நாடாளுமன்றம்

நேரலை

விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. ‘விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார்’ – ஓ.பி.ரவீந்திரநாத்

    விஜய்யுடன் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் ஓ பி ரவீந்திரநாத்

    Copyright: BBC

    தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை செய்து வருகிறார். அடுத்த கட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதை ஆசை என்று சொல்ல முடியாது. லட்சியம் என்று கூறலாம். அந்த பாதையில் அவர் பயணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்து தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில் தேனி தொகுதியில் அவருக்கு இடம் கிடைக்காதது குறித்து கேட்ட போது, “டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை என்று தற்போது திமுக வேட்பாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன் கடந்த காலங்களில் கூறியுள்ளார். தேனி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் அவர். நான் வேறு, அவர் வேறு என்று பிரித்து பார்க்க வேண்டாம்” என்றார்.

  2. விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை

    விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா

    Copyright: X/@thirumaofficial

    Image caption: விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது விசிக.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கிடக் கோரி தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பொதுத் தேர்தல்களில் 1% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை ஒதுக்கவில்லை.

    ஆனால் 2014, 2019ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் 1% க்கு அதிகமான வாக்குகள் பெற்றுள்ளத்தை சுட்டிக் காட்டி விசிக டெல்லி உயரீநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை இன்று மதியம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுக கோரிய பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

    நாம் தமிழர் கட்சி கோரிய கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாமல் அந்தக் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  3. ‘கடைசியா எச்சரிக்கிறேன் – இத்தோட நிறுத்திக்கணும்’ – திமுக பேச்சாளரை எச்சரித்த துரைமுருகன்

    திமுக துரைமுருகன்

    Copyright: BBC

    வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நடைபெற்ற அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தார்.

    திமுக பேச்சாளரான இவர் கடந்த ஆண்டு குஷ்பூ மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து பேசிய பேச்சு சர்ச்சையாகியது. இதையடுத்து இவரை கட்சியை விட்டு திமுக நீக்கியது. இந்த விவகாரத்தில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    இதன் பிறகு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுகள் சமூக ஊடகத்தில் வைரலானது. இவரது முந்தைய பேச்சுகளை எடுத்து மீம்களாக பலரும் பகிர்கின்றனர்.

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் திமுகவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற நேற்றைய பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரையும், தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் பேசினார்.

    இதை மேடையில் வைத்தே அமைச்சர் துரைமுருகன் கண்டித்தார்.

    அப்போது பேசிய துரைமுருகன், “யாராக இருந்தாலும் கண்ணியமாக பேச வேண்டும். இத்தோட பேச்சை நிறுத்திக்கணும். கடைசியா எச்சரிக்கிறேன். இப்போது, பேசியதற்கே உன்னை கட்சியில் இருந்து மீண்டும் நீக்கியிருக்கணும்,” என்று திமுக பேச்சாளரை துரைமுருகன் கடுமையாக கண்டித்தார்.

  4. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது – தேர்தல் ஆணையம் பதில்

    மதிமுக துரை வைகோ பம்பரம் சின்னம்

    Copyright: DURAIVAIKO/FACEBOOK

    நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.

    திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

    இது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் தேர்தல் விதிகளின்படி இரண்டு தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடுவதாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாததாலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலமாக மதிமுக தரப்பு வழக்கறிஞர்களுக்கு தெரிவித்துள்ளது.

    கடந்த 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்.

    “உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” துரை வைகோ பேசியிருந்தார்.

    தற்போது சின்னம் கிடைக்காத நிலையில், வேறு சின்னத்திலோ, உதய சூரியன் சின்னத்திலோ போட்டியிட வேண்டிய நிலை மதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது மீண்டும் முறையிடுவோம் என மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனால், வேறு சின்னத்தில் போட்டியிடும் திட்டம் உள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

  5. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய கழுத்தில் மிளகாய் மாலையுடன் வேட்பாளர் வந்தது ஏன்?

    வேட்புமனு தாக்கல் செய்ய கழுத்தில் மிளகாய் மாலையுடன் வேட்பாளர் வந்தது ஏன்?

    நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு

    Copyright: BBC

    Image caption: கழுத்தில் மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

    கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

    கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்பு அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தேர்தல் விதிமுறையின் படி மிளாகாய் மாலையை கழட்டி விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வருமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டுக்கு பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து பிச்சை கேட்க விட்டுவிடுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக மிளகாய் மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாக கூறினார்.

  6. ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்கள் மூலம் விரைவில் தாயகம் திரும்ப ஏற்பாடு

    முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்

    Copyright: UGC

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழரான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

    இதையடுத்து இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தனியாக அடையாள அட்டை தேவையில்லை எனக் கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

  7. பிறந்த குழந்தை முதல் மூதாட்டி வரை அனைவருக்கும் 5 பவுன் தங்கம் தர வாக்குறுதி – யார் இவர்?

    பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை அனைவருக்கும் 5 பவுன் தங்கம் தருவதாக வேட்பாளர் வாக்குறுதி

    நாடாளுமன்ற தேர்தல்

    Copyright: BBC

    Image caption: 5 பவுன் தங்கம் – சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

    தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை அனைவருக்கும் 5 பவுன் தங்கம் வழங்கப் போவதாக வேட்பாளர் ஒருவர் நூதன வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்தின்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. பிரதான அரசியல் கட்சிகளைத் தாண்டி சுயேச்சைகளும் பல இடங்களில் அதிகளவில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துரைசாமி என்பவர் சுயேச்சையாக போட்டியிட நடனம் ஆடியபடியே வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தான் வெற்றிபெற்றால் பிறந்த பெண் குழந்தையிலிருந்து மூதாட்டி வரை அனைவருக்கும் ஐந்து பவுன் தங்கம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

  8. பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக மனு – தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

    மதிமுக பம்பரம் சின்னம் வைகோ

    Copyright: DURAIVAIKO/FACEBOOK

    நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையத்தில் விதிகளின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே கேட்கும் சின்னம் ஒதுக்க முடியும்.

    14 ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து மதிமுக நீக்கப்பட்ட நிலையில், அக்கட்சி போட்டியிடும் தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் கேட்டு மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியுமா என்பதை இன்று முடிவு செய்யவுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    பம்பரம் சின்னம் பொது சின்னங்களின் பட்டியலில் உள்ளதா என்பதை பார்த்து விட்டு, மதிமுகவுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க முடியுமா என்பதை மதியத்திற்கு நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பம்பரம் சின்னத்தில் தான் இம்முறை போட்டியிடுவோம் என மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்திருந்த நிலையில், சின்னம் ஒதுக்குவது தொடர்பான தீர்ப்பு இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  9. ‘தேனியில் திமுக வெற்றி பெறாவிட்டால் ராஜினாமா செய்வேன்’ – அமைச்சர் இப்படி பேசியது ஏன்?

    தேனி தொகுதி அமைச்சர் பி. மூர்த்தி

    Copyright: பி. மூர்த்தி

    திமுக கூட்டணியில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சி சார்பாக தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

    இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற போது அதில் தமிழ்நாடு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டார்.

    வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின் போது மேடையில் பேசிய அமைச்சர் மூர்த்தி, தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    “தேனியில் வெற்றி பெற முடியாவிட்டால், மறுநாளே என் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்வேன்,” என்று பேசினார்.

    2019ஆம் ஆண்டு இங்கு மட்டும் தோல்வியை தழுவினோம். அதனால் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று என்னை தலை நிமிர வையுங்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எனக்கு இரவில் தூக்கமே வருவதில்லை, என்று திமுக நிர்வாகிகள் முன்னிலையில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    அமைச்சர் பி.மூர்த்தி ராஜிநாமா செய்வேன் என்று பேசிய பேச்சு தற்போது பேசு பொருளாகியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய உரையில் தேனியை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

    “தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். தேனியில் வந்து ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் உங்களோடு தங்குகிறேன்,” என்று தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும் திமுக தோல்வியை தழுவி இருந்தது.

    இம்முறையும் தேனி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுகவும், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர்.

  10. சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்பட்டது

    தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்த பணம்

    Copyright: BBC

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன்படி தேர்தல் பறக்கும் படைகள், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்து செல்லும் போது அதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கின்றன.

    இந்த நடவடிக்கையின் போது ஊட்டிக்கு சுற்றுலா வந்த 2 வடமாநில தம்பதிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதில் ஒரு தம்பதி பணத்தை திரும்பித் தருமாறு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், விடுமுறையை கழிக்க கோவை விமான நிலையத்திலிருந்து, ஊட்டிக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்கள் ரொக்கமாக வைத்திருந்த 69,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    சுற்றுலாவுக்காக இந்த பணத்தை வைத்திருப்பதாக அவர்கள் கூறிய நிலையில், ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் மறுத்தனர்.

    இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்துள்ளனை உறுதி செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை சரிபார்த்த பிறகு 69,400 ரூபாயை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல கொல்கத்தாவிலிருந்து கடந்த 22ஆம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த மற்றொரு தம்பதியிடம் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொழி பிரச்னை காரணமாக இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனே திருப்பி அளிக்க முடியாத நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு பிறகு பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டார். அதன்படி கொல்கத்தா தம்பதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அதை எப்படி மீட்பது என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

  11. வட சென்னையில் வேட்புமனு தாக்கலின் போது திமுக – அதிமுக மோதலால் பாஜகவுக்கு என்ன பிரச்னை?

    வட சென்னையில் வேட்புமனு தாக்கலின் போது திமுக – அதிமுக மோதலால் பாஜகவுக்கு என்ன பிரச்னை?

    திமுக அதிமுக சேகர்பாபு ஜெயக்குமார் வாக்குவாதம்

    Copyright: UGC

    நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் இன்று ஆர்வம் காட்டினர்.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்ற குழப்பம் நீடித்தது.

    தேர்தல் அதிகாரியின் அறையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒரே நேரத்தில் முறையிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு நிலவியது.

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக வேட்பாளரின் டோக்கன் எண் இரண்டு. எங்களுக்கு பிறகு தான் அதிமுக டோக்கன் வாங்கியது. அவர்களுடைய டோக்கன் எண் ஏழு. நாங்கள் தான் முதலில் வந்தோம். அதனால் திமுக வேட்பாளரின் வேட்புமனுவை முதலில் வாங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் சொன்னோம்,” என்றார்.

    அதிமுக சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அணி நிர்வாகி இன்பதுரை, தேர்தல் அதிகாரியின் அறையில் என்ன நடந்தது என்று விளக்கம் அளித்தார்.

    “தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த அடிப்படையில், முதலில் வரும் கட்சிகளுக்கு தான் முன்னுரிமை அளித்து வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிமுக வேட்பாளர் தான் முதலில் அங்கு வந்தார். அதே போல திமுக சொல்லும் டோக்கன், வேறு ஒரு வேட்பாளர் வாங்கியது. அதிமுகவுக்கு பிறகு தான் திமுக வேட்பாளரின் டோக்கன் வரிசை எண் வரும். திமுகவின் டம்மி வேட்பாளருக்கு வாங்கிய வரிசை எண்ணை பயன்படுத்து அமைச்சர் சேகர் பாபுவும், சென்னை மேயர் பிரியாவும் உள்ளே நுழைந்தார்கள். மேலும் விதிகளை மீறி ஒரே நேரத்தில் 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அறையில் இருந்தார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.”

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் தான் முதலில் வந்ததாகவும், பினாமி வேட்பாளரின் டோக்கனை பயன்படுத்தி திமுக முதலில் உள்ளே சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    அதிமுக, திமுக இடையே யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்ற பிரச்னை நடந்து கொண்டிருந்ததால், பாஜக வேட்பாளரான தன்னால் சரியான நேரத்திற்கு மனுத்தாக்கல் செய்ய முடியவில்லை என்று பாஜக சார்பாக வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால் கனகராஜ் தெரிவித்தார்.

  12. ராதிகா சரத்குமார்: “விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை”

    Video content

    Video caption: ராதிகா சரத்குமார்: “விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை”

    விருதுநகர் தொகுதியை தான் தேர்ந்தெடுக்கவில்லை, கட்சிதான் தேர்ந்தெடுத்தது என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

  13. தமிழ்நாட்டில் களைகட்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    அதிமுக ஓபிஎஸ்

    Copyright: BBC

    முன்னாள் மத்திய இணை அமைச்சரான பாஜகவைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக இன்று அவர் வழங்கினார்.

    பாஜக பொன். ராதாகிருஷ்ணன்

    Copyright: BBC

    பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பாக தர்மபுரி தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் சௌமியா அன்புமணி. முன்னதாக இந்த தொகுதியில் வேறு வேட்பாளர் போட்டியிடுவதாக பாமக அறிவித்திருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு அன்புமனி ராமதாஸின் மனைவியான சௌமியா களமிறக்கப்பட்டார்.

    பாமக சௌமியா அன்புமணி தர்மபுரி

    Copyright: BBC

    இதற்கான தனது வேட்புமனுவை இன்று துரை வைகோ தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், தனக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி துரை வைகோ சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மதிமுக துரை வைகோ

    Copyright: BBC

    தேமுதிகவின் முன்னாள் பொதுச் செயலாளரான விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர், விருதுநகர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி உடன் சென்றிருந்தார்.

    தேமுதிக அதிமுக விஜய பிரபாகர்

    Copyright: BBC

    அதிமுக சார்பாக கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்த்து கோவையில் இவர் களம் காண்பதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கோவை அதிமுக வேட்புமனு தாக்கல்

    Copyright: BBC

  14. கிருஷ்ணகிரி – தபால் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றம் உத்தரவு

    சென்னை உயர் நீதிமன்றம்

    Copyright: BBC

    2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிட்டு அசோக்குமார் 96, 050 வாக்குகள் பெற்று 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன் 95, 256 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான தபால் வாக்குகள் முறையான காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாகவும், அவற்றை மறு எண்ணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் திமுக வேட்பாளர் செங்குட்டுவன்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா, அதிமுக வேட்பாளர் வெற்றி தொடர்பாக நிராகரிக்கப்பட்ட 605 வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்,” எனவும் தனது உத்தரவில் நீதிபதி பி.டி.ஆஷா குறிப்பிட்டுள்ளார்.

    நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் எண்ணி, அதுதொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவி குறிப்பிடப்பட்டுள்ளது.

  15. நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாகன பேரணி தடுத்து நிறுத்தம்

    நாம் தமிழர்

    Copyright: BBC

    கோவையில் நாம்தமிழர் கட்சி வேட்பாளரின் வாகனப் பேரணி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    கோவையில் இன்று அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன் அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி காளப்பட்டியில் இருந்து வாகன பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்.

    இதனையடுத்து அவர்கள் அனைவரும் காளப்பட்டி நால் ரோட்டில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி வாகன பேரணியாக செல்லக்கூடாது என கூறியதால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேர வாக்கு வாதத்திற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

    பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் மீண்டும் நேரு நகர் பகுதியில் போலீசாரால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வாகனம் மற்றும் உடன் வந்தவர்களின் வாகனங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாகனமாக அனுப்பி வைக்கப்பட்டது.

  16. மோதியை தரக்குறைவாகப் பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

    அனிதா ராதாகிருஷ்ணன்

    Copyright: BBC

    பிரதமர் நரேந்திர மோதியை தரக்குறைவாகப் பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

    கடந்த 22 ம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசும்போது பிரதமர் நரேந்திர மோதியை தரக்குறைவாகப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் காணொளி பரவியது.

    இது தொடர்பாக பாஜகவினர் அமைச்சர் மீது கண்டனம் தெரிவித்து வந்தனர் .

    இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்தரங்கதன் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மீது 294 பி பிரிவின்படி மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  17. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு நேயர்களை வரவேற்கிறோம். இந்திய நாடாளுமனறத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் வெளியிடுகிறோம்.