சீனப் பொருளாதாரத்தில் பதற்றம்: இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுமா?

சீனா ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், யான் சென்
  • பதவி, பிபிசி சைனீஸ்

1978-ல் சீனா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கி சீர்திருத்தத்தை தொடங்கியதிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9% ஆக உள்ளது.

உலகளாவிய வளர்ச்சி இஞ்சினாக ஆகியிருந்த சீன பொருளாதாரத்தின் மீது கோவிட் 19 பெருந்தொற்று தாக்கத்தை ஏற்படுத்தியபோது அது பல தசாப்தங்களில் மிகக்குறைந்த வளர்ச்சியை பதிவு செய்தது. அதாவது 2020 இல் வளர்ச்சி விகிதம் 2.2% ஆக இருந்தது.

இது அடுத்த ஆண்டு 8% க்கும் அதிகமாக உயர்ந்தது. ஆனால் 2022 இல் 3% மட்டுமே வளர்ச்சி இருந்தது.

எனவே சீனா இப்போது குறைவான வளர்ச்சியின் நீண்ட காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளதா?

பொருளாதாரத்தில் என்ன தவறு இருக்கலாம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இதன் பொருள் என்ன என்பது பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளுக்கான விடைகளை இங்கே கோடிட்டுக் காட்டுகிறோம்.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

1. சீனப் பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

2023 இல் தனது பொருளாதாரம் 5.2% வளர்ச்சியடைந்ததாக சீனா ஜனவரி மாதம் அறிவித்தது. வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் உலகின் சிறந்த பொருளாதாரங்களில் இந்தியாவிற்கு அடுத்தபடியான விகிதம் இது. சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட ஐந்து மடங்கு பெரியது.

ஆனால் நாட்டிற்குள் மக்கள் வேறுவிதமாக உணர்கிறார்கள்: ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 2023-ல் சீனாவிலிருந்து அந்நிய முதலீடு வெளியேற்றம் இருந்தது; இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 20% க்கும் அதிகமாக உயர்ந்தது; மற்றும் பங்குச் சந்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.

தங்கள் நாட்டின் வீழ்ச்சி அடைந்துவரும் பொருளாதாரம் குறித்து சீன மக்கள் சிலர், சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெய்போ சமூக தளத்தில் கடந்த ஆண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

“நீண்ட காலமாக வேலையில்லாமல் கடனில் இருப்பதால் உதவி வேண்டும்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பதிவு பங்குச் சந்தையில் பணத்தை இழப்பது பற்றியது. “ஷாங்காய் பங்குச்சந்தையை தகர்க்க அமெரிக்க அரசு சில ஏவுகணைகளைத் தருமா” என்று தான் யோசிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பல கருத்துக்கள் பின்னர் நீக்கப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு சீனாவின் பலவீனமான மீட்சிக்கான காரணம், பல நாடுகளைப் போலல்லாமல் சீனா வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மிகத்தீவிரமான கொள்கைகளை பின்பற்றவில்லை” என்று டச்சு வங்கியான ஐஎன்ஜியின் கிரேட்டர் சீனாவுக்கான தலைமை பொருளாதார நிபுணர் லின் சாங் கூறுகிறார்.

அமெரிக்கா போன்ற பிற நாடுகள் கோவிட் நிவாரணத்திற்காக மீட்பு திட்டங்களை செயல்படுத்தின. அமெரிக்காவின் 1.9 டிரில்லியன் டாலர் திட்டம் வேலையில்லாதவர்களுக்கு ஆதரவையும், தொற்றுநோய் காலகட்டத்தில் சிறு வணிகங்கள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு கூடுதல் ஆதரவையும் வழங்கியது.

“சீனாவின் பொருளாதாரக்கொள்கை முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக சீனாவில் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனால் பொருளாதார மீட்சி பலவீனமாக உள்ளது,” என்று சாங் விளக்குகிறார்.

இன்னும் கட்டப்படாத அல்லது முடிக்கப்படாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பல சீனர்கள் பணம் கொடுத்துள்ளனர்

UBS முதலீட்டு வங்கியின் வாங் தாவோ, பலவீனமான மீட்சியின் பின்னணியில் உள்ள மற்றொரு முக்கிய காரணத்தை சுட்டிக்காட்டுகிறார். “சீனா அதன் வரலாற்றில் மிக மோசமான நில விலை வீழ்ச்சியின் மத்தியில் உள்ளது,” என்றார் அவர்.

“சீனாவில் குடும்பங்களின் 60% சொத்து, வீட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் மற்றும் வீடுகளின் விலைகள் குறையும் போது மக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், செலவு செய்ய பயப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக பெரிய வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது என்பது தெளிவான அறிகுறியாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை நிலம் மற்றும் வீட்டுவசதி சந்தை அளிப்பதால், அதில் உள்ள சிக்கல்கள் பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெரிய கட்டுமான நிறுவனங்கள் கடனாகப் பெறக்கூடிய தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை 2021 ஆம் ஆண்டு அதிகாரிகள் அறிமுகப்படுத்தியதில் இருந்து இந்தத் தொழில் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுமானத்துறை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும், கடன் பத்திரங்களை வழங்குவதன் மூலமும், இன்னும் கட்டுமானம் துவக்கப்படாத புதிய வீடுகளை விற்பதன் மூலமும் புதிய திட்டங்களுக்கு நிதி திரட்டி வந்துள்ளது.

இந்த வணிக மாதிரி பல நாடுகளில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் சீனாவின் டெவலப்பர்கள் அதிக லாபம் ஈட்டுகிறார்கள். அதிக பணம் கடன் வாங்குகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் பல பெரிய வீடு கட்டுமான டெவலப்பர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

பல சீனர்கள் இந்த டெவலப்பர்களுக்கு இன்னும் கட்டப்படாத அல்லது பாதி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முன்பணம் செலுத்தியுள்ள நிலையில் அவர்கள் தங்கள் பணத்தை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். இது சிலருக்கு அவர்களின் வாழ்நாள் சேமிப்பாகும்.

உள்கட்டமைப்பை உருவாக்க கோடிக்கணக்கில் கடன் வாங்கி, வருமானம் ஈட்ட நில விற்பனையை நம்பியிருக்கும் உள்ளூர் அரசுகளும் அதிக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

அவர்களின் கடன் 92 டிரில்லியன் யுவான் (12.6 டிரில்லியன் டாலர்கள் ) ஆக உள்ளது. 2019 இல் சீனாவின் பொருளாதார உற்பத்தியில் 62.2% ஆக இருந்த இது 2022-ல் 76% ஆக உயர்ந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.

”ஆனால் சீனாவின் பொருளாதாரம் நிச்சயமாக நெருக்கடியில் இல்லை” என்கிறார் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் மூத்த பொருளாதார நிபுணர் டியான்சென் சூ.

2010 களில் சீனாவின் வளர்ச்சியில் ’முன்கூட்டிய கடன்’ மூலம் விரைவான விரிவாக்கம் ஏற்பட்டது. மேலும் வீட்டு விலைகள் அதிகரித்தன. உள்கட்டமைப்பு வளர்ச்சியடைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

“சீனா அந்த மாதிரியில் இருந்து தன்னை மறுசீரமைத்துக்கொள்வதால், ஒரு திருத்தம் தவிர்க்க முடியாதது,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

”ஒரு பெரிய இயந்திரம் சோர்வுடன் இயங்குவது போலவும், மேலும் அதன் பாகங்களில் சில விரிசல்கள் தோன்றத் தொடங்குவது போலவும் இது தெரிகிறது,”என்றார் அவர்.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

2. சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவை விஞ்சுமா?

2010 ஆம் ஆண்டில் சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவின் அடிப்படையில், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஆனபோது, அமெரிக்காவை அது விஞ்சிவிடும் என்று கணிப்புகள் செய்யப்பட்டன. பெரும்பாலானவர்கள் அது நடப்பதற்கு சிறிது காலமே ஆகும் என்று நினைத்தனர்.

ஏனென்றால் சீனாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார விரிவாக்கம் இருந்தது: 2010 வரையிலான இரண்டு தசாப்தங்களில், சீனா இரண்டு காலகட்டங்களில் இரட்டை இலக்க வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்தது: 1992-1995 மற்றும் 2003-2007.

2028 க்குள் சீனா அமெரிக்காவை முந்திவிடும் என்று சிலர் மதிப்பிட்டனர். ஆனால் வேறு சிலர் அதற்கு 2032 ஆகும் என்று வாதிட்டனர்..

ஆனால் இப்போது பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும் நிலையில் சீனாவால் இதை சாதிக்க முடியுமா?

“முடியும். ஆனால் அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு இது சாத்தியமில்லை” என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் உள்ள ’ செண்டர் ஆன் காண்டெம்பரரி சைனா அண்ட் தி வேர்ல்ட்’ (CCCW) வின் நிறுவன இயக்குநரும், வாஷிங்டன் டிசி யில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் உள்ள சீன மையத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் லி செங் கூறினார்.

டியான்சென் சூ இன்னும் நேரடியான பதிலை அளிக்கிறார்: 2040 களில் இது நடக்கும் என்று அவர் கூறுகிறார்.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தலின் முடிவு உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்கிறது என்று பேராசிரியர் லீ குறிப்பிட்டார்.

“அமெரிக்காவிற்கு நிலைமை அவ்வளவு சுமுகமாக இல்லை. மோசமான பாகுபாடுகள், இனப் பதற்றங்கள், குடியேற்றக் கொள்கை போன்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பல நிச்சயமற்ற நிலைகள் அங்கு உள்ளன.”

“சீனாவைப் பொறுத்தவரை, புதிய நன்மைகள் உருவாகியுள்ளன. எடுத்துக்காட்டாக, இது சில ஆண்டுகளில் மின்சார கார் துறையில் முன்னணியில் உள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.”

“ஆனால் சீனாவிற்கு மோசமான செய்தி அதன் வயதான சமூகம். ஒப்பீட்டளவில் சீனாவை விட அதிகமான பிறப்பு விகிதமும், தொழில் துறைக்கு துணைபுரியும் புலம்பெயர்ந்த மக்களையும் கொண்ட அமெரிக்கா, மிகவும் குறைவான அழுத்தத்தில் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள SAIS சீனா உலகளாவிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்ட்ரூ மெர்தா, சீனத் தலைமைக்கும் இது பற்றி சந்தேகம் இருக்கலாம் என்று கருதுகிறார்.

“பொருளாதாரம் தடம் புரளும் அபாயத்தின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவை விஞ்ச சீனா விரும்பாமலும் இருக்கலாம்.”

“மதிப்பிடப்பட்டுள்ள குறைந்த வளர்ச்சி விகிதம், வீட்டுவசதி நெருக்கடி மற்றும் விநியோகச் சங்கிலிகளின் உலகளாவிய மறுசீரமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சீனத் தலைமை ரிஸ்க் எடுக்கத்தயாராக இருக்காது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடும் தைரியமான பொருளாதார முன்முயற்சிகளை எடுக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.”

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

3. சீனாவிற்கு என்ன விளைவுகள் ஏற்படக்கூடும்?

எதிர்மறையான நம்பிக்கை அதிகரிப்பது, பொருளாதாரத்தை பின்னுக்கு இழுக்கிறது என்று சாங் கருதுகிறார். நம்பிக்கையின்மையானது, முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது. இது பெருநிறுவன லாபங்களைக் குறைக்கிறது. அது நிலம் மற்றும் வீடுகள் துறையில் குறைந்த விலைகளில் பிரதிபலிக்கிறது. பலவீனமான நம்பிக்கைக்கு இது ஊட்டமளிக்கிறது.

“இதிலிருந்து வெளிவர ஆதரவுக் கொள்கைகள் தேவை.”

உள்நாட்டு அதிருப்தியை திசை திருப்ப சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவான் மீது படையெடுப்பார் என சிலர் அஞ்சுகின்றனர்.

சுயஅதிகாரம் கொண்ட தைவானை ஒரு பிரிந்த மாகாணமாக சீனா பார்க்கிறது. பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டில் அது வரவேண்டும் என்று நினைக்கிறது.

“இது முட்டாள்தனமானது. ஆனால் மக்களை ஒன்றிணைத்து வைக்க இத்தகைய பயமுறுத்தும் மிரட்டல்கள் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று பேராசிரியர் மெர்த்தா குறிப்பிட்டார்.

“தைவான் மீது போரை விரும்பும் எவரும் அதாவது சீனா, அமெரிக்கா அல்லது தைவானில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இதுபற்றி கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் போர் உக்ரேனிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்,” என்று பேராசிரியர் லீ எச்சரிக்கிறார்.

“இது முதலாவது செயற்கை நுண்ணறிவு AI போராக இருக்கலாம். இது முழுக்க முழுக்க உயர்தொழில்நுட்பம் கொண்ட இயந்திரத்துடன் இயந்திரம் மோதும் போராக இருக்கும்.”

“தைவான் சீனாவின் முக்கிய பிரச்சனை என்பது உண்மை. ஆனால் சீனத் தலைமையும் போர் தனது கடைசி முயற்சி என்பதை அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் பொருளாதார தேக்கநிலை என்பது அதற்கு போதுமான காரணம் அல்ல.”

4. மந்தநிலை உலகப் பொருளாதாரத்தின் மீது என்ன விளைவை ஏற்படுத்தும்?

பொருட்கள், சீன சுற்றுலா மற்றும் புவிசார் அரசியல் ஆகிய மூன்று வழிகளில் இது உலகைப் பாதிக்கும் என்று டியான்சென் சூ நினைக்கிறார்.

“முதலாவதாக, பொருட்களின் முக்கிய இறக்குமதியாளராக சீனா இருப்பதால் மந்தநிலையால் அதன் தேவை குறையும். குறிப்பாக இரும்புத் தாது மற்றும் பாக்சைட் போன்ற கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தேவை குறையும்.

“இரண்டாவதாக, சீன சுற்றுலாப் பயணிகள் பின்வாங்குவது முக்கிய சுற்றுலா இடங்களை பாதிக்கும். வெளிநாட்டு சுற்றுலா, தொற்றுநோய்க்கு முந்தைய உயரத்திற்கு திரும்புவதற்கு போராடும்.”

“மூன்றாவதாக மந்தநிலையானது குறிப்பாக உள்நாட்டில் பொது நிதி நெருக்கடியுடன் இணைந்திருந்தால், அது உதவி மற்றும் அதிகாரபூர்வ கடன் வழங்கல் மூலம் புவிசார் அரசியலை வடிவமைக்கும் சீனாவின் திறனைத் தடுக்கும்.”

கடந்த தசாப்தத்தில், பல முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தன் உலகளாவிய இருப்பை நிலைநிறுத்துவதற்காக சீனா, பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை (பிஆர்ஐ) துவக்கியது. சீனா 152 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்தது.

சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் BRI திட்டம் அதை “கடன் பொறியில்” சிக்க வைத்தது என்றும் BRI மூலம் பல குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் வழங்கும் முதல் நாடாக சீனா ஆகியுள்ளது என்றும் சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இருதரப்பு கடன் வழங்கும் மிகப்பெரிய நாடு சீனா என்று 2022 இல் உலக வங்கி அறிக்கை கூறியது.

மார்ச் மாதம் தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) அமர்வின் போது ஷி ஜின்பிங் அளித்த சமீபத்திய முதலீட்டு உறுதிமொழி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது.

சீனாவின் பொருளாதார மந்தநிலையை பார்க்கும்போது பெரிய அளவிலான வெளிமுதலீடு நிலையானது அல்ல என்பதை இது காட்டுகிறது.

ஆனால் மந்தநிலை இருந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரத்தின் மாபெரும் அளவானது, அதை உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராக ஆவதற்கு அனுமதிக்கும் என்று சாங் வலியுறுத்துகிறார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வளர்ச்சியில் 20% அல்லது அதற்கும் அதிகமாக சீனா பங்கு வகிக்கக்கூடும்.”

5. சீனா மீண்டும் அதிவேக வளர்ச்சி நோக்கி செல்லமுடியுமா?

சீனா தனது பொருளாதார மாற்றத்தை உயர்தரம் கொண்ட வளர்ச்சியாக ஆக்கி, மதிப்பு கூட்டப்பட்ட ஏணியில் முன்னேறிச் செல்வதே அடுத்த கட்டம் என்று சாங் நம்புகிறார்.

“கொள்கை வகுப்பாளர்கள் இதை வலியுறுத்துவதையும், நீண்ட கால முன்னுரிமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதையும் (தேசிய மக்கள் காங்கிரஸின்) இரண்டு அமர்வுகள் காட்டியது. இது சீனா அடுத்த கட்டத்திற்கு மாற முடியுமா என்பதை இறுதியில் தீர்மானிக்கும்.”

இந்த பரிந்துரைகளை டியான்சென் சூ முன்வைக்கிறார்.

“நிலம் மற்றும் வீட்டு விலை வீழ்ச்சி நெருக்கடியை மிகவும் பொறுப்புடன் கையாள்வதே சீனாவுக்கு இப்போது மிகமுக்கிய பணியாகும்.

“இரண்டாவதாக, அது பொருளாதாரத்தின் சப்ளையின் பக்கம் கவனம் செலுத்துவதை விட, தேவையில் கவனம் செலுத்த வேண்டும்.

“சீனா பொருளாதாரத்தின் மேலும் பல பிரிவுகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாராளமயமாக்க வேண்டும். ஒரு தசாப்தத்திற்கும் மேலான நிதி விரிவாக்கத்திற்குப் பிறகு, பொது நிதிகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நிதி சீர்திருத்தத்தை தொடர வேண்டும்.”

இதற்கிடையில், NPC இல் நிர்ணயிக்கப்பட்ட 5% மொத்த உள்நாட்டு வளர்ச்சி இலக்கை அடைவதில் சீனத் தலைமை கவனம் செலுத்தும் என்று சாங் நம்புகிறார்.

“ஓரளவு அதிக ஆதரவளிக்கும் நிதிக் கொள்கை இலக்குகளை நாம் பார்த்தாலும் 2024 வளர்ச்சி இலக்கை அடைவதற்கு, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இன்னும் அதிக ஊக்கக் கொள்கைகளின் தேவை உள்ளது,” என்றார் அவர்.