் கூறுகிறார்.

இருப்பினும், அனைத்து இளம் ஹரேடி யூதர்களும் மதக் கல்லூரியில் சேருவதில்லை. சிலர் தங்கள் மதக்கல்வி பாதிக்காததை உறுதி செய்துகொண்டு, சிறப்பு நிபந்தனைகளோடு ராணுவத்தில் சேர்கிறார்கள்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, ‘நஹால் ஹரேடி’ என்ற லாப நோக்கற்ற அமைப்பு செயல்படத் துவங்கியது. இதில் ஹரேடி யூத மதகுருக்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலிய ராணுவத்துடன் இணைந்து மதப்பள்ளிகளில் படிக்காத இளம் ஹரேடிகளுக்கு அவ்வமைப்பில் இடமளித்தனர்.

இந்த ஒத்துழைப்பின் விளைவாக ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.

நஹால் ஹரேடி அமைப்பு, ‘ஹரேடி ஆண்கள் தங்கள் ஹரேடி வாழ்க்கை முறையை சமரசம் செய்துகொள்ளாமல் இஸ்ரேலிய ராணுவத்தில் மதிப்புமிக்க பதவிகளில் பணியாற்ற உதவும் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறது,’ என்று கூறுகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களில், ஹரேடி யூதர்களுக்கு கட்டாய ராணுவத்தில் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது மற்ற இஸ்ரேலிய பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, நெட்ஸா யெஹூதா துருப்புக்கள் 2007-இல் யூத பாலைவனத்தில் உள்ள பழங்கால மலைக் கோட்டையான மசாடாவில் பிரார்த்தனை செய்கின்றனர்

நெட்ஸா யெஹூதா தோன்றிய வரலாறு

கடந்த 1999-ஆம் ஆண்டு, 30 ஹரேடி வீரர்களைக் கொண்ட முதல் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஹரேடிகளை ராணுவத்தில் அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்த பொதுமக்கள் அமைப்பின் பெயரால் இப்படை ‘நஹல் ஹரேடி’, ‘நெட்சா யெஹுதா’ அல்லது ‘பட்டாலியன் 97’ என்று பெயரிடப்பட்டது.

இஸ்ரேலிய ராணுவம் முதல் ஹரேடி போர் படைப்பிரிவினை உருவாக்கி, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீனப் பகுதியான மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா மற்றும் ஜெனின் ஆகிய நகரங்களில் செயல்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில், ஹீப்ரு செய்தித்தாளான ‘யெடியோத் அஹ்ரோனோத்’, இஸ்ரேலிய ராணுவம் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை ரமல்லாவிலிருந்து ஜெனினுக்கு மாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தது.

இந்த மாற்றம் ‘தொடர் தோல்விகள்’ அமல்படுத்தப்பட்டது என்று அச்செய்தித்தாள் தெரிவித்தபிறகு, ஒரு இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், அம்மாற்றம் ‘செயல்பாட்டுக் காரணங்களுக்காக’ செய்யப்பட்டது என்று கூறினார்.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர்

நெட்ஸா யெஹூதா படையில் எத்தனை வீரர்கள் உள்ளனர்?

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குக் கரையில் இருந்த நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை இஸ்ரேல் பட்டாலியனை இடம் மாற்றியது. ஆனாலும் இந்த மாற்றம் அப்படை வீரர்களின் நடத்தை காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறிவருகிறது.

அதிலிருந்து இப்படை இஸ்ரேலின் வடக்கில் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாளின் ஓர் அறிக்கையின்படி, காஸாவில் நடக்கும் போரில் இந்தப் படைப்பிரிவு சண்டையிடத் தொடங்கியது.

லெபனான், சிரியா மற்றும் காஸாவில் நெட்சா யெஹூதா படையினரை உள்ளடக்கிய ‘க்ஃபிர்’ (Kfir) படை சண்டையிடும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி அவிவ் கொச்சாவி கூறினார்.

தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர்.

இந்தப் படைப்பிரிவின் வீரர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் மொத்தம் இரண்டு ஆண்டுகள் 8 மாதங்கள் பணியாற்றுகின்றனர்.

‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தித்தாளின் அறிக்கையின்படி, இந்தப் படையின் ஆண் வீரர்கள், பெண் துருப்புகளுடன் தொடர்பு கொள்வதில்லை. மேலும் அவர்களுக்கு தொழுகை மற்றும் மதநூல்கள் படிப்பதற்கு கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, போஸ்டரில் இருப்பவர் 79 வயதான பாலஸ்தீன-அமெரிக்கர் உமர் அசாத். இவரை நெட்ஸா யெஹூதா படையினர் கொலை செய்ததாகக் குற்றம் எழுந்தது

அமெரிக்கா ஏன் பொருளாதாரத் தடை விதிக்க நினைக்கிறது?

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 79 வயதான பாலத்தீன-அமெரிக்கர் உமர் அசாத்தை நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் உறுப்பினர்கள் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒரு சோதனைச் சாவடி அருகே கைது செய்யப்பட்டார். ஆசாத்தின் குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் அவரது கைகளை மற்றும் வாயைக் கட்டி, தரையில் கிடத்தியதாகக் கூறினர். பின்னர் அவர் தரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை விசாரித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், இதனை “படைகளின் தார்மீக தோல்வி, அவர்களது தவறான முடிவு, மற்றும் மனித கண்ணியத்தின் மதிப்பை கடுமையாக பாதிக்கும் செயல்,” என்று அறிவித்தன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் தளபதி கண்டிக்கப்பட்டார். அப்படையின் நிறுவனத் தளபதி மற்றும் சிப்பாய்களின் படைப்பிரிவு தளபதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படையின் வீரர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை அவர்களை விசாரிக்காமலேயே மூடப்பட்டது.

பாலத்தீன குடிமக்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களில் அப்படையினர் ஈடுபட்டதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நெட்ஸா யெஹுதா படைப்பிரிவினை விசாரிக்கத் துவங்கியது. இந்த விசாரணைகளில் உமர் அசாத் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும் என்று ‘ஹாரெட்ஸ்’ செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காஸா பகுதியை இஸ்ரேலிய ராணுவம் தாக்கத் துவங்கியதில் இருந்து, பாலத்தீனர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, தனிப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக அமெரிக்கா மூன்று தடைகளை விதித்துள்ளது.

இஸ்ரேல், பாலத்தீனம், யூதர்கள், நெட்ஸா யெஹூதா, மனித உரிமை மீறல், அமெரிக்கா, போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது

அமெரிக்கா அமல்படுத்த விரும்பும் லேஹி விதிகள் என்றால் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அமெரிக்க உதவி செய்வதை லேஹி விதிகள் தடை செய்கிறது.

தடை செய்யப்பட்ட உதவி வகைகளில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பயிற்சித் திட்டங்களும் அடங்கும்.

இத்தகைய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அரசாங்கங்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டால், அமெரிக்க வெளிநாட்டு உதவி மீண்டும் துவங்கப்படலாம்.

லேஹி விதிகள் “வெளிநாட்டுப் படைப்பிரிவுகள் தீவிர மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதுபற்றி நம்பத்தகுந்த தகவல் இருந்தால், அப்படைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் நிதிக்கும் பொருந்தும்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது.

அமெரிக்கா கொண்டுவர விரும்பும் விசாரணைகளில் அரசியல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிற பிரச்சினைகளும் அடங்கும்.

அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பொது மற்றும் ரகசியப் பதிவுகளை மதிப்பாய்வு செய்வர்.

அமெரிக்க அரசாங்கம் ‘சித்ரவதை, சட்டத்தை மீறிய கொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுவது மற்றும் சட்டத்தின் போர்வையில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றை தீவிர மனித உரிமை மீறலாகக் கருதுகிறது. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்படும்போது லேஹி விதிகள் அமலுக்கு வரும்.

1990-களின் பிற்பகுதியில் இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது.