கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்காக இந்தியா – அமெரிக்கா இடையே உரசல்

கேஜ்ரிவால் கைது

பட மூலாதாரம், Getty Images

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.

முதலில் ஜெர்மனி தற்போது அமெரிக்கா என உலக நாடுகள் அவரது கைது குறித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன. இந்தியா, இந்த இரு நாடுகளின் அதிகாரிகளையும் வரவழைத்து, இது உள்நாட்டு விவகாரம் என்று கூறி அவர்கள் கருத்து தெரிவித்ததை கண்டித்துள்ளது.

தங்களது தூதரக அதிகாரியை அழைத்துக் கண்டித்தது குறித்தும் அமெரிக்கா தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

“நியாயமான, நேர்மையான, வெளிப்படையான நீதி விசாரணையை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது” என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது உட்பட அனைத்து விவகாரங்களையும் உற்று கவனிப்போம்” என்றார்.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கு ஒன்றில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது.

அமெரிக்கா என்ன சொன்னது?

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “தேர்தல் நேரத்தில் பிரச்சார பணிகளை சிரமமாக்கும் வகையில் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் முழுமையாக அறிவோம்.” என்றார்.

கடந்த வாரம் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ரூ.14 லட்சம் வரி பாக்கி தொடர்பான வழக்கில் கட்சியின் ரூ.285 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அமெரிக்க தூதரக அதிகாரியை இந்திய அரசு வரவழைத்தது குறித்து மேத்யூ மில்லரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “தனிப்பட்ட வகையிலான அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து நான் எதுவும் கூற போவதில்லை. நியாயமான நேர்மையான வெளிப்படையான நீதி விசாரணை நடைமுறைகளுக்காக காத்திருப்போம் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படி ஒரு நடைமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம். நியாயமான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து யாருக்கும் எதிர்ப்பு இருக்க முடியாது என்று கருதுகிறோம். இந்த விஷயத்தை தனிப்பட்ட சந்திப்புகளிலும் கண்டிப்பாக தெளிவுபடுத்துவோம்” என்றார்.

கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி கூறியது என்ன?
படக்குறிப்பு,

அமெரிக்கா எல்லாவற்றையும் உற்று கவனித்து வருவதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்க தூதரக அதிகாரி க்லோரியா பாப்பேனாவை வரவழைத்து, கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றது.

புதன்கிழமை, ஜெர்மனி வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், மீண்டும் ஒரு முறை அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து கேட்ட போது, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

“நாங்கள் இதற்கு ஏற்கெனவே பதிலளித்து விட்டோம்” என்றார். இரு நாட்டுக்கு இடையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் குறித்து பொதுவெளியில் தகவல்கள் தெரிவிக்க முடியாது என்று கூறிய அவர், இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கு இடையிலான நல்லுறவை பேணுவது தங்கள் விருப்பமாகும் என்றார்.

இந்த ஆண்டு அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் தயாராகின்றன. “இந்திய அரசமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உறுதி செய்கிறது. நட்புறவு கொண்ட நாடு என்ற வகையில், அவற்றை நாங்கள் மதிக்கிறோம்” என்றார்.

கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI

இந்தியா என்ன கூறியது?

அமெரிக்கா கூறிய கருத்து குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவில் உள்ள சில சட்ட நடைமுறைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஒரு நாடு மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் உள் விவகாரங்களை மதிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகம். இந்தியாவின் சட்ட செயல்முறைகள் ஒரு சுயாதீனமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டது. இது எந்த சார்பும் இன்றி சரியான நேரத்தில் முடிவுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. அதை கேள்வி கேட்பது நியாயமற்றது” என்றார்.

கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி கூறியது என்ன?

பட மூலாதாரம், X/MEAIndia

கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி கூறியது என்ன?

கேஜ்ரிவாலுக்கு நியாயமான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று ஜெர்மனியும் கேட்டிருந்தது. இதை விரும்பாத இந்தியா, ஜெர்மன் தூதரக அதிகாரி ஜார்ஜ் என்ச்வேலரை வரவழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தது.

ஜெர்மன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர், “இந்த விஷயத்தை நாங்கள் அறிவோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இந்த வழக்கிலும் நிலைநிறுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு வழக்கை எதிர்கொள்பவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சட்ட சலுகைகளும் கேஜ்ரிவாலுக்கு கிடைக்க வேண்டும்.” என்றார்.

கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி கூறியது என்ன?
படக்குறிப்பு,

ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ட்ஸ்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது குறித்த தனது அறிக்கையில், “இது போன்ற கருத்துகள் எங்கள் நீதித்துறை நடைமுறைகளில் தலையீடாகவும், எங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளன” என்று தெரிவித்திருந்தது.

மேலும், “இந்தியா சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயகமாகும். பிற ஜனநாயக நாடுகளை போலவே, இந்தியாவிலும் சட்டம் அதன் கடமையை செய்யும். இது குறித்த ஒரு சார்பான அனுமானங்கள் மிகவும் நியாயமற்றவை” என்று கூறியிருந்தது.

இருப்பினும், ஜெர்மனி இப்போது தனது நிலைப்பாட்டை சற்று மென்மையாக்கிக் கொண்டது. புதன்கிழமை, ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியாவுடனான ஒத்துழைப்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். பரஸ்பர நம்பிக்கை நிறைந்த சூழலில் ஒன்றிணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது என்றார்.

நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

இந்தியாவில் உள்ள பலர், அமெரிக்காவின் நிலைப்பாடு தேவையற்றது என்று கூறுகின்றனர். இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் துருக்கி, பிரான்ஸ், ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர் கன்வல் சிபல், “ஜெர்மனி கூறிய கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த பிறகும் அமெரிக்கா தனது கருத்தை பதிவு செய்தது. எனவே இந்தியா தனது கருத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது.

இல்லையென்றால், ஜெர்மனியையும் அமெரிக்காவையும் இந்தியா வெவ்வேறு மாதிரி நடத்துவதாக புரிந்து கொள்ளப்படும். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை மிகவும் பொருத்தமான வார்த்தைகளில் உள்ளது.” என்று பதிவிட்டிருந்தார்.

கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி கூறியது என்ன?

பட மூலாதாரம், X/kanwalsibal

அதே நேரத்தில், மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லானி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழு உலகளாவிய தெற்கை நோக்கி ஆக்கிரமிப்பு மற்றும் இழிவான நடத்தையை எவ்வாறு பின்பற்றக்கூடாது என்பதை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று நம்புகிறார்.

அவர் X தளத்தில் , “உலக அளவிலான தெற்கிடம் எவ்வாறு இழிவாக நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை பைடன் குழு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துடனான சமீபத்திய மோதல் ஒரு உதாரணம் மட்டுமே. 2022 ஆம் ஆண்டில், உக்ரைன் மோதலில் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்காவிட்டால் “அதற்கான விலை கொடுத்து மற்றும் விளைவுகளையும்” சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை அச்சுறுத்தியது.

கேஜ்ரிவால் ஏன் கைது செய்யப்பட்டார்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதுபான ஊழல் வழக்கில் கேஜ்ரிவால் முக்கிய ‘சதிகாரர்’ என்று அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏழு முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

டெல்லியில் மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.