ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவுக்கு நேற்று (02) வவுனியா வடக்கு பிரதேச தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசக்கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
இந்நிலையில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இந்த அஞ்சலி நிகழ்வில், தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் வரலாற்றுக் குறிப்புக்களும் பகிரப்பட்டது. அத்தோடு தேனிசை செல்லப்பா அவர்களது பாடலும் இதன்போது பாடப்பட்டு அவருக்கு இசை அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது