இலங்கையில் 2009 – 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவின் போது பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தர பண்டார வலியுறுத்தினார்.
இது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்று வியாழக்கிழமை (7) பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே. அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி முறைகேடுகளை ஆராய நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது முறைப்பாடு இதுவாகும். குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு நிலக்கரி கொள்வனவிற்கான டெண்டர் கோரப்பட்ட போது, மிகக்குறைந்த விலையான 60 டொலருக்கு மெட்ரிக் டொன் ஒன்றினை வழங்க முன்வந்த நிறுவனத்தைப் புறக்கணித்துவிட்டு, மூன்றாவது இடத்திலிருந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ஜோன் செனவிரத்ன மற்றும் முக்கிய அரசியல் தரப்புகளின் அழுத்தம் காரணமாகவே விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு மெட்ரிக் டொன்னுக்கு சுமார் 10 டொலர் வீதம் அரசாங்கத்திற்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கியமை, கப்பல் தாமதக் கட்டணங்களை அறவிடத் தவறியமை மற்றும் பருவக்காற்று காலங்களில் நிலக்கரியை தரையிறக்க முடியாமல் இந்தியாவிற்கு மீள விற்றபோது அந்தப் பணத்தை முறையாகப் பெற்றுக்கொள்ளாமை போன்ற பல மோசடிகள் இதன்போது இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ஷ போன்றவர்களின் தலையீடுகளாலேயே இவ்வாறான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது. இந்த விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக அடுத்த ஆறு மாதங்களுக்குள் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.