பாலாறு அழியப் போகிறதா? கடும் அச்சத்தில் விவசாயிகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

காணாமல் போகும் பாலாறு
  • எழுதியவர், சுஜாதா
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பாலாற்றினால் தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள், நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.

பாலாற்றின் துணை நதிகளாக மலட்டாறு, பொன்னையாறு, சேயாறு, கள்ளாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக (வட ஆற்காடு மாவட்டம்) ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டம்தான் அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. மேலும் தென்னை, வாழை, கரும்பு, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டிருக்கின்றன.

அத்தகைய சிறப்பு வாய்ந்த பாலாற்றில், பல்வேறு கழிவுகள் கலப்பதால் மோசமான நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேலூர் தொகுதி மக்களின் இந்த முக்கியப் பிரச்னை வரப்போகும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

பாலாற்றில் கலக்கப்படும் கழிவு நீர்

காணாமல் போகும் பாலாறு

பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

குறிப்பாக வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள், உதயந்திரம் பேரூராட்சியின் 15 வார்டுகள், ஜாப்ரபாத், கிரிசமுத்திரம், வளையம்பட்டு ஊராட்சிகளின் ஒட்டு மொத்த கழிவுநீரும் பாலாற்றில்தான் விடப்படுகிறது.

இதுமட்டுமின்றி பாலாற்றின் படுகையில் உள்ள மேலும் சில கிராம ஊராட்சிகளில் இருந்தும் நேரடியாக கழிவு நீர் பாலாற்றில் விடப்படுகிறது. இதேபோல குப்பைகள், தோல் கழிவுகள், மருத்துவக் கழிவுகளையும் கொட்ட பாலாற்றைப் பயன்படுத்துவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்திய புற்றுநோயைக் கண்டறியும் சோதனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 541 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அசோகன் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தோல் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதிகளில் பெண்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலாற்றை நம்பியுள்ள நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்

காணாமல் போகும் பாலாறு

தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் எதிர்ப்பைக் கடந்து 22 தடுப்பணைகளை ஆந்திரா அரசு கட்டியுள்ளது. அதையும் தாண்டி பாலாற்றில் தமிழக விவசாயிகளுக்காக ஆர்ப்பரித்து வரக்கூடிய தண்ணீரில் இதுபோன்ற பொருட்கள் கொட்டியும் தீயிட்டுக் கொளுத்துவதாலும் பாலாறு முற்றிலும் மாசடைகிறது என்கின்றனர் இந்தப் பகுதி விவசாயிகள்.

பாலாற்றில் நடக்கும் இந்த விதிமீறல் தொடர்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் அசோகன் பிபிசியிடம் பேசினார்.

“தமிழகத்தில் 222 கி.மீ. பாய்கின்ற பாலாற்றை நம்பி நாலரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. ஆனால் இப்போது இந்தப் பகுதியில் விவசாயம் பல மடங்கு குறைந்துவிட்டது.”

பாலாற்றில் உள்ள குரோமியம் கழிவுகளை ஆய்வு செய்து எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறியக்கூட இதுவரை நீர்வளத்துறை அமைச்சகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாலாற்றில் உள்ள தண்ணீரில் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு கலந்துள்ளது. அதை சரி செய்ய தமிழக அரசு எப்போது முன் வரும் என்று தெரியவில்லை என்கிறார் அசோகன்.

“சில வருடங்களுக்கு முன்புவரை பாலாற்றில் எப்பொழுதுமே மணலுக்கு அடியில் ஊற்று வந்து கொண்டிருக்கும். ஆனால் இன்று இந்தப் பகுதியில் அதிக மணல் அள்ளப்படுகிறது. இது நிலத்தடி நீரை மேலும் குறைக்கிறது.“

இதனால் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெற்றிலைக்குப் புகழ்பெற்ற ஆம்பூர்

காணாமல் போகும் பாலாறு
படக்குறிப்பு,

வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உறுப்பினர் அசோகன்.

நெல் விவசாயம் தவிர, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் வெற்றிலை விவசாயம் நடந்த நிலங்கள் அனைத்தும் இப்போது வளமிழந்து பயன்பாடில்லாமல் இருப்பதாக ஆம்பூர் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

”இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து, சராசரியாக ஒரு வீட்டில் ஐந்து கால்நடைகள் இருந்த நிலை மாறி வெகு சில வீடுகளில் மட்டுமே கால்நடைகளை மக்கள் வளர்க்கின்றனர்.”

பாலாற்றில் தண்ணீர் மாசடைந்துள்ளதால், புகழ்பெற்ற ஆம்பூர் சீரக சம்பா அரிசி விவசாயமும் தற்போது இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட தேங்காய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி முதல் செங்கல்பட்டு வரை பாலாற்றின் படுகையில் இருந்த விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வணிகப் பயன்பாட்டு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முல்லை.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதியை ஒதுக்கி பாலாற்றைக் காப்பாற்றவில்லை என்றால் காலப்போக்கில் பாலாறு காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார் அசோகன்.

அவரது கூற்றுப்படி, பாலாற்றில் 28 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அளவீடுகளை வைத்துக்கொண்டு இதுவரை 10 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. “இன்னும் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டினால், வெள்ளம் ஏற்படும்போது வரும் தண்ணீரைச் சேமித்து பாலாற்றில் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். அதனால் விவசாயமும் இந்தப் பகுதியில் வளம் பெறும்.”

காணாமல் போகும் பாலாறு

தொன்மையான ஆறு

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் முல்லை பிபிசியிடம் பேசியபோது, “பாலாறு இருக்கின்ற ஆறுகளிலேயே மிகவும் தொன்மையானது. பாலாற்றை நம்பித்தான் குடிநீருக்காக இருக்கிறோம். ரயில் நீர் என்று சொல்லி கோடிக்கணக்கான நீரை சதுரங்கப்பட்டணத்திற்குப் பக்கத்தில் இருந்து எடுத்து வருகிறார்கள்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பாலாற்றில் இருந்துதான் தண்ணீரை உபயோகம் செய்து வருகின்றனர்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பாலாறு. ஒரு லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அளிக்கிறது. பாலாற்றைப் பாதுகாத்தால் மட்டும்தான் தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். கூட்டுக் குடிநீரை சென்னை வரை எடுத்துக்கொண்டு போனது அனைத்துமே ரசாயனம் கலந்த தண்ணீர். அனைத்து கழிவுகளும் பாலாற்றில் கலக்கப்படுகிறது.

கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து வரக்கூடிய உபரி நீரைச் சேமித்து வைப்பதற்காக தற்பொழுது தடுப்பணை கட்டி வருகின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் வராது.

காவிரிக்கு ஒப்பந்தம் போட்டது போன்று ஆந்திரா அரசுடன் தமிழக அரசு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஒப்பந்தம் போட வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

வாணியம்பாடி நகராட்சியிடம் இந்தப் பிரச்னை தொடர்பாக கருத்து கேட்டபோது, 37 கோடி ரூபாய்க்கு 83 கி.மீ. தொலைவில் 7 இடங்கள் கண்டறியப்பட்டு ஆறு மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கான இரண்டு ஏக்கர் இடம் வேண்டி மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்தது.

மேலும் வாகனங்களில் சேமிக்கப்படும் மலக்கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதற்காக 49 லட்சம் மதிப்பீட்டில் வளையம்பட்டு பகுதியில் 30 எம்எல்சி (Mlc) கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு, 10 எம்எல்சி தற்பொழுது முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் பாலாறு

துரைமுருகனின் பதில்

பாலாற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பிபிசியிடம் பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோபாலகிருஷ்ணன், “நகராட்சிகளுக்கு கழிவுநீரை வெளியேற்ற வேறு வழியில்லாததால் பாலாற்றில் கொட்டுகின்றனர். ஆனால் இப்போது ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் பாதாள சாக்கடை திட்டம் வரவுள்ளது.

ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாணியம்பாடியில் இதற்கான பணிகள் பேச்சுவார்த்தை அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” கூறினார்.

தோல் கழிவுகள் தொடர்பான கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்னையைக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

“பாலாற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலரசம்பட்டி, கோவிந்தம்பாடி, செம்பாக்கம், அரும்பருத்தி, பொய்கையில் இறையன்காடு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட உள்ளது. கோட்டாறு பகுதி ஆறு தடுப்பணைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

அதில் தற்போது வரை மூன்று தடுப்பணைகளின் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள மூன்று தடுப்பணைகளின் பணி நடந்து வருவதாக வேலூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் பிபிசியிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாலாறு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதிகளின் அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக” தெரிவித்தார்.

காணாமல் போகும் பாலாறு

பாலாறு மேம்பாடு தொடர்பாகப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பாலாற்றில் மழை அதிகம் பெய்தால் மட்டுமே வெள்ளம் வரும். மற்ற நேரங்களில் பாலாறு, காலியாகத்தான் இருக்கும். தென்பெண்ணையாற்றில் வெள்ளம் வரும்பொழுது, வெள்ளநீர் சாத்தனூருக்குச் சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது.

அப்படிப் போகிற வெள்ளத்தின் ஒரு பகுதியை காக்கங்கரை ஏரிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து கால்வாய் மூலமாகப் பாலாற்றில் சேர்த்து விட்டால் வருடம் முழுவதும் பாலாற்றில் நீர் இருக்கும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்,” என வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசினார்.